ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘கேம் சேஞ்சர்’. கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க, எஸ்.ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த் மேகா, அஞ்சலி, நவீன் சந்திரா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடந்தது. இப்படம் அரசியல் சார்ந்து பல விஷயங்களைப் பேசும் படமாக இருக்கும் எனப் பரவலாகச் சொல்லப்படுகிறது. இப்படம் வருகிற பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியகி பலரது கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் இப்படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. இதில் படக்குழுவினருடன் ஆந்திர துணை முதல்வர் மற்றும் நடிகர் பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இருவர் விபத்தில் பலியாகியுள்ளனர். ஆரவ மணிகண்டா மற்றும் தோக்கடா சரண் ஆகிய இருவரும் நிகழ்ச்சி முடிந்து தாங்கள் வந்த பைக்கில் வீடு திரும்பும் போது, எதிரே வந்த வேன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர்கள் இருவருமே இறந்துவிட்டனர். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து இறந்தவர்களின் இரண்டு பேர் குடும்பத்தினருக்கும் ராம் சரண் தலா ரூ.50 லட்சம் வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். அதே போல் தயாரிப்பாளர் தில் ராஜூம் இரண்டு குடும்பத்தினருக்கும் தலா ரூ.50 லட்சம் தருவதாக உத்தரவாதம் அளித்தார். சமீபத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 பட சிறப்பு காட்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்துள்ளார். அவரது மகனும் கூட்ட நெரிசலில் சிக்கி மூளைச்சாவடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.