சுஷாந்த் மரணத்தை தொடர்ந்து பாலிவுட்டில் பல சர்ச்சைகள் உருவாகியுள்ளன. அதில் ஒன்றுதான் பிரபலங்களுக்குள் இருக்கும் போதை பொருள் பழக்கம். சி.பி.ஐ மற்றும் என்.சி.பி பல பிரபலங்களை தொடர்புகொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சுஷாந்தின் காதலியான ரியா சக்ரோபாரதி மற்றும் ரியாவின் சகோதரரை போதை பொருள் பயன்பாடு காரணமாக கைது செய்யப்பட்டு விசாரணை மெற்கொண்டுள்ளது போதை மருந்து தடுப்பு பிரிவு. மேலும், பலருடைய வாட்ஸ் அப் பதிவுகளை வைத்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகை தீபிகாவுக்கும் அவரது மேலாளர் கரிஷ்மா பிரகாஷுக்கும் இடையே நடைபெற்ற வாட்ஸ் அப் உரையாடல் லீக்காகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த உரையாடலில் தீபிகா தனது மேலாளரிடம் போதை வஸ்துவை கேட்டிருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில், தீபிகாவின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷிடம் போதை மருந்து தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டனர். இதன் முடிவில் நடிகை தீபிகா படுகோனிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், நடிகைகள் சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோருக்கும் அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். ஃபேஷன் டிசைனர் சிமோன் கம்பட்டாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த போதை பொருள் விவகாரத்தில் சுஷாந்தின் காதலி ரியா, ரியாவின் சகோதரர் ஷௌவிக், சுஷாந்தின் மேலாளர் சாமுயல் மிரண்டா, தனிப்பட்ட உதவியாளர் திபேஷ் சாவந்த் உள்ளிட்ட 16 பேரை போதை மருந்து தடுப்புப் பிரிவு போலீஸார் இந்த வழக்கில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் பல சர்ச்சைகளை எழுப்பி வரும் நடிகை கங்கனாவுக்கு மட்டும் ஏன் போதைபொருள் தடுப்பு வாரியம் சம்மன் அனுப்பவில்லை என்று நக்மா கேள்வி எழுப்பியுள்ளார். அதில், “தான் போதைப் பொருள் உட்கொண்டதாக ஒப்புக்கொண்ட கங்கனாவுக்கு ஏன் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பவில்லை? நடிகைகளின் வாட்ஸ்-அப் சாட் அடிப்படையில் மட்டும்தான் அவர்கள் சம்மன் அனுப்புவார்களா? அந்த தகவலை ஊடகங்களுக்கு கொடுத்து நடிகைகளின் பெயரை கெடுப்பதுதான் என்சிபியின் வேலையா?” என்று தெரிவித்துள்ளார்.