![arunraja kamaraj speech in label movie press meet](http://image.nakkheeran.in/cdn/farfuture/m9X-DD8MVbkz5rNQcknNlXIYs6uoi6wM4AoV90l0BjY/1699537904/sites/default/files/inline-images/137_30.jpg)
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் 'லேபில்'. இந்தத் தொடரில் கதாநாயகியாக தன்யா ஹோப் நடித்துள்ள நிலையில் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முத்தமிழ் படைப்பகம் தயாரித்துள்ள இந்தத் தொடருக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். திரைக்கதையை இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுத, கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதியுள்ளார். இவர் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு கவனம் பெற்ற ஸ்வீட் பிரியாணி குறும்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீரிஸ் நவம்பர் 10 ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 7 மொழிகளில் ஒளிபரப்பாகவுள்ளது.
இந்த நிலையில் இந்த சீரிஸின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஜெய், அருண்ராஜா காமராஜ், ஜெயச்சந்திர ஹாஷ்மி உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டு படம் பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்தனர். அப்போது அருண்ராஜா காமராஜ் பேசியதாவது, “லேபில் என் மூன்றாவது படம். ஒவ்வொன்றிலும் கற்றுக்கொண்டு வருகிறேன். இதில் என்னை ஈஸியாக வைத்துக்கொண்டவர் ஒளிப்பதிவாளர் தினேஷ். அவர் தான் எனக்காகச் சேர்த்து உழைத்தார். எனக்குக் கிடைத்த கிஃப்ட் அவர். அவருக்கு நன்றி. இந்த சீரிஸில் வேலை பார்த்த அனைவரும் என்னை மிகவும் நம்பினார்கள், எல்லோரும் சினிமாவில் சாதித்தவர்கள், அவர்கள் தரும் உழைப்பைச் சரியாக எடுத்துக்கொண்டாலே போதும்.
இந்த சீரிஸ் நன்றாக உருவாக காரணம், என் டைரக்சன் டீம் தான். என்னையே அவர்கள் தான் பார்த்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு நன்றி. ஜெய் இந்த படைப்பின் மூலம் நண்பராகக் கிடைத்துள்ளார். இதற்கு முன் வேட்டை மன்னனில் அஸிஸ்டெண்டாக இருந்த போது அவர் நடிகராக இருந்தார், இப்போது அவரை இயக்கும்போது எனக்காகக் கூடுதலாக உழைத்தார், நன்றி. எங்கள் டீமில் நிறைய இழப்பு நேர்ந்திருக்கிறது அதைத்தாண்டி, உங்களுக்காக இந்த சீரிஸை உருவாக்கியுள்ளோம். உங்கள் கைதட்டல்களில் தான் எங்கள் மகிழ்ச்சி இருக்கிறது. உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன், நன்றி” என்றார்.