தன்னுடைய தவறான பழக்கவழக்கத்தால் நான்கு கொலைகளுக்கு காரணமாக அமைகிறாள் பள்ளி மாணவி. அது குறித்து நம்மிடையே தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.
வங்காளத்தில் 1999 ஆண்டு நடந்த சம்பவம் இது. உள்ளூர் காவல் நிலையத்தில் ஒருவர் புகார் அளிக்கிறார். அதாவது, தங்களது ஏரியாவில் உள்ள ஒரு வீட்டிலிருந்து ஒரு பெண் தொடர்ச்சியாக கத்துகிற சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்தோம். ஒரு இளம்பெண் எலக்ட்ரிக் வயர்களால் உடலெங்கும் சுத்தப்பட்டு கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்தார். உள்ளே சென்று பார்த்த போது அந்த பெண்ணின் அம்மா, அப்பா மற்றும் தாத்தா, பாட்டி ஆகிய நால்வரும் உடலெங்கும் வயர்கள் சுற்றப்பட்டு அந்த வயர்கள் மின்சார பிளக்குகளின் அருகே இணைக்கப்பட்டு இறந்து கிடந்தார்கள் என்று புகார் கொடுத்தார்.
புகாரின் அடிப்படையில் விசாரணை நடந்தது, உயிரோடு இருக்கும் அந்த இளம் பெண்ணிடம் விசாரித்த போது, எங்க அப்பாவை இருவர் தேடி வந்தார்கள், அவர்களால் தான் நான் கட்டிப் போடப்பட்டேன் என்றும் நால்வரும் இறந்தது பிறகு தான் தெரியும் என்றாள். இறந்த நால்வரின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் அவர்கள் மின்சாரம் தாக்கி இறக்கவில்லை, ஒருவகையான விஷத்தால் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.
அந்த வீட்டைச் சுற்றி பரிசோதித்த போது ஒரு ஸ்வீட் பாக்ஸ் கிடைக்கிறது. அதை ஆய்வு செய்ததில், அதில் கலந்து தான் விஷம் கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்று காவல்துறை யூகிக்கிறார்கள். அதே சமயத்தில் அந்த பகுதியில் இந்த குடும்பம் பற்றி விசாரித்த போது, அந்த இளம்பெண்ணின் டியூசன் ஆசிரியர் உடன் நெருக்கமாக இருந்ததாகவும், அதை அவரது தாய் கண்டித்ததாகவும் தகவல் கிடைக்கப் பெற்றது.
இது குறித்து மேலும் விசாரிக்கையில், அந்த பெண்ணே முன் வந்து என்ன நடந்தது என்று சொல்லி விடுகிறாள். அந்த பெண்ணுடைய அம்மாவிற்கு ஆண் குழந்தை தான் விருப்பம், பெண் குழந்தை பிறந்ததால் அதை பெரிதாக அன்பாக அரவணைக்காமல் வளர்த்து வருகிறார்கள். பள்ளியில் படிக்கும் சக மாணவரை ஒரு நாள் சாலையில் நேரில் கண்ட போது, பேசியதை பார்த்த அம்மா அவளை கடுமையாக தாக்கி உதட்டில் காயம் பட்டு விடுகிறது.
அன்று மாலை வீட்டிற்கு வந்த டியூசன் ஆசிரியர் உதட்டு காயத்தைப் பார்த்து விசாரிக்கிறார். அவளும் நடந்ததை சொல்கிறாள். உதட்டு காயத்திற்கு மருந்திடும் காரணத்தைக் கொண்டே அடிக்கடி அவளை தொடுகிறார் டியூசன் ஆசிரியர். காலப்போக்கில் அடிக்கடி தொடுதல் அதிகரிக்கிறது. கூட்டமில்லாத திரையரங்கிற்கு அடிக்கடி சென்று படம் பார்ப்பார்களாம், அத்தோடு வரைமுறையற்ற காதல் சம்பந்தமான புத்தகங்களையெல்லாம் அந்த பெண்ணிற்கு டியூசன் ஆசிரியர் வாங்கிக் கொடுத்து படிக்க கொடுத்திருக்கிறார்.
இப்படியே போக அவருக்கு பணத்தேவை ஏற்பட்ட போது தன்னுடைய அப்பாவிடம் கேட்டு வாங்கி கொடுத்திருக்கிறாள். அளவுக்கு மீறி கேட்ட போது அப்பா தர மறுத்ததால், இவளுடைய நகையை எல்லாம் எடுத்து டியூசன் ஆசிரியருக்கு கொடுத்திருக்கிறாள். இப்படியாக பள்ளி மாணவிக்கும் டியூசன் வாத்தியாருக்குமான உறவு இன்னும் நெருக்கமாகியிருக்கிறது.
இதுவே பின்னால் குடும்பத்தினரை கொலை செய்யும் அளவிற்கு கொண்டு சென்றிருக்கிறது. எப்படி கொலை செய்தார்கள் என்பதை அடுத்த தொடரில் காண்போம்.
- தொடரும்