கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நித்யா மெனன், ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காதலிக்க நேரமில்லை’. ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் யோகி பாபு, வினய், லால், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இப்படம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் முதற்கொண்டு வெளியான அனைத்து போஸ்டர்களிலும் நித்யா மெனன் பெயரை முதலில் குறிப்பிட்டு அடுத்ததாக ஜெயம் ரவி பெயரை படக்குழு குறிப்பிட்டு வருகின்றனர்.
இந்தப் படத்தில் இருந்து ஏற்கனவே ‘என்னை இழுக்குதடி...’, ‘லாவெண்டர் நேரமே...’, ‘இட்ஸ் பிரேக் அப் டா...’(IT'S A BREAK-UP DA) ஆகிய மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளது. இதில் ‘என்னை இழுக்குதடி...’ பாடல் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்ட நிலையில் ஜெயம் ரவி விழாவிற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் பேசியதாவது, “இந்த படம் எனக்கு ஒரு ஸ்பெஷலான படம். ஏனென்றால் முதல் முறை ஒரு பெண் இயக்குநர் இயக்கத்தில் நடித்திருக்கிறேன். அதுவே ஒரு புது அனுபவமாக இருந்தது. இத்தனை நாள் ஒரு ஆண் இப்படித்தான் இருப்பான் என ஆண் கண்ணோட்டத்தில் இருந்து நடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் கிருத்திகா உதயநிதியின் பார்வை வேறுமாதிரி இருந்தது. அவங்க சொல்வதை கேட்டு நடித்த போது எனக்கே என் நடிப்பில் ஒரு மாற்றம் தெரிந்தது. கிருத்திகா உதயநிதி எதிர்காலத்தில் ஒரு நல்ல இயக்குநராக வருவார். அவருடைய ரைட்டிங் அருமையாக இருக்கும். எழுத சொன்னால் எழுதிக்கொண்டே இருப்பார். அந்தளவு கிரியேட்டிவாக யோசிப்பார். அவருடன் இந்த படத்தில் வேலை செய்தது ரொம்ப சந்தோஷமான விஷயம்” என்றார். இப்படம் பொங்கலை முன்னிட்டு வருகிற 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.