கேரளாவில் வயதான தம்பதியினரை கொன்றதாக சந்தேகப்பட்டு சென்னை இளைஞரை தேடியதைப் பற்றியும், அவர் தன்னுடைய இறுதி காலத்தில் என்னவானார் என்பதைப் பற்றியும் தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.
கேரளா காவல்துறையினர் மெட்ராஸ் வந்து தேடிய போது ரெனி ஜார்ஜ் பற்றிய தகவல் கிடைக்கிறது. ரெனி ஜார்ஜ் தன்னுடைய பள்ளிக்காலத்திலேயே தவறான பழக்கவழக்கங்களைக் கொண்டுள்ளார். குற்றச்செயலில் ஈடுபடுபவர்களோடு தான் பழகி வந்திருக்கிறார். இங்கே இப்படி இருக்கிறாரே என்று அவரது உறவினர் வீட்டிற்கு அனுப்புகிறார்கள் அங்கேயும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைத் தேடியே நட்பாகி கெட்ட பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகி தொடர்ந்து அதையே செய்து வந்துள்ளார்.
சிறு சிறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு அதிலிருந்து பணம் சம்பாதித்து வந்தவர், கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் விடுதியில் சேர்கிறார். அங்கே கிடைக்கும் கல்லூரி மாணவர்களை தன்னுடைய குற்றச்செயல்களுக்கு உடந்தையாக்கிக் கொண்டுதான் கேரளா தம்பதியினரின் வீட்டிற்கு போய் கொலையை செய்திருக்கிறார் என்பதை காவல்துறையினர் கண்டறிகின்றனர்.
குற்றம் உறுதி செய்யப்பட்டு சிறை சென்ற ரெனி ஜார்ஜ், அங்கேயும் குற்றவாளிகளுடனேயே அதிகம் பழகி வருகிறார். பரோலில் வெளியே வருகிறவர் சர்ச்சுகளுக்கு அடிக்கடி செல்ல ஆரம்பிக்கிறார். இயல்பாகவே கிறித்தவக் குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் என்றாலும் சர்ச்சுக்குப் போவதிலும், ஜெபம் பண்ணுவதிலும் அதிகம் ஆர்வம் காட்டாதவர், பரோலில் வந்த போது சர்ச்சுக்கு தொடர்ச்சியாக செல்வதையும், ஜெபம் பண்ணுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.
பரோல் முடிந்து சிறைக்கு சென்றவரின் நடவடிக்கைகளில் நிறைய மாற்றம் தெரிகிறது. சிறை தண்டனை முடிந்து திரும்பிய ரெனி ஜார்ஜ், சிறைக் கைதிகளின் குழந்தைகளுக்கான காப்பகங்களை துவங்குகிறார். சிறையிலிருந்து வெளிவந்த கைதிகளுக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி தருகிறார். மறுவாழ்வு மையங்கள் தொடங்கி சிறப்பாக நடத்தி வருகிறார். சிஎன்என் ஐபிஎன் ரெனி ஜார்ஜை தேர்ந்தெடுத்து ரியல் ஹீரோ என்ற விருதினை வழங்கி கெளரவித்திருக்கிறது. கொலைகாரனாக வாழ்க்கையை ஆரம்பித்த ரெனி ஜார்ஜ் இன்றும் பெங்களூரில் உயர்ந்த மனிதராக வலம் வருகிறார்.