சத்யராஜ் மற்றும் சேரன் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ‘பயாஸ்கோப்’. இப்படத்தை வெங்காயம் பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் இயக்கி நடித்திருக்க அவருடன் இணைந்து மாணிக்கம், வெள்ளையம்மாள், முத்தாய் போன்ற புதுமுகங்கள் படத்தில் நடித்துள்ளனர். சந்திர சூரியன், பிரபு, பெரியசாமி ஆகியோர் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு தாஜ்நூர் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த ஜனவரி 3ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனம் பெற்று வரும் நிலையில், படத்தின் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமாரை நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாகச் சந்தித்தோம். அப்போது அவர் படம் தொடர்பான சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்ததோடு தன்னுடைய திரைத்துறை பயணம் குறிந்து நம்மோடு பகிர்ந்துள்ளார்.
நேர்காணலில் சங்ககிரி ராஜ்குமார் பேசுகையில்,“என்னுடைய வெங்காயம் படம் பெரிய அளவில் பாராட்டப்பட்ட படம். திரையுலைச் சேர்ந்தவர்கள் ஒருபக்கம் இப்படியும் ஒரு படம் எடுக்கலாமா? என பாராட்டிக்கொண்டிருக்க மறுபக்கம் இலக்கியவாதிகள் மற்றும் எழுத்தாளர்களால் நல்ல கருத்து சொல்லக்கூடிய படம் எனக் கொண்டாடினர். வெங்காயம் படம் மக்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கத்தை நக்கீரன் இதழ் ‘வெங்காயம் மக்களுக்கான படைப்பு’ என்ற தலைப்பில் கட்டுரையாக வெளியிட்டது. அதே போல் மற்றொரு பிரபல இதழில் வெங்காயம் படம் எப்படி எடுக்கப்பட்டது என்பதை கட்டுரையாக எழுதியிருந்தனர். இந்த இரண்டு கட்டுரையும் வெவ்வேறு விஷயத்தை சொன்னாலும் ஒரு புள்ளியில் தொடர்புடையதாக இருந்தது. இதை ஒரு அழகான திரைக்கதையாக வடிவமைக்க எனக்கு யோசனை தோன்றி அதிலிருந்து உருவானதுதான் இந்த பயாஸ்கோப் திரைப்படம்.
சினிமாவுக்காக நான் சென்னை வரும்போது என்னுடைய குடும்பமே எனக்கெதிராக நின்றபோது என்னுடைய கனவை நோக்கி ஓடச் சொல்லி உந்துதலாக இருந்தவர் என்னுடைய சித்தப்பா. அப்போது கடவுள் பற்றி இந்த சமூகம் எதைக் கற்றுக்கொடுக்கிறது என்பதைத் தாண்டி அதில் 50% குழப்பமும் தெளிவும் இருக்கக்கூடிய மனநிலையில் இருந்தேன். அந்த நேரத்தில் என்னுடைய சித்தப்பா ஜாதகம் பார்த்துள்ளார். ஜாதகப்படி அவர் பிச்சை எடுத்து ஊர் ஊராகப் பரதேசம் போவார் என்று சொல்லியிருக்கின்றனர். அதன் பிறகு என்னுடைய சித்தப்பா இப்படி தன் வாழ்வில் அவமானப்பட்டு வாழ வேண்டுமா? என்ற மனநிலையுடன் தற்கொலை செய்துகொண்டார். ஜாதகப்படி பார்த்தால் சித்தப்பா பிச்சை எடுத்து ஊர் ஊராகப் பரதேசம் போவதுதான். ஆனால் அவர் தற்கொலை செய்துகொண்டது என்னுடைய குழப்பத்தை முழுமையாகத் தெளிய வைத்தது. அந்த சம்பவத்திற்குப் பிறகு இதுபோன்ற விஷயங்களில் இருந்து மக்கள் விழிப்புணர்வு அடைய ஒரு படைப்பாளியாக என்ன பண்ண முடியும் என யோசித்து உருவானதுதான் வெங்காயம் திரைப்படம்.
என்னுடைய தாத்தா தெருக்கூத்து கலைஞராக இருந்தார். என்னுடைய அப்பா இளைஞராக ஆனபோது தெருக்கூத்துக்கு வரவேற்பு இல்லாமல் போனது. அந்த நேரத்தில் தொலைக்காட்சியில் வரும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி டெக்னிக்களாக வளர்ந்து வந்தது. அதனால் தெருக்கூத்து கலைஞர்களை ஏனமாக பார்க்கக்கூடிய சூழல் உருவானது. நான் தெருக்கூத்து கற்றுக்கொள்ள நினைத்தபோது என்னுடைய தாத்தா நீயாவது வேறு எதாவது தொழில் செய் எனத் திட்டினார். அதனால் நான் மக்களின் ரசனைக்கேற்ப அப்டேட் ஆக வேண்டுமென நினைத்து முதலில் மேடை நாடகத்தில் ஆர்வம் காட்டினேன். அதன் அடுத்தகட்ட முயற்சியாக திரைத்துறைக்குள் போக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அந்த நேரத்தில் சினிமா தொடர்பான படிப்புகள் இருப்பது தெரியாமல் சம்பந்தம் இல்லாத எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் படித்துவிட்டு சென்னை வந்து வேலு பிரபாகரன் சாரிடம் சினிமா கற்றுக்கொண்டு என்னுடைய சினிமா பயணத்தை தொடங்கினேன்” என்றார்.