இயக்குநர் பொன்வண்ணன்- நடிகை சரண்யா இணையரின் மகள் திருமணத்திற்கு வருகை தந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். திருமண விழாவுக்கு வந்திருந்த நக்கீரன் ஆசிரியர் உள்பட பலரிடமும் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின், சற்று தள்ளி ஒருவர் நின்று கொண்டிருப்பதைக் கவனித்துவிட்டார்.
உடனே அவரை தன் அருகில் அழைத்து, நக்கீரன் ஆசிரியரிடம், “இவர் என்னோடு குறிஞ்சி மலர் டி.வி. நாடகத்தில் நடிச்சவரு'' என்று தோழமையுடன் குறிப்பிட்டார். முதல்வர் சுட்டிக்காட்டியது, பழம்பெரும் இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் மகன் வெங்கடேசன்.
30 ஆண்டுகளுக்கு முன் டி.வி. தொடரில் உடன் நடித்ததை முதல்வர் இப்போதும் மறக்காமல் நினைவுபடுத்தி, நமது ஆசிரியர் உள்ளிட்ட பிரபலங்களிடம் அறிமுகப்படுத்தியதைக் கண்டு வியந்து போனார் வெங்கடேசன். முதல்வரின் எளிமையான அணுகுமுறையும் நினைவாற்ற லும் எல்லாரையும் ஆச்சரியப்பட வைத்தது.
குறிஞ்சி மலர் நாடக தொடர் ஒளிபரப்பானபோது தி.மு.க தொண்டர்கள் பலரும் தங்களது குழந்தைகளுக்கு அரவிந்தன் எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள். அந்த நாடகத்தில் ஸ்டாலின் நடித்த கதாபாத்திரம் அரவிந்தன். அந்த பெயரை தான் தொண்டர்கள் தனது பிள்ளைகளுக்கு பெயராக வைத்தனர். குறிஞ்சி மலர் சீரியல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற இவர் தேர்தல் பிரசாரத்திற்குச் சென்ற இடங்களில் எல்லாம் ‘குறிஞ்சி மலர் நாயகனே வருக’ என விளம்பர பேனர்கள் வைத்து, தி.மு.க. தொண்டர்கள் வரவேற்றனர்.