Skip to main content

நகைகளை வைத்து நூதன கொள்ளை; ஏமாந்த வங்கிகள் - ராஜ்குமார் பகிரும் சொல்ல மறந்த கதை: 20

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
 rajkumar-solla-marantha-kathai-20

இன்சூரன்ஸ் பெறுவதற்காக நடத்தப்படும் பல்வேறு மோசடி, திருட்டு குறித்து நம்மிடையே தொடர்ச்சியாக இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்டகாலம் பணிபுரிந்த ராஜ்குமார் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஆந்திராவைச் சேர்ந்த பல குடும்பங்கள் வங்கிகளை ஏமாற்றியது குறித்து விவரிக்கிறார்.

இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி தனிநபருக்கு நகைக்கடன் வழங்குவது இங்கே வழக்கமாக இருந்து வருவது. வங்கிக்குச் சென்றால் உங்களது நகைகளை பரிசோதிக்க ஆள் இருப்பார்கள். நகைகளைப் பொறுத்தும், வங்கி கணக்கை நிர்வகிக்கும் முறையை வைத்தும் தொகை நிர்ணயிக்கப்படும்.

சென்னையில் ஈஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வங்கிக்கு ஒரு குடும்பம் நகை அடகு வைக்க வருகிறது. நகை பரிசோதிப்பவரும் வாங்கி பரிசோதித்து முகவரியை உறுதி செய்து கடன் வழங்குகிறார். அதே போல 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நகை அடகு வைத்து வருகிறார்கள். வட்டியும் மாதம் தவறாது கட்டுகிறார்கள்.

ஆறு மாதம் முடிந்து வட்டி கட்டுவது நின்று போகிறது. ஈஞ்சம்பாக்கம் பகுதிகளில் அதிகப்படியான சிறிய அளவிலான தொழில்கள் நடைபெறும். தொழில் முடக்கத்தால் கட்டமுடியாம போய் விட்டதோ என்று நேரே சென்று விசாரிக்கிறார்கள். எங்களால் அந்த நகைக்கு வட்டியும் கட்ட முடியவில்லை, முதலும் செலுத்த முடியவில்லை. நீங்கள் அந்த நகையை ஏலத்திற்கு விட்டு பணத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என்றிருக்கிறார்கள்.

வங்கி நிர்வாகத்திற்கோ இவ்வளவு நகைகளையும் வங்கிக்காக விற்றுக்கொடுத்தால் நன்றாகத்தான் இருக்கும் என்று அதற்கான வேலைகளில் ஈடுபடுகிறார்கள். ஏலம் அறிவிப்பினை பார்த்து நகைகளை வைத்து தொழில் செய்பவர்கள் வந்து நகைகளை பரிசோதித்து வாங்கும் போது அனைத்து நகைகளுமே போலியான நகைகள் என்பது தெரியவருகிறது.

நகையை அடகு வைத்த குடும்பத்தை விசாரித்தால் நாங்கள் ஆறு மாதத்திற்கு முன்பு நல்ல நகையைத்தானே கொடுத்தோம். இப்போது வந்து தங்க நகை இல்லை என்றால் நாங்கள் எப்படி பொறுப்பு ஏற்பது என்கிறார்கள். அதே சமயத்தில் அந்த குடும்பத்தில் ஒருவனை விசாரிக்கும் விதத்தில் விசாரித்த போது நாங்கள் இதை ஆந்திரா மாநிலத்து பக்கத்திலிருந்து குடிசை தொழிலாகவே செய்கிறோம் என்பதை சொல்கிறார்கள். அதாவது வெவ்வேறு வகை உலோகங்களால் தயாரிக்கப்பட்ட ஆபரணத்தில்  தங்கமுலாம் பூசி அதைத் தஙகம் போல மாற்றி பல மாநிலங்களில் இதை போல நகைக்கடன் வாங்கி நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது.

இதையே தான் இந்த வங்கியிலும் செய்திருக்கிறார்கள். இதில் சம்பந்தப்பட்டவர்களை பண மோசடி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். பல்வேறு வகையான மோசடிகளுக்கு மத்தியில் இப்படியுமான மோசடிகளும் கொள்ளைகளும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.