சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த மாதம் 5ஆம் தேதி வெளியான படம் ‘புஷ்பா 2 - தி ரூல்’. இப்படத்தின் சிறப்பு காட்சி, படம் வெளியாவதற்கு முந்தைய நாளான 4ஆம் தேதி ஹைதராபாத்திலுள்ள சந்தியா திரையரங்கில் இரவு திரையிடப்பட்டது. அப்போது, அங்கு அல்லு அர்ஜூன் திடீரென சென்றதால், அவரை பார்க்க ரசிகர்கள் முண்டியடுத்து கொண்டு சென்றனர். அந்த கூட்ட நெரிசலில் ரேவதி (39) என்ற பெண் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் படுகாயமடைந்து மயக்கமான நிலையில் கீழே விழ, பின்பு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 14 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அந்த சிறுவன் கடந்த மாதம் 18ஆம் தேதி மூளைச்சாவடைந்தார். இப்போது கோமாவில் இருக்கிறார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
முன்னதாக அந்த பெண் இறந்ததை தொடர்ந்து அல்லு அர்ஜூன் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டு கைதானார். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் கொடுக்கப்பட்ட நிலையில் கைதான அன்றே அவருக்கு நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால ஜாமீன் கொடுக்கப்பட்டது. பின்பு ஜாமீனில் வெளியே வந்தார். அவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவருக்கு வழக்கமான ஜாமீனும் கிடைத்தது. அவர் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் அறிவித்தார்.
இந்த நிலையில் கோமாவில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனை அல்லு அர்ஜூன் காவல் துறை அனுமதியுடன் மருத்துவமனைக்கு சென்று பார்த்துள்ளார். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மருத்துவமனையில் அல்லு அர்ஜூன் 20 நிமிடங்கள் இருந்த நிலையில் சிறுவனின் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து பின்பு கிளம்பினார். அவருடன் தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் அல்லு அர்ஜூனின் தந்தை அல்லு அரவிந்தும் உடன் சென்றிருந்தனர்.