Skip to main content

குடும்பத்தையே கொடூரமாகக் கொன்ற பெண்; துணை போன கணவன் - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 48

Published on 08/03/2024 | Edited on 09/03/2024
thilagavathi-ips-rtd-thadayam-48

பல்வேறு கொலை குற்றச் சம்பவங்களை ‘தடயம்’ என்னும் தொடரின் வழியே தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி  திலகவதி விளக்கி வருகிறார். அந்த வகையில் ஹரியானா முன்னாள் எம்.எல்.ஏ. ரேலு  ராம் என்பவரின் மொத்த குடும்பமும் கொடூரமாகக் கொல்லப்படுகின்றனர். அந்த  திகில் கொலைச் சம்பவம்  பற்றியும், கொலை பின்னணியைப் பற்றிய விவரங்களையும் நமக்கு விளக்குகிறார்.  

ஹரியானாவின் அன்றைய எம்.எல்.ஏ. ரேலு ராம் மற்றும் அவரது மொத்த குடும்பமும், தலையில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு சடலங்களாகக் கிடந்தனர். மூத்த மகள் சோனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனைத்து அறைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. கை ரேகைகள் எடுக்கப்பட்டன. ரேலு ராமின் முதல் மனைவி ஓமி தேவிக்கு பிறந்தவரே சுனில். இரண்டாவது மனைவி கிருஷ்ணா தேவிக்கு பிறந்தவர்களே சோனியா மற்றும் பிரியங்கா. சோனியா, சஞ்சீவ் என்பவரைக் காதலித்து திருமணம் முடித்ததிலிருந்து ரேலு ராம் இடையே நல்லுறவு இல்லை. தனது ஒன்றுவிட்ட சகோதரர் சுனிலின் பண்ணை வீட்டைச் சுற்றியுள்ள சுமார் 46 ஏக்கர் விவசாய நிலத்தை தனக்கு மாற்றித் தருமாறு அடிக்கடி கேட்டுத் தகராறு செய்துள்ளார்.

ஒருமுறை சோனியா சுனிலை ரிவால்வரால் சுடவும் செய்திருக்கிறாள். போலீஸ் விசாரணையில், சோனியா அறையில் அவளது சிகப்பு டைரி மற்றும் ஒரு இரும்பு ராட் ரத்தக் கறையுடன்  கண்டுபிடிக்கப்படுகிறது. அதில் ஒரு தற்கொலைக் குறிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தன் தந்தை மற்றும் தன் குடும்பத்தில் அனைவரையும் கொல்ல நினைப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இறுதியில் உண்மை நிலவரம் புரிந்து கொலையை ஒத்துக்கொண்டு வாக்குமூலம்  கொடுக்கிறாள். தனக்கு கிடைக்காத சொத்து அக்குடும்பத்தில் யாருக்குமே போய்விடக் கூடாது என்று குழந்தைகள் வரை கொடூரமாக கொன்றிருக்கிறாள். ஆனால் இதில் காவல் அதிகாரிகளுக்கு சில சந்தேகங்கள் இருந்தன. ஒன்று, அன்று வரிசையாக இத்தனை பேரை கொல்லும்போது எப்படி ஒருவர் கூட அலறாமல் இருந்திருக்க முடியும். சுனிலின் மனைவி, அதாவது அண்ணி சகுந்தலா தேவி வாயில் துணி வைத்து அடக்கி, கைகள் இறுக்கக் கட்டப்பட்டு தான் சடலம் இருந்தது. அப்படி என்றால் இதனை இவள் மட்டும் ஒரு ஆளாக நிச்சயம் செய்திருக்க முடியாது. கூட ஒருவர் உதவி செய்திருக்க வேண்டும் என்று உறுதி செய்கின்றனர்.    

நள்ளிரவில் பட்டாசுகள் வெடித்து, சோனியா கேரேஜில் இறங்கி இரும்பு கம்பியை எடுத்துச் செல்வதை தாங்கள் பார்த்ததாக ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர். பின்னர் அதிகாலை 4.45 மணியளவில் டாடா சுமோவில் சோனியா புறப்பட்டுச் சென்று சில நிமிடங்களில் திரும்பி வந்ததாக அவர்கள் சொன்னார்கள். குற்றம் நடந்த இடத்தில் இருந்து தனது கணவரை அருகிலிருக்கும் பஸ் ஸ்டாப்பில் இறக்கி விடுவதற்காக அவர் சென்றதாக சந்தேகமடைந்த ஊழியர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசும் அங்கே அவர்கள் சொன்ன இடத்திற்கு சென்று நைட் டியூட்டியில் இருந்த அதிகாரி ஒருவரிடம் கேட்டதில், வேலைக்காரர்கள் சொன்னது உறுதியானது. சோனியா இங்கு வந்து கணவனை இறக்கி விட்டிருக்கிறாள். அருகில் இருக்கும் டாக்ஸி ஓட்டுநர்களிடம் விசாரித்ததில், அவன் அங்கிருந்து கிளம்பி வழியில் ஒரு போன் பூத்தில் இறங்கி தன் பெற்றோரிடம் பேசி இருக்கிறான் என்று தெரியவந்தது. காவல் அதிகாரிகள் நெடுநாள் கடந்து சஞ்சீவை டில்லியில் கண்டுபிடித்தனர். அங்கே  உண்மை சொல்லும் கருவியை வைத்து நடந்த மொத்த கொலை பின்னணி கதையை வாங்கினர். அதன்படி, அன்று கொலை செய்ய இருந்த இரவில் ப்ரியங்காவை விடுதியிலிருந்து அழைத்து வந்தபோது, சஞ்சீவ் மேல் சந்தேகம் வராமலிருக்க வழியில் இறங்குவது போல இறங்கி, ஆனால் வண்டி பின்னால் ஏறி மறைவாக வீட்டிற்கு வந்து விடுகிறான்.

பின்னர் அவர்கள் அறையில் சென்று ஒளிந்து கொள்கிறான். அங்கே பிறந்தநாள் பார்ட்டியில் சோனியா எல்லாருக்கும் பாயசம் செய்து அதில் அபின் என்ற மருந்தை கலந்து எல்லாருக்கும் கொடுத்து விடுகிறாள். சிறிது நேரத்திலே அனைவருக்கும் தலை சுற்றுகிறது. தூக்க மயக்கமாக இருக்கிறது என்று அவரவர் அறைக்கு சென்று தூங்கி விடுகின்றனர். அனைவரையும் ஒவ்வொருவராக கணவன் சஞ்சீவுடன் சென்று வரிசையாக கொல்கிறாள். முதலில் அசையாமல் இருக்கும் தனது தந்தையை, எடுத்து வந்த இரும்பு ராடால் அடித்துக் கொன்றுவிட்டு, தனது தாயின் முகத்தில் தலையணை வைத்து பொத்தி, தலையில் அடித்துக் கொல்கிறாள். அடுத்து பிரியங்காவையும் தனியாக அழைத்துக் கொன்று  பின்னர் சுனிலுடன் தனியாகப் பேச வேண்டும் என்று அழைத்து தனி அறையில் வைத்துக் கொன்று விடுகிறாள். அபின் விளைவு தனது அண்ணி, அதாவது சுனிலின்  மனைவிக்கு மட்டும் ஏறாததால், சஞ்சீவின் உதவியோடு வாயில் துணியை வைத்து அடைத்து, கைகளைக் கயிற்றால் கட்டி பின்னர் அவர்களது குழந்தைகளை அவள் முன்னிலையில் அடித்துக் கொன்று, பின்னர் அவளும் கொல்லப்படுகிறாள்.    

காலையில் சஞ்சீவிடம், ரத்தம் படிந்த துணிகளை கொடுத்து அவனையும் டாடா சுமோவில் ஒளிந்திருக்க சொல்லி, அவரை பஸ் ஸ்டாப்பில் இறக்கி விடுகிறாள். சஞ்சீவ் அத்தனையும் போலீசில் கூறி, துணிகளை எரித்த இடத்தைக் காட்டிக் கொடுக்க அங்கே சென்று அனைத்து தடயங்களையும் போலீசார் எடுத்துக் கொள்கின்றனர். போலீசாருக்கு இந்த வழக்கில் மொத்தமாக 103 சாட்சிகள் கிடைக்கின்றன. ஆனால் அதில் 66 மட்டுமே நன்கு பலமாக இருந்தது. சோனியாவும், தான் கொடுத்த வாக்குமூலம் போலீஸ் மிரட்டியதால் கொடுக்கப்பட்டது தான் என்றும், இப்படியெல்லாம் கொலை செய்யவே இல்லை என்றும் நாடகமாடி வாதாடினாள். ஆனால் வேலையாட்கள் கொடுத்த கடுமையான வாக்குமூலம் மூலம் சோனியா மீது சந்தேகம் உறுதி ஆனது. டிஸ்ட்ரிக்ட் செக்ஷனில் அவளுக்கும் சஞ்சீவிற்கும் தூக்கு தண்டனை 26.11.2007 அன்று நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால், தூக்கு தண்டனை ஆயுள்  தண்டனையாக மாற்றப்பட்டது. சிறையில் வேறு சோனியா ஒருமுறை தற்கொலைக்கு முயற்சி செய்கிறாள். சஞ்சீவும்  தன் உடன் இருக்கும் கைதிகளுடன் சேர்ந்து தப்பிக்க முயற்சி செய்கிறான். இருந்தாலும் சஞ்சீவிற்கு பரோல் கொடுக்கப்படுகிறது. பரோலில் வெளியே வந்தவன்,  மறுபடி சிறைக்கு வரவில்லை. எனவே போலீஸ் மறுபடியும் சஞ்சீவியை தேட, கடைசியாக ஓம் ஆனந்த பவ என்ற போலி சாமியார் வேஷத்தில் மீரட்டில் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது அம்பாலா சிறையில் இருக்கிறான்.

சார்ந்த செய்திகள்