தன்னிடம் கவுன்சிலிங் எடுத்து வந்த மாணவிக்கு சீனியர் மாணவர்களால் நேர்ந்த சம்பவத்தைப் பற்றி குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் நம்மிடம் விவரிக்கிறார்.
நன்றாக படிக்கும் 11ஆம் வகுப்பு மாணவி ஒருவரின் பெற்றோர், தனது மகள் அதிகமாக மொபைல் பயன்படுத்துகிறாள் என்று அந்த சிறுமியை என்னிடம் அழைத்து வந்தனர். அதன் பிறகு அந்த சிறுமிக்கு அறிவுரைகளை கூறி மொபைல் பயன்படுத்தும் நேரத்தை குறைக்க சின்ன சின்ன டாஸ்க் கொடுத்து இப்போது மிகக்குறைவான நேரத்தில்தான் மொபைல் பயன்படுத்துகிறாள். பயன்படுத்தும் நேரங்களில் ரீல்ஸ் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்துள்ளார். பெற்றோருக்கும் தனது குழந்தை எந்த எல்லை வரை மொபைலை பயன்படுத்தும் என்று தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அந்த சிறுமியும் என்ன ரீல்ஸ் எடுத்தாலும் யாருடன் பேசினாலும் தனது பெற்றோரிடம் கூறிவிடும். இந்தளவிற்கு எனது கவுன்சிலிங் அந்த சிறுமியின் பெற்றோருக்கும் உதவியாக இருந்தது.
சில நாட்களாக அந்த சிறுமி தனது பள்ளியில் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவர்களுடன் இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்பி பேசியிருக்கிறது. தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது எல்லை மீறி அந்த சிறுமிடம் அந்த சிறுவர்கள் பேசியிருக்கின்றனர். அதனால் எப்போதும் போல தனது பெற்றோரிடம் சிறுமி இந்த விஷயத்தை சொல்லியிருக்கிறது. ஆனால் இந்த விஷயம் எப்படியோ பள்ளியில் தலைமை ஆசிரியர் வரை தெரிய ஆரம்பித்திருக்கிறது. இதனால் தலைமை ஆசிரியர் அந்த சிறுமியையும் அவளது பெற்றோரையும் பேச அழைத்திருக்கிறார். பள்ளியில் தலைமை ஆசிரியர், குழந்தையை இப்படித்தான் ரீல்ஸ் எடுக்கவிட்டு வளர்ப்பிங்களா? என்று பெற்றோரை திட்டி அந்த மாணவியையும் 3 மணி நேரம் நிற்க வைத்து அட்வைஸ் கொடுத்திருக்கிறார். ஆனால் மகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். அந்த மாதிரி மெசேஜ் அனுப்பிய பசங்களை கண்டித்தீர்களா? என்று பெற்றோர் தலைமை ஆசிரியரிடம் கேட்டுள்ளனர்.
அதற்கு அந்த தலைமை ஆசிரியர், அந்த பசங்களே அப்படித்தான் என்ன சொன்னாலும் திருந்த மாட்டார்கள் என்று பதிலளித்துள்ளார். இதனால் கோபமான அந்த மாணவியின் பெற்றோர் தலைமை ஆசிரியரை திட்டிவிட்டு இந்த விஷயத்தை என்னிடம் வந்து சொன்னார்கள். அதற்கு நான் உங்களின் மகளை விட்டுக்கொடுக்காமல் சரியாக பேசியிருக்கிறீர்கள். இந்த விஷயத்தில் பெண்களின் ஆடை மட்டுமே குறை சொல்லி பெண்ணை குற்றவாளியாக நிறுத்த முயற்சிக்கிறார்கள். அதனால் நீங்கள் செய்தது சரிதான் என்று அந்த பெற்றோர்களிடம் சொன்னேன். அதோடு அந்த சிறுமிடம் இந்த பள்ளி இல்லையென்றால் மற்றொரு பள்ளி இருக்கிறது. அதனால் நடந்த விஷயங்களை பற்றி யோசிக்காமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தேன்.