Skip to main content

பிள்ளைகளை பாதிக்கும் பெற்றோரின் கருத்து வேறுபாடு - ஆஷா பாக்யராஜ் பகிரும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை :13

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
parenting-counselor-asha-bhagyaraj-advice-13

குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் கொடுக்கப்பட்டும் கவுன்சிலிங் பற்றி நம்மிடையே குழந்தை வளர்ப்பு ஆலோசனை சிறப்பு நிபுணர் ஆஷா பாக்யராஜ் பகிர்கிறார்.

ஒரு நோயால் பாதிக்கப்பட்டு ஆறு மாதமாக ஓய்வில் இருந்த கண்டிப்பான அம்மா, எந்த விதமான கண்டிப்புமே இல்லாமல் சுதந்திரமாக மகளை வளர்த்த அப்பா, இவர்களுக்கு ஒரே மகள். ஒரு சமயத்தில் குழந்தையின் செயல்பாடுகளில் அதிகப்படியான இயல்பு நிலை மாற்றம் தெரிகிறது அதை நோயிலிருந்து மீண்ட அம்மா கண்டறிகிறாள். இதற்கு குழந்தையை ஒழுங்காக பராமரிக்காத கணவர் தான் காரணம் என்று குறை கூறி அது அவர்களிடையே முரணாகி குழந்தை வளர்ப்பு ஆலோசகரான என்னை அணுகினர்.

கண்டிப்பான அம்மா சரியா? எதையுமே கண்டுகொள்ளாமல் மகளை சுதந்திரமாக விட்ட அப்பா சரியா? என்று என்னிடம் கேட்ட போது இரண்டுமே தவறு என்று அவர்களுக்கு சொன்னேன். எப்போதுமே குழந்தை அம்மாவின் பேச்சை கேட்க வேண்டும், அவர்கள் சொல்லும் படி தான் நடக்க, சாப்பிட, உடை உடுத்த செய்ய வேண்டும் என்று நினைப்பதை குழந்தை வளர்ப்பு உளவியலில் ஹெலிகாப்டர் பேரண்டிங் என்கிறோம். பின்னாடியே துரத்தி, துரத்தி அதை செய், இதை செய்யாதே என்று அவர்களை வழிநடத்துவது தவறு. அவர்களை நடக்க விட்டு வழிகாட்டுதல் வேண்டும், அவர்கள் நடந்து கொள்வார்கள். இதை புரிந்து கொள்ளுங்கள் என்று அந்த அம்மாவிற்கு சொன்னேன்.

ஜங்க் புட் சாப்பிடலாம், நள்ளிரவு நண்பர்களோடு பிறந்தநாள் விழா கொண்டாட போகலாம், பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை குடிக்கலாம், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் போன் பயன்படுத்தலாம், போன்ற எல்லாவற்றையுமே கண்டிக்காமல் விடுவதும் தவறு தான். சில விசயங்களில் கண்டிப்போடு இருக்க வேண்டும் என்று அந்த அப்பாவிற்கு சொன்னேன்.

உங்கள் குழந்தையிடம் என்ன பிடிக்கிறது? என்ன பிடிக்கவில்லை? எதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று அந்த பெற்றோரிடம் எழுதி கொண்டு வரச் சொன்னேன். இருவரின் ஒரு பாயிண்ட் கூட ஒத்துப்போகவில்லை. மேற்கொண்டு பேசும் போது எதிர்த்து எதிர்த்து பேசுகிறாள் என்றார்கள்.

இதற்கு தூக்கமின்மையும் காரணமாக இருக்கலாம். நீங்கள் எப்படி தூங்க வைப்பீர்கள் என்று அம்மாவிடம் கேட்டபோது, கண்டிப்பாக இரவில் குளிக்க வேண்டும், சாமி கும்பிட வேண்டும், தூங்குவதற்கென்று தனி உடை உடுத்த வேண்டும் என்றார். அப்பாவோ எப்ப தூக்கம் வருதோ, குழந்தை அப்ப தூங்கட்டும் என்றார். 

இப்ப குழந்தையிடம் கேட்ட போது எனக்கு தூங்குவதற்கென்று தனியாக கவனம் செலுத்த பிடிக்கவில்லை என்றது. எனவே அதனை நெறிப்படுத்தி சரி செய்தேன். அது அந்த குழந்தைக்கு நிறைய மாற்றங்களைத் தந்தது. அதை பெற்றோர்களும் உணர்ந்தார்கள்.

இறுதியாக பெற்றோர்கள் தங்களுக்குள் மரியாதையாக பேசி பழகுங்கள். அது உங்கள் மகள் உங்களை மரியாதையாக நடத்த உதவும் என்று பெற்றோருக்கு சொன்னேன். ஒரே சிட்டிங்கில் இது சரியாகவில்லை, மாதக் கணக்கில் எடுத்துக் கொண்டது.

ஆனால், சொன்னதை எல்லாம் ஏற்று பெற்றோர்கள் நடந்ததால், குழந்தையிடம் நல்ல மாற்றம் தெரிவதை உணர்ந்து என்னிடம் சொன்னார்கள். பிறகு குழந்தையை எப்பவுமே எப்படி எங்கேஜ்டாக வைத்துக் கொள்வது என்றும், அதிக நேரம் போன் பயன்படுத்துவதால் வரும் சிக்கல்களை எடுத்துச் சொன்னதும் புரிந்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் அடைந்தாள்.

எல்லா பெற்றோர்களுக்குள்ளும், கணவன் - மனைவி இடையே ஏற்படுகிற மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்கால் குழந்தைகளும் பாதிப்பு அடைவார்கள். அதை மனதில் வைத்து இணக்கமான உறவை கையாள வேண்டும்.