Skip to main content

அப்பாவி கணவனை தெருவில் அலைய வைத்த மனைவி - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 47

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
advocate-santhakumaris-valakku-en-47

தான் சந்தித்த பல்வேறு வழக்குகள் குறித்தும் அதை நடத்திய விதம் குறித்தும் நம்மோடு பிரபல வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து கொள்கிறார்.

ரமேஷ்பாபு  என்பவரின் வழக்கு இது. அப்பா இல்லாமல் அம்மா வளர்ப்பில் ஏழ்மை நிலையிலிருந்து வளர்ந்து வேலை தேடி கஷ்டப்பட்டு வயது சற்றே அதிகம் ஆன பின்பு தான் திருமணம் செய்து கொள்கிறார். இவருக்கு குழந்தையும் பிறக்க, நான்கு வருடம் கழித்து திடீரென்று சற்றும் எதிர்பாராமல் மனைவியிடம் இருந்து விவாகரத்து நோட்டீஸ் வர, பதட்டமாக வந்து என்னை சந்திக்கிறார். அந்த இரண்டு நோட்டீசில் ஒன்று விவாகரத்து கேட்டும் இன்னொன்று குழந்தைக்கு பராமரிப்பு பணம் கேட்டும் இருந்தது. என்னதான் பிரச்சனை என்று ரமேஷ்பாபுவிடம் கேட்ட பின்னே மெல்ல சொல்கிறார். 

ஒண்ணுமே இல்லாத நிலையிலிருந்து வீடு வசதி இல்லாமல் சிரமத்துடன் வளர்ந்ததால், தன் அம்மாவிற்காக சொந்த வீடு கட்டி முடிக்கையில் வயதும் அதிகம் ஆகிவிட்டது. இதை சொல்லித்தான் திருமணமும் நடந்தது. நாங்கள் சந்தோஷமாகத்தான் இருந்தோம். ஒரு குழந்தை கூட பிறந்திருக்கிறது என்றார். பின் எதற்காக உங்கள் மனைவி விவாகரத்து நோட்டீஸில், நீங்கள் இரவு மிகவும் லேட்டாக வருவதாகவும், கெட்ட வார்த்தை பேசுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் என்று கேட்டேன். ரமேஷ்பாபுவுக்கு தான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் மாதத்தின் முதல் வாரம் மட்டும் கொஞ்சம் நிறைய வேலைகள் இருக்கும் என்பதால், அந்த வாரம் மட்டுமே வீடு திரும்ப நள்ளிரவு ஆகிவிடும் என்றும், தான் சத்தியமாக ஒரு கெட்ட வார்த்தை கூட பேசியது இல்லை. வேண்டுமென்றால் என் மனைவியிடமே ரெக்கார்டு எதுவும் இருந்தால் கேட்டுப் பாருங்கள் என்றார். என் மனதிற்கு இவர் பேசுவது உண்மை என்றுதான் பட்டது. அவர் மனைவி நோட்டீசுடன் குழந்தைக்கு பராமரிப்பு பணம் கேட்டிருப்பதால் அவர் வருமான விவரம் கேட்டோம். 

ஓரளவு லட்சத்தில் சம்பாதிக்கும் ரமேஷ்பாபு அதை வைத்து தன் தாய்க்காக கட்டியிருக்கும் வீட்டின் கடனை மாதாமாதம் அடைப்பதாகவும், மேலும் தன் மனைவிக்கும் சர்ப்ரைஸாக ஊரப்பாக்கத்தில் ஒரு வீடும் கட்டிக்கொண்டிருக்கிறார். அதற்கான ஆதாரத்தையும் சமர்ப்பிக்கிறார். நான் செய்யாமல் இருந்தால் தானே நான் மெயின்டனன்ஸ் பணம் கொடுக்க வேண்டும்.  நான் தான் ஏற்கனவே என் குழந்தைக்கு ஸ்கூல்ல பீஸ் முதல் அவர்கள் குடியிருக்கும் வீடு வாடகை முதல் கட்டிக்கொண்டுதானே இருக்கிறேன் என்றார். 

மேலும் அந்தப் பெண் இவரை வீட்டை விட்டுத் துரத்திவிட்டார் என்பதும் தெரிய வருகிறது. என்னவென்று கேட்டபோது தான் தெரியவந்தது, இவருக்கும் மனைவிக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்றும், அந்தப் பெண்ணின் அம்மாவினால் தான் இந்த நிலைமை என்றும் மேலே சொல்கிறார். செங்கல்பட்டிலிருந்து வந்திருக்கும் அவர் மனைவி கர்ப்பமான பின், சென்னையிலேயே பிரசவம் பார்த்து கொள்ளலாம் என்று ரமேஷ்பாபு கூறி இருக்கிறார். ஆனால் அந்த பெண்ணின் அம்மா செங்கல்பட்டிலேயே பிரசவம் பார்க்க வைக்க, அதில் சில சிக்கல்கள் வந்து யாராவது ஒரு உயிரை மட்டுமே காப்பாற்ற முடியும் என்று ஆகியிருக்கிறது. ரமேஷ்பாபுவும் அதிக விலை கொடுத்து தனியார் மருத்துவமனையில் கொண்டு போய் சிசிச்சை பார்க்க வைத்து காப்பாற்றி இருக்கிறார். குழந்தை பிறந்தபோது சிக்கல் வந்ததால், அந்த பெண்ணின் தாயாரும் இவர்கள் வீட்டில் கூடவே தங்கி இருக்கிறார். 

இது இயல்புதானே என்று ரமேஷ்பாபுவும் விட, ஆனால் வந்த தாயார் திரும்பி செல்லவே இல்லை. மேலும் இந்த அம்மா, கணவன் மனைவிக்குள் நிறைய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறார். லேட்டாக வந்தால் கதவை திறக்காதே என்றும், தன் மகளின் அதிர்ஷ்டமே இப்படி மேலே வந்ததற்கு காரணம் என்றும், அவரை உருவ கேலி வரை செய்கிறார். அந்த பெண்ணின் தம்பியும் மாதக் கணக்கில் இவர்கள் கூடவே தங்கி விடுகிறார். ரமேஷ்பாபுவுக்கு டிப்ரெஷன் அதிகமாகி புகைப் பழக்கமும் அதிகம் ஆகிறது. மனைவியும் விலகிப் போக, தன் மாமியாரிடமும் பேசிப் பார்க்கிறார். ஆனால் அதுவும் தவறாக போகிறது. மேலும் மனைவியின் தம்பியும் இவரை அடித்து வெளியே துரத்தி விடுகிறார். இந்த நிலையில் தான் அவருக்கு நோட்டீஸ் வருகிறது.

இதையெல்லாம் நாங்கள் கோர்ட்டில் நீதிபதியிடம் சொல்ல, ரமேஷ்பாபுவையும் அந்த பெண்ணையும் மீடியேஷனுக்கு அனுப்பினார்கள். குழந்தையைப் பார்க்க ரமேஷ்பாபுவை அனுமதிக்க வேண்டும் என்று கேட்டு பெட்டிஷன் போட்டு அதன்படி பார்க்க போனாலும், குழந்தையை வாசலிலேயே காண்பித்து அவரை மரியாதை குறைவாக நடத்தி அனுப்பி விடுகின்றனர். 

பின்னர் விசிட்டிங் ரயிட்ஸ் வாங்கியும், அந்த பெண்ணும் குழந்தையும் வீட்டை விட்டே சென்றதாக தகவல் வர, ஊரப்பாக்கத்தில் இருப்பதாக அறிந்து கொள்கிறார். கடைசியாக கோர்ட்டில் அந்த பெண் எதற்கும் ஒத்து வரவில்லை. ஏதாவது செட்டில் பண்ணுமாறு கூற, அந்த பெண்ணும் குழந்தையை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்றால் ஊரப்பாக்கத்தில் ஒரு பிராப்பர்ட்டியை தனது பெயரில் எழுதித் தருமாறு கேட்கிறாள். ஆனால் அவளுக்குத் தெரியவில்லை அது அவளுக்காகத் தான் ரமேஷ்பாபு வங்கியிருக்கார் என்று. இறுதியில் அவரும் இதற்கு ஒத்துக்கொண்டு சொத்தையும் அவள் பெயரில் ரிஜிஸ்டர் செய்த பின், மியூச்சுவல் கன்சென்ட்டில் டைவோர்ஸ் வாங்கியும், அந்த பெண்  குழந்தையை காட்டவே இல்லை. அதற்கு பெட்டிஷன் போட்டு, நோட்டீஸை அந்த பெண்ணுக்கு அனுப்பினாலும், சரியான ரெஸ்பான்ஸ் இருக்காது. அந்த குழந்தை பள்ளிக்கு போய் வரும்போது மட்டும் பார்த்து வருகிறார் ரமேஷ்பாபு. இப்போது அவர் தன் அம்மா இருக்கும் பாண்டிச்சேரிக்கே சென்றுவிட்டார்.

கணவனை என்றுமே வெறும் பணம் காய்க்கும் மரமாக மட்டுமே பார்க்காமல், அன்போடும் அரவணைப்போடும் பார்த்துக் கொள்ளும் பெண்கள் இருக்கும் குடும்பம் முன்னேற்றம் அடையும். அப்படியில்லாத குடும்பம் முன்னேற்றம் அடையாது.