பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,700 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் நேற்று நடைபெற்ற மகளிர் மல்யுத்தம் 50 கிலோ பிரிஸ்டைல் பிரிவில் இந்தியா சார்பில் களமிறங்கிய வினேஷ் போகத், கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் என்பவருடன் மோதி நேரடியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறி இருந்தார். ஆனால் தற்போது, அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் எடை 100 கிராம் அதிகமாக இருப்பதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவில் பேரதிர்ச்சியை எழுப்பி உள்ளது.
வினேஷ் போகத் தகுதி நீக்கத்திற்கு முன்பாக தனது உடல் எடையைக் குறைக்க பல்வேறு உடற்பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். அதனால் அவர் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா, இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் அவருக்குத் துணையாக இருப்பதாகவும் வினேஷ் போகத்துக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே பல்வேறு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் எனப் பலரும் வினேஷ் போகத்துக்கு சமூக வலைதளங்களில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சமந்தா, பார்வதி, டாப்சி ஆகியோரைத் தொடர்ந்து தற்போது, பாலிவுட் திரைப்பிரபலங்கள் பலரும் வினேஷ் போகத்துக்கு சமூக வலைதளங்களில் ஆறுதல் தெரிவித்துள்ளனர். கரீனா கபூர், “வாழும் லெஜண்ட்” எனக் குறிப்பிட்டுள்ளார். விக்கி கௌஷல், “பதக்கங்களுக்கு அப்பாற்பட்ட வெற்றியாளர்” எனக் குறிப்பிட்டுள்ளார். நடிகை ஹூமா குரேஷி, “ஏதாவது செய்ய முடியும் என்று சொல்லுங்கள். வினேஷ் போகத்தை போட்டியிட அனுமதிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். நடிகை ப்ரீத்தி ஜிந்தா, “டியர் வினேஷ் போகத், நீங்கள் தான் இந்தியர்களின் தூய தங்கம். சாம்பியன்களின் சாம்பியன், இந்தியாவின் அனைத்து பெண்களுக்கும் ஒரு ஹீரோ. உங்களுக்கு நேர்ந்தது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். வாழ்க்கை எப்போதும் நியாயமானதாக இருக்காது. கடினமான நேரம் நீண்ட காலம் நீடிப்பதில்லை. ஆனால் கடினமான மனிதர்கள் நிலைத்திருப்பார்கள். நம்பிக்கையோடு இருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.