Skip to main content

நிறம் மாறும் செங்கொடி தேசம் – வியட்நாம் பயணத் தொடர் பகுதி – 9

Published on 27/01/2024 | Edited on 27/01/2024
vietnam-travel-series-part-9

‘வியட்நாம் தேசத்தில் சமத்துவ பாலினம் எனச் சொல்லப்பட்டாலும், அரசு அதிகாரத்தில் பெண்கள் பங்கு மிகமிக குறைவாக இருக்கிறது. வியட்நாமில் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி (விசிபி) ஆட்சி செய்துவருகிறது. வியட்நாம் அரசியலில் இன்னும் ஆண்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். விசிபி பொலிட்பீரோவின் பதினெட்டு உறுப்பினர்களில் ஒருவர் மட்டுமே பெண். 200 மாநிலக்குழு உறுப்பினர்களில், மத்திய குழுவில் (சிசி) 19 பெண்கள் மட்டுமே உள்ளனர். 29 சதவிதம் அளவுக்கு பாராளுமன்றத்தில் பெண்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள். ஆனால் உண்மையான அரசியல் அதிகாரம் பொலிட்பீரோ மற்றும் சி.சி.யிடம் உள்ளது. கருத்துச் சுதந்திரம் அரசியல் சாசனத்தால் பாதுகாக்கப்பட்டாலும், ஆட்சியை, அரசாங்கத்தை விமர்சிக்கவேகூடாது என்கிறது வியட்நாமை ஆளும் அரசும், கம்யூனிஸ்ட் கட்சியும். அரசை விமர்சனம் செய்தார்கள் என்பதற்காக சுமார் 160 பேர் சிறையில் அடைத்துள்ளனர்’ என்கிறது 88 இயக்கம்.

வியட்நாம் குற்றவியல் சட்டம் 1999 பிரிவு 88ன் கீழ், வியட்நாம் ஆட்சிக்கு எதிராக அமைதியாக போராடுவது, பேசுவது, கருத்து தெரிவிப்பது எல்லாம் குற்றம். இந்த சட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு திருத்தப்பட்டது. அதில் குற்றவியல் சட்டத்தின் 117வது பிரிவு 88ன் படி, சோசலிசக் குடியரசிற்கு எதிராக பேசுவதை, பிரச்சாரம் செய்வதை தடுக்கிறது. இது ஆட்சி கவிழ்ப்புக்கான குற்றமாக கருதப்பட்டு மூன்று முதல் இருபது ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கமுடியும். பிரிவு 79 இன் கீழ் (தற்போது 2015 கோட் பிரிவு 109) பிரிவு, மக்கள் அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கத்துடன் அமைப்புகளை உருவாக்கினால், உருவாக்குபவர்கள், அதில் உறுப்பினராக சேருபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் பிரிவு இது.

குற்றவியல் பிரிவு 88ன் கீழ் நாடு முழுவதும் அரசியல் பிரபலங்கள், யூ டியூப் பிரபலங்கள், சமூக வளைத்தள பிரபலங்கள் ஆட்சியாளர்களை விமர்சனம் செய்தார்கள் என சுமார் 200 சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்கிறது 88 இயக்கம். இந்த சட்டப்பிரிவின் கீழ் கைது செய்வதை கண்டிக்கும் விதமாக இந்த சட்டப்பிரிவின் பெயரிலேயே இயக்கம் தொடங்கியுள்ளனர்.

வியட்நாமில் இந்த சட்டப்பிரிவுகளில் கைது செய்யப்பட்டாலே அவர்களுக்கு தண்டனை உறுதி என்கிற நிலையிலேயே நீதித்துறையும் உள்ளது. கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் 200க்கும் மேற்பட்டவர்களில் 30 பேர் பெண்கள். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச அளவில் வியட்நாம்க்கு அழுத்தம் தரவைக்கும் அளவுக்கு இயங்கிக்கொண்டு இருக்கிறது இந்த 88 மனித உரிமை இயக்கம்.

நக்யூன்

தென் சீனக் கடல் பகுதியில் உள்ள ‘பாரசல் மற்றும் ஸ்ப்ராட்லி’ தீவுகள் வியட்நாமுக்கு சொந்தமானது. இந்த தீவுகள் தங்களுக்கு சொந்தம் என சீனா உரிமை கொண்டாடிவருகிறது. இதுதொடர்பாக வியட்நாமிய அரசுக்கும் – சீனா அரசுக்கும் இடையே பல ஆண்டுகாலமாக உரிமை மோதல் இருந்துவருகிறது. இந்த தீவுகளை சீனாவுக்கு விட்டுத்தரக்கூடாது என வியட்நாமில் "HS.TS.VN" என்கிற சொல்லாடல் பிரபலமானது. இதற்கு அர்த்தம் "ஹோங் சா, ட்ரூங் சா, வியட்நாம்," என்ற முழக்கமாகும். இந்த சொல்லாடல் பிரபலமாக்க நாடு முழுவதும் "HS.TS.VN" பொறிக்கப்பட்ட டிசார்ட் உட்பட பலவற்றில் பிரிண்ட் செய்தனர். சோசியல் மீடியாவில் பரப்பினர். இப்படி செய்தவர்களை குறிவைத்தது வியட்நாம் அரசு.

நாட்டின் டிராவின் மாகாணத்தை சேர்ந்தவர் நக்யூன் டாங் மிங் மன் (Nguyen Dang Minh Man). குடிமக்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது அரசாங்கம் அடக்குமுறை ஏவியதால் சமூக ஊடகத்தில் அதுக்குறித்து ஒரு பதிவு எழுதினார். இந்த பதிவால் 2011 ஜூலை மாதம் இவர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். இவர் கைது செய்யப்பட்டது டிராவின் மாகாணத்தில் சிறை வைக்கப்பட்டது நீண்ட தொலைவில் உள்ள ஹோவா மாகாணத்தில். சிறையில் அரசியல் கைதியாக நடத்தப்படாமல் சாதாரண கைதியாக கடும் நெருக்கடி தந்தனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, வியட்நாமிய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 79 இன் கீழ் அரசைக் கவிழ்க்க முயற்சித்தார் என 13 பேருடன் நக்யூன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ஐந்து ஆண்டுகள் வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. சிறையிலும் அமைதியாக இருந்துவிடவில்லை சாப்பிடமுடியாத அளவில் தரமற்ற உணவு, தண்ணீர் இல்லை எனச்சொல்லி சிறையிலும் உண்ணாவிரத போராட்டங்கள் நடத்தினார். சிகிச்சை அளிக்கிறோம் என்கிற பெயரில் சிறையில் அவர்களை கொலை செய்ய முயல்வதாக குற்றம்சாட்டினார். இதனால் அவரை தனிமைச்சிறையில் அடைத்தனர். ஐ.நா.வின் தடுப்புக்காவல் குழு (UNWGAD) விசாரணைக்கு சென்றது. அது  2013 ஆம் ஆண்டு அவரை விடுவிக்க வேண்டும் என்றது. அப்போதும் விடுவிக்கமுடியாது என்றது வியட்நாம். 2015ஆம் ஆண்டு நக்யூன் தந்தை நக்யூன் வன் லோய், தனது மகளின் கொடும் சிறை குறித்து அமெரிக்கா அரசிடம் முறையிட்டார். இறுதியில் 02.08.2019 ஆம் தேதி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். 8 ஆண்டுகள் சிறையில் கொடுமைகளை அனுபவித்தேன் என்றார்.

துய்

மீகாங் டெல்டாவைச் சேர்ந்த மீன்வளர்ப்பு பொறியாளரும் சுற்றுச்சூழல் ஆர்வலரும், பெண்ணியவாதியுமான ஆர்வலர் டிங் தி து துய் (Dinh Thi Thu Thuy). இவர் தனது முகநூல் பக்கத்தில் அரசாங்கக் கொள்கைகளை விமர்சித்தார் என 2020 ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். இவர் மீது குற்றம்சாட்டப்பட்ட வழக்கு விசாரணைக்கு வரவே 8 மாதங்கள் சிறையில் இருந்தார். அந்த 8 மாதத்தில் தனது பத்து வயது மகனிடம் பேசவேண்டும் என்கிற கோரிக்கையை கூட அரசு பரிசீலிக்கவில்லை. அரசாங்கத்தை விமர்சித்தார் என இவரது ஐந்து முகநூல் பதிவுகள் ஆதாரமாக நீதிமன்றத்தில் காட்டப்பட்டது. அந்த ஐந்து பதிவுகளும் மொத்தமாக 130 லைக்குகள் மற்றும் 80 ஷேர்களைப் பெற்றிருந்தது. நீதிமன்றத்தில் நான்கு மணிநேரம் மட்டுமே நடந்தது இவரின் வழக்கு விசாரணை. 2021 ஜனவரி 20 ஆம் தேதி இவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

நகுய்ன் நுக் நு குயிங் 

தாய் காளான் என்கிற பெயரில் சமையல் குறிப்புகளை எழுதிக்கொண்டு இருந்தார் குயிங். பின்னர் யூ டியூப்பில் சமையல் வீடியோக்களை பதிவு செய்துவந்துக்கொண்டு இருந்தார். இதன்மூலம் சமூகஊடகத்தில் பிரபலமானதும் 2006ல் சமூக பிரச்சனைகள் மீது கவனத்தை திருப்பினார். அரசு மருத்துவமனையில் ஏழை மக்கள் நோய்க்கு சிகிச்சையளிக்க மருத்துவர்களுக்கு லஞ்சம் தரவேண்டி இருக்கிறது என பதிவு எழுதினார். தொடர்ந்து அரசு அலுவலகங்களில் நடைபெறும் லஞ்சங்கள் குறித்தும், மனித உரிமை மீறல்கள் குறித்தும் தொடர்ந்து தனது பிளாக் பக்கத்தில் எழுத துவங்கினார். ‘நீ பேசாவிட்டால் யார் பேசுவார்கள்’ என்பதே இவரின் ப்ளாக்கின் அறிவிப்பு. வியட்நாம் பிளாக்கர்களின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார்.

2009ல் சீனா நாட்டின் நிறுவனம் வியட்நாமில் பாக்சைட் சுரங்கம் தோண்டியெடுக்கும் பணிக்காக விவசாயிகளிடமிருந்து நிலங்களை எடுத்துக்கொண்டது தொடர்பாக எழுதிய பிளாக் பதிவுக்கு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவசாய நிலம் எடுத்துக்கொள்வதற்கு மக்களிடமிருந்தும் எதிர்ப்பு வந்ததால் அரசாங்கம் திட்டத்திலிருந்து பின்வாங்கியது, இதனால் குயிங் விடுவிக்கப்பட்டார்.

ஸ்ப்ராட்லி மற்றும் பாராசெல் தீவுகளில் சீன பாக்சைட் சுரங்கத்தை விமர்சிக்கும் வலைப்பதிவு இடுகைகள் தொடர்பான புகாரில் போலீஸார் அதிகாலையில் கைது செய்தனர். அவர் விடுவிக்கப்படுவதற்கு முன் பத்து நாட்கள் தடுத்து வைக்கப்பட்டார்.

2015 நவம்பர் மாதம் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் வியட்நாம் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பேரணியில் மக்கள் கலந்துக்கொள்ள வேண்டுமென குயிங் பதிவுகள் எழுதினார். தொடர்ந்து Formosa Ha Tinh Steel நிறுவனத்தின் ரசாயன கழிவு கடலில் கலந்து நூற்றுக்கணக்கான மீனவர்கள் பாதிக்கப்பட்டார்கள், மீன்வளம், இயற்கை வளம் பாதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு தலையீட வேண்டும் என்று நாட்டின் முக்கிய இயற்கை மற்றும் அரசியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். அதில் குயிங்கும் ஒருவர். அரசாங்கம் இறுதியில் நிறுவனத்திடம் இருந்து $500 மில்லியனை நட்ட ஈடாக கேட்டது.

2016 அக்டோபர் 10ஆம் தேதி அரசியல் ஆர்வலர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை சந்திப்பதற்காக குயிங் சிறைச்சாலைக்கு சென்றார். சந்திப்பது குற்றமென குயிங் கைது செய்யப்பட்டு சிறையில் அழடைக்கப்பட்டார். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் அதன் மனித உரிமை அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. வியட்நாமில் இருந்த அமெரிக்க தூதரும் கண்டனம் தெரிவித்தார். அதை வியட்நாம் ஆட்சியாளர்கள் கண்டுக்கொள்ளவில்லை. 2017 ஜூலை மாதம் குயிங்குக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அமெரிக்காவின் நெருக்கடியால் ஓராண்டுக்கு பின்னர் 2018 அக்டோபர் மாதம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கிருந்து தாய்நாட்டின் மனித உரிமை மீறல்களை அமெரிக்காவின் பென் அமைப்போடு சேர்ந்து எதிர்த்துவருகிறார்.

இசைக்கலைஞர் மாய் கோய்

வியட்நாம் தொலைக்காட்சியின் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஆல்பம் பாடல் மூலம் நாட்டில் இளைஞர்களிடம் புகழ்பெற்றவர் மாய் கோய். நாட்டில் கலை மற்றும் அரசியல் சுதந்திரம் இல்லை என விமர்சனம் செய்தார். 2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாடகரை திருமணம் செய்துக்கொண்டார். 2016 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார். அப்போது வெளிநாடு சென்ற மாய் கோய் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவைச் சந்தித்தார். வியட்நாம் குறித்தும், மனித உரிமைகள் இல்லாதது, கருத்து சுதந்திரம் இல்லாதது, அரசியல் விமர்சனம் இல்லாததை பேசினார். தொடர்ந்து பல நாடுகளுக்கு சென்றவர் 2018 ஆம் ஆண்டு நாடு திரும்பியபோது, ஹனாய் விமான நிலையத்தில் தடுக்கப்பட்டு பலமணி நேரம் விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார். அரசின் தொடர் நெருக்கடியால் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார்.

இவர்களைப்போல் பத்திரிகையாளர் பாம் டோன் ட்ராங் போன்ற பல பெண்கள் வியட்நாமில் பெண்களுக்கு சுதந்திரமில்லை என குரல் கொடுத்துவருகின்றனர். தற்போது ஆண் மற்றும் பெண் என 241 வியட்நாமிய ஆர்வலர்கள் சிறையில் உள்ளனர். தற்போது சிறை தண்டனை அனுபவித்து வரும் 21 பெண் ஆர்வலர்கள் தண்டனை பெற்றுள்ளனர். மேலும் ஆறு பேர் தற்போது விசாரணைக்காக காத்திருக்கின்றனர். மூன்று பெண்கள் நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். 88 இயக்கம், இன்னும் 55 பெண்கள் துன்புறுத்தப்படும் அபாயத்தில் இருப்பதாக கூறுகிறது. பெண்களை விட ஆண் ஆர்வலர்கள் கணிசமான அளவில் சிறையில் இருந்தாலும், வியட்நாமின் மிகவும் பிரபலமான அதிருப்தியாளர்களில் பலர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பெண் அரசியல் கைதிகள் மற்றும் பெண் சமூக ஆர்வலர்கள் பின்னாலும் ஒரு வரலாறு இருக்கிறது. இந்த காலத்தில் இப்படி தீரத்துடன் உரிமைக்காக போராடுகிறார்கள் என்றால் முந்தைய காலத்தில் எப்படி இருந்தார்கள்? நாட்டில் உள்ள சில கோடி ஆண்களுக்கு வராத கோபம் இப்பெண்மணிகளுக்கு எங்கிருந்து வந்தது?

பயணம் தொடரும்...

நிறம் மாறும் செங்கொடி தேசம்! – வியட்நாம் பயணத் தொடர் பகுதி – 8