தனுஷ் இயக்கத்தில் புதுமுகம் பவிஷ் நாராயண்(தனுஷின் சகோதரி மகன்), அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்டோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. இப்படத்தை தனுஷ் இயக்கியது மட்டும் இல்லாமல் தயாரித்தும் இருக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் வருகிற 21ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்.ஜே.சூர்யா, அருண் விஜய், இயக்குநர்கள் செல்வராகவன், கஸ்தூரி ராஜா, விக்னேஷ் ராஜா, ராஜ்குமார் பெரியசாமி, தமிழரசன் பச்சமுத்து, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் எஸ்.ஜே.சூர்யா பேசுகையில், “இந்தப் படத்தை நான் பார்த்துவிட்டேன் சூப்பராக வந்திருக்கிறது. ட்ரெய்லரில் வரும் ஜாலியா வாங்க ஜாலியா போங்க என்ற வசனம் போல் அழகாக வந்திருக்கிறது.
திரைத்துறையில் நடிகர்கள் பற்றாக்குறை இருக்கிறது. அதற்கு தனுஷ் ஒரு பட்டாளத்தையே தயார் செய்து அனுப்பி வைத்துள்ளார். நான் சொல்வது சிலருக்கு மிகைப்படுத்திச் சொல்வதாகத் தெரியலாம். இருந்தாலும் சொல்கிறேன். என் மனசில் பட்டதை சொல்வதில் என்னக்குமே நான் தயங்கியதில்லை. ஒரு காலத்தில் பாலச்சந்தர் சாரும் அனந்து சாரும் சேர்ந்து பண்ணுவதை இன்று தனுஷ் ஒற்றை ஆளாக செய்திருக்கிறார். அவருடைய ரைட்டிங் ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது. பெரிய பெரிய தத்துவத்தை அசால்டாக சொல்லியிருக்கிறார்.
ஒரு மேம்பட்ட கதையை இன்றக்கு இருக்கும் படங்களுடைய மனநிலையை அதில் இருக்கும் எமோஷனை பிரமாதமாகப் படமாக்கியிருக்கிறார். ஒரே சமயத்தில் இரு வேறு விதமான கதைக்களங்களைக் கொண்ட படங்களை எடுக்கும் இயக்குநராகவும், ஹாலிவுட் வரைக்கும் சென்ற தலைசிறந்த நடிகராகவும் விளங்குகிறார். இந்தப் படத்தை குஷி பார்த்த மாதிரி என்ஜாய் பண்ணி பார்த்தேன். படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்றார்.