இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சேரன், ஸ்ரீபிரியங்கா, லால், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தமிழ்க்குடிமகன்'. லக்ஷ்மி க்ரியேஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் அமீர், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது பேசிய அமீர், "ஒரு இசை வெளியீட்டு விழா இன்றைய காலகட்டத்தில் எதற்கு நடக்கிறதென்று சொன்னால், இசையமைப்பாளரிடம் பேசிய போது சொன்னார், ஒரு கவர்னர் போல உட்கார வைச்சிருக்காங்க, அதுக்கு மேல ஒண்ணுமில்லை என்றார். உண்மையான நிலை அது தான்.
இசை வெளியீட்டு விழாவின் நோக்கமே, படம் பற்றி வெளியில் பேசப்பட வேண்டும். அப்போ இசையமைப்பாளர் பற்றி பேசுவது அல்ல முக்கியம். படம் பற்றி பேச வேண்டும். ஏனென்றால் சாம் சி.எஸ் இசையைப் பற்றி பேச மக்கள் தயாராக இருக்கின்றனர். அவர்களின் பார்வைக்கு வைச்சிருக்கோம். இனி அவர்கள் பார்த்து கொள்வார்கள். அந்த அடிப்படையில் இசையமைப்பாளர் கூட கவர்னர் மாதிரி தான். அது ஒரு அதிகாரமில்லாத பதவியாக இருந்தாலும் கூட, வெளியுலகத்தில் பரபரப்பாகத் தான் இருக்கிறார். கவர்னர் அவர் வேலையை செஞ்சுக்கிட்டே தான் இருக்கிறார். சாமானியன் குரலை கூட தடுக்கிறார். மைக்கை ஆஃப் பண்ண சொல்கிறார். அதனால் சாம் சி. எஸ் சொன்ன கருத்து சரியானது தான். அதில் மாற்று கருத்து கிடையாது.
ஒரு சினிமா படம் எடுத்துவிட்டால் சாதி ஒழிஞ்சு விடுமா என்ற கேள்வி எல்லோரிடத்திலும் இருக்கு. ஒரு பெயரை நினைவுபடுத்த வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கு. மாரி செல்வராஜ், மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் தேவர் மகன் குறித்து பேசும் போது, அதில் வருகிற இசக்கி கதாபாத்திரம் தான் மாமன்னன் எடுப்பதற்கு காரணம் என சொன்னார். அதே போல தான் இந்த இசக்கி கார்வண்ணன்குள்ளேயும் ஒரு இசக்கி இருக்கிறார். தென் மாவட்டத்தை சார்ந்த இசக்கி ராஜா என்பவர். அவர் யூட்யூபில் ஒரு வீடியோ போட்டுள்ளார். அதில் ரொம்ப தரக்குறைவான வார்த்தைகளால் கடும் சொற்களால் சினிமா காரர்களை திட்டினார். இறுதியாக ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற ஆட்கள் படம் எடுத்து தான் பிரச்சனையை ஏற்படுத்துகிறார்கள். நாங்கள் அண்ணன் தம்பியாக தான் பழகி வருகிறோம் என்று முடிக்கிறார்.
அவர் சொன்ன கருத்தில் ஒரு வகையில் உடன்பாடு இருந்தது. ஒரு சினிமாக்காரன் தான் நாட்டை நாசமாக்கியதாக சொன்னால், ஒரு வேலை அதிகாரத்தில் இருந்தவர்களை வைத்து இவர் சொல்லியிருப்பார் என நினைத்து கொள்ளலாம். ஆனால் இந்த வார்த்தையை பயன்படுத்தும் போது தான் தெரிகிறது, ஏன் தேவர் மகன், சின்ன கவுண்டர் வரும் போது வரவில்லை. அப்போதெல்லாம் நீங்க சொல்லியிருக்க வேண்டும். உங்களால் தான் சாதி சண்டை வருகிறதென்று.
மாரி செல்வராஜ், ரஞ்சித் சொல்வதை மக்கள் காது கொடுத்து கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். அதை அவர்கள் ஆபத்தாக உணர்கிறார்கள். அதனால் அந்த வார்த்தைகள் வருகிறது. அது தான் இங்க பிரச்சனை. மாரி செல்வராஜ் அவருடைய எந்த படத்திலும் யாரையும் சண்டைக்கு கூப்பிடவில்லை. என்னை ஏன் இப்படி நடத்துறீங்க அப்படினு கேட்கிறார். அந்த கேள்வி தான் ரொம்ப முக்கியமானது. அந்த அடிப்படையில்தான் இந்த படமும் பேசும் என்று நினைக்கிறேன்" என்றார்.