எல்லோரும் கொடுமை செய்கிற கணவனைப் பற்றி புகார் அளிப்பார்கள். ஆனால் இங்கே ஒரு பெண்மணி தன் கணவர் மிகவும் நல்லவராக இருக்கிறார் என்று சொல்லி கவுன்சிலிங் வந்திருந்தார். அவருக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியே ஜெய் ஜென் பகிர்ந்து கொள்கிறார்.
நல்ல வசதியான குடும்பத்தைச் சார்ந்த, நல்ல வேலையில் இருக்கிற, சமூகத்தில் நல்ல பொறுப்பில் இருக்கிற, குடிப்பழக்கமோ வேறு எந்த கெட்ட பழக்கமோ இல்லாத, இன்னொரு பெண்ணின் மீது விருப்பமோ, திருமணத்தை மீறிய உறவோ எதுவும் வைத்திராத ஒரு பர்பெக்ட் ஜென்டில்மேன் தன் கணவர் என்றும் எல்லோராலும் மிகவும் நல்லவராக பார்க்கப்படுகிறார். அவர் செய்வது சரியாக இருக்கும் என்பதே எல்லோரின் முடிவாகவும் இருக்கிறது.
அதுதான் தனக்கு சிக்கலாக இருக்கிறது என்றார் அந்த பெண்மணி. அதாவது எல்லாவற்றிலுமே பக்காவாக இருக்கிறவரின் முடிவுதான் எல்லோரின் முடிவாகவும் இருக்கிறது. எடுத்துக்காட்டாக, கோவில் போக வேண்டும் என்று அந்த பெண்மணி முடிவெடுத்தால், அவரின் கணவரோ வேண்டாமே என்று சொல்லிவிட்டார் என்றால் எல்லோருமே அதான் மாப்ளை சொல்லிட்டாருல்ல அப்ப சரியாத்தான் இருக்கும். கோவிலுக்கு போக வேண்டாம் என்று எல்லோரின் முடிவாகவும் மாறிப்போகும்.
அவர்தான் எல்லாவற்றிலுமே கரெக்டா இருக்கிறாரே அவர் சொல்வது சரியாகத்தான் இருக்கும் என்கிற எண்ணமே எல்லோரையும் அவரின் முடிவுக்கு மறுபேச்சு பேசாமல் முடிவெடுக்க வைக்கிறது. ஒரு சமயத்தில் இந்த முடிவெடுக்கும் சூழல் படுக்கை அறை வரை வந்து நிற்கிறது. அன்றைய இரவு வேண்டும், வேண்டாம் எனபதையே அவர்தான் முடிவெடுக்கிறார். இதனால் மனமுடைந்த பெண் எல்லோரிடமும் இதை குறையாகச் சொன்னால் “எவ்வளவோ தப்பு பண்றவனுங்க இருக்கானுங்க, இதெல்லாம் ஒரு பிரச்சனையா? அட்ஜஸ்ட் பண்ணிட்டு போ” என்கிறார்கள்.
ஆனால் தான் அவரிடமிருந்து பிரியலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன் என்று கவுன்சிலிங் வந்தார். தன்னுடைய முடிவில் சற்றே உறுதித்தன்மை இல்லாதவரிடம் நான் ஒரு வார்த்தை கேட்டேன். அந்த பெர்பெக்ட் மனிதரை விடுங்கள், அவரிடமிருந்து பிரிந்து நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள். சிறு வயதுதான் ஆகிறது, துணை வேண்டும். வேறொரு வாழ்க்கையைத் துணையை தேடிக்கொண்டால் அவன் பெர்பெக்டாக இல்லாமல், தவறான பழக்கவழக்கங்கள் கொண்டவனாக இருந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு சற்று யோசித்தார்கள். பிறகு இதற்கு தீர்வு உங்கள் கணவரோடு பேச வேண்டும் என்றேன். அவரை அழைத்து வந்தார்கள்.
தன்னிடம் எந்த பிரச்சனையுமே இல்லையே என்று நினைத்தவரிடம் பிரச்சனை என்னவென்று எடுத்துச் சொன்னோம். யோசிக்க ஒரு வாரம் கொடுங்கள் என்று கேட்டவர் ஒரு வாரத்திற்கு பிறகு வந்து ஆமாம் என்னிடம் அப்படியான ஒரு சிக்கல் இருக்கிறது தான். நான் நினைப்பதுதான் சரி என்று நினைப்பேன். இனிமேல் எல்லாவற்றையுமே கலந்தாலோசித்து முடிவெடுக்கிறேன் என்று சொன்னார். சில சமயம் நல்லவனாக இருப்பதும் பலருக்கு சிக்கலாகிப் போகிறது என்பதற்கான எடுத்துக்காட்டு இந்த கவுன்சிலிங் வழியாக புரிந்து கொள்ளப்பட்டது.