பல்வேறு கொலை, குற்றச் சம்பவங்களை ‘தடயம்’ என்னும் தொடரின் வழியே தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி நம்மிடம் விளக்கி வருகிறார். அந்த வகையில் இந்தியாவையே உலுக்கிய காவிட் சிஸ்டர்ஸ் கேஸை பற்றி விவரிக்கிறார்.
இந்த காவிட் சிஸ்டர்ஸ் காவலில் மாட்ட முக்கிய கட்டமாக இருந்தது அஞ்சனா பாயின் அடுத்த திட்டமான, தனது இரண்டாவது கணவன் மோகன் காவிட்டின் குழந்தைகள் மேல் போனதுதான். இந்த நிலைமைக்கு காரணமானதே மோகனும் அவனது தற்போதய மனைவி பிரதீபா தான் என்று பழி வாங்க, அவர்களின் மகள்களை கடத்தி கொல்லத் திட்டமிட்டு, ஒரு மகளை சீமா என்பவள் போய் தனது தந்தையிடம் பாசமாக பேசி சகோதரியை அழைத்துச் செல்வதாக நாடகமாடி கொண்டு சென்று, நாள் பார்த்து கரும்பு கொல்லைக்குள் கொன்று அங்கேயே புதைக்கின்றனர். இரண்டாவது மகளான தேவியை கடத்த அந்த குழந்தை படிக்கும் பள்ளிக்கு சென்று பியூனிடம் பேசி, தான் அந்த குழந்தையின் பெரியம்மா தான் எனவும், அம்மாவிற்கு உடம்பு சரியில்லை எனவே உடனடியாக உடன் அனுப்புமாறு கூற, பியூனுக்கும் வகுப்பின் ஆசிரியருக்கும் சந்தேகம் வந்து வீட்டில் விசாரிக்க, ஏற்கனவே ஒரு மகள் வீடு திரும்பாததால், சுதாரித்த மோகன் காவிட்டும் ப்ரதீபாவும் அஞ்சனா பாயின் மீதும் ரேணுகா, சீமா மீதும் போலீசில் புகார் அளிக்கவே விஷயம் அடுத்த நிலைக்கு செல்கின்றது. அவர்களை கைது செய்து, தொடர் குழந்தை கடத்தல் மற்றும் கொலை வழக்குப் பதிவு செய்கின்றனர். பயந்த சீமாவின் மூலமாகவும் அப்ரூவராக மாறின ரேணுகா கணவர் கிரண் ஷிண்டே மூலமாகவும் இவர்களின் 6 வருட பின்னணி அதிகாரிகளுக்கு தெரிய வருகிறது.
மாட்டிய மூவரும், தான் இந்த கொலைகளை செய்ய முக்கிய காரணமே தாய் அஞ்சனா பாய் தான் என்று திருப்ப, அதன் பின்னே காவல்துறையினர் அஞ்சனா பாயையும் கைது செய்து நால்வரையும் சிறையில் அடைக்கின்றனர். அதற்கு பின்னே இவர்கள் செய்த ஒவ்வொரு கொலைகளையும் இதுவரை காணாமல் போன குழந்தைகளின் பட்டியலை எடுத்து தகவல் சேமிக்கின்றனர். இரண்டு வருடம் கழித்து 1998ல் குற்றப்பத்திரிகையில் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கிடையில் இயற்கை மரணமாக அஞ்சனா பாய் இறந்தும் விடுகிறார். கிரண் ஷிண்டே அப்ரூவர் என்பதால் தண்டனையின்றி வெளியில் விடப்படுகிறார். சுதீப் ஜெய்ஸ்வால் என்ற வக்கீலும், செஷன் கோர்ட்டில் மல்லிக் என்பவரும் இவர்கள் கேஸை கையாள்கின்றனர்.
இப்படி இவர்களின் கேஸ் முதலில் தண்டனைக்கு உட்பட்டதாக கீழ் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்ட கடத்தல்கள் 14, அதில் 9 குழந்தைகள் மட்டுமே கொலை செய்யப்பட்டதாகவும் என்றே பதிவு செய்யப்படுகிறது. ஆனால் கீழ் கோர்ட்டில், கிடைத்த தரவுகளின் படி, 13 கடத்தல்களும் 6 கொலைகளுமாக நடத்தப்பட்ட செஷன்களில் கூறி தண்டனை கொடுக்கிறார்கள். இவர்களுக்கு தூக்குத் தண்டனையும் உறுதிப்படுத்துகின்றனர். இதுவே ஹைகோர்ட்டில் அந்த 6 கொலைகளில் ஒரு கொலைக்கு போதுமான ஆதாரம் இல்லாததால், 5 கொலைகளாக குறைக்கப்படுகிறது. இந்த கேஸை தீவிரமாக விசாரித்த அதிகாரி உஜ்ஜவால் நிக்காம் என்பவரோ பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், தனக்கு தெரிந்த வகையில் கடந்த 6 மாதங்களில் இவர்கள் குறைந்தது 44 குழந்தைகளை கொன்றிருக்கலாம் என்று திடுக்கிடும் தகவலை முன்வைக்கிறார். இதற்கிடையில், இந்த இரு சகோதரிகளும் கருணை மனு கேட்டு மேல்முறையீடு போடுகின்றனர். ஆனால் அன்றைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, எந்த ஒரு வகையிலும் கருணை பெறும் தகுதி இவர்களுக்கு இல்லை என்று நிராகரித்து தூக்கு தண்டனையையே பரிந்துரைக்கிறார்.
இவர்களுடைய வக்கீல் மீண்டும் உச்சநீதிமன்றத்திடம் கொண்டு சென்று, 2006ல் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஆண்டே கருணை மனு பதிவு செய்ததாகவும், ஆனால் அதற்கான முடிவு 2014ல் கிடைத்தது. இவர்கள் கைதான வருடம் 1996ல் இருந்து 2014 வரை இவர்கள் மரண பயத்துடன் நாட்களை கடத்தியதால் அதுவே ஆயுள் தண்டனைக்கு சமம் என்று கேட்டு, மறுபடியும் பரிசீலினை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். வாதத்தில் உண்மை இருப்பதை ஏற்றுக்கொண்டு, தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டு, எர்வாடா சிறையில் இப்போது வரை ஆயுள் கைதிகளாக இருக்கின்றனர்.
இந்த பிரபலமான காவிட் சிஸ்டர் வழக்கு, ‘யாருக்குமே தூக்கு தண்டனை கொடுக்கக் கூடாது’ என்ற கொள்கையுள்ள பிரபல மனித உரிமை போராளியான அசீம் சரோட் என்பவரையே, ‘இவர்களுக்கு தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும்’ என்று சொல்ல வைத்த வழக்கு இது.