கேரளாவில் நடந்த இரட்டை கொலையைப் பற்றியும், அதற்கு நடந்த விசாரணையைப் பற்றியும் தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.
கேரளாவில் 1980-ஆம் நடந்த ஒரு கொலை வழக்கு இது. அந்த காலகட்டத்தில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் அரபு நாடுகளுக்கு வேலைக்குச் சென்று கடுமையாக உழைத்து சம்பாதித்து, தங்களுடைய வயதான காலத்தில் ஊருக்கு ஒதுக்குப் புறமாக இடம் வாங்கி பண்ணை வீடு கட்டி வாழ்வார்கள். அப்படியாக வாழ்ந்து வந்த வயதான கணவன், மனைவி இருவர் உடலில் பயங்கரமாக கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடக்கிறார்கள் என்று அவர்களது வீட்டில் வேலை பார்த்த பெண் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கிறார்.
காவல்துறையும் சென்று பார்த்த போது வயதான ஆண் வீட்டின் படுக்கையறையில் 17 இடங்களில் குத்தப்பட்டு இறந்த நிலையில், அந்த வீட்டின் வயதான பெண்மணியும் சமைக்கும் கத்தியால் உடலெங்கும் குத்தப்பட்டு இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். வீடெங்கும் சோதித்ததில் கொலையாளிகளின் கை ரேகை தடயங்கள் எதுவுமே கிடைக்கவில்லை. அந்த அளவிற்கு கை ரேகைகளை வீட்டின் எல்லா இடத்திலும் அழித்திருக்கிறார்கள்.
வீட்டில் இருந்த நகை, பணம், விலையுயர்ந்த வாட்ச், டேப் ரெக்கார்டர்கள் அனைத்துமே திருடு போயிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. வேறு எந்த தடயமும் கிடைக்கவில்லை என்று தீவிரமான சோதனையிட்ட போது விலையுயர்ந்த ஷூ ஒன்றின் காலடித்தடம் அங்கே கிடைக்கிறது. மேலும் நான்கு பேர் டீ குடித்த கப் அங்கே மேசையில் இருந்திருக்கிறது.
காவல்துறைக்கு தகவல் தந்த வீட்டு வேலை பார்த்த பெண்ணிடம் தீவிரமாக விசாரித்த போது, நேற்று இரவு வீட்டு வேலை முடித்து கிளம்பும் போது நான்கு டீ போட்டு குடுத்து விட்டு போ, மெட்ராஸிலிருந்து உறவுக்கார பையனும், அவரது நண்பர்களும் வந்திருக்கிறார்கள் என்று இறந்த வயதான அம்மா சொல்லியதை காவல்துறையிடம் விசாரித்திருக்கிறார்கள்.
இப்போது கேரளா காவல்துறை இறந்த வயதான தம்பதியினரின் குடும்ப உறுப்பினர்கள் மெட்ராஸில் யார் இருக்கிறார்கள் என்று வழக்கை விசாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இன்றைய சென்னையில், அன்றைய மெட்ராஸிற்கு வந்த கேரளா காவல்துறை அதிகாரிகள் இறந்த தம்பதியினர்களுக்கு சொந்தமான உறவுகளை சந்தித்திருக்கிறார்கள். அதில் ரெனி ஜார்ஜ் என்ற இளைஞரை மட்டும் சந்திக்க முடியவில்லை. அவரை தொடர்ந்து வலை வீசி தேடியிருக்கிறார்கள்.
ரெனி ஜார்ஜ் கிடைத்தாரா? அவன் சிக்கியது எப்படி? அவர் தான் இந்த வயதான தம்பதியினரை கொலை செய்தாரா? என்பதை அடுத்த தொடரில் காண்போம்.
- தொடரும்