Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #16

Published on 29/03/2022 | Edited on 29/03/2022

 

maayapura part 16

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

தரையில் விழுந்த சருகுகள் கூட, மீண்டும் மரத்தில் ஒட்ட மாட்டோமா? என காற்றின் உதவியால் மேலெழும்புகிறது. மூங்கிலில் அடைப்பட்ட காற்று கூட, துளை வழியாக விடுதலையாகி இசையைத் தருகிறது. மக்களுக்கு பயனில்லா முள்  மரம் கூட, வாழ வேண்டும் என்ற ஆசையில் வெட்ட வெட்ட துளிர்க்கிறது.

 

அதுபோல் ஒவ்வொரு மனிதனும் தனக்குப் பிடித்தமான வாழ்க்கையை வாழ்ந்து விட மாட்டோமா? என்ற ஆசையில்தான், உறவுகளுடனும், சமுதாயத்துடனும் போராடிக் கொண்டிருக்கிறான். 

 

அசோக்கின் போராட்டமும் இதுதான். தனக்குப் பிடித்த சங்கவியுடன்  சமுதாயம் மெச்ச அன்பான குடும்ப வாழ்க்கை வாழத்தான் ஆசைப்படுகிறான். இது மனித இயல்புதானே?  மனிதர்கள் ஆசைப்படக் கூடாது என்று புத்தனே ஆசைப்பட்டார். காலவெள்ளத்தில் சுழன்று கொண்டிருக்கும் மனிதர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? நானே வாழ்க்கையில் சுயமாக உழைத்து முன்னேறினேன் என்று சிலர் பெருமை பேசுவார்கள். ஆனால் அவர்கள் வாழ்க்கையை ஆராய்ந்தோமானால், எங்கோ யாரோ ஒருவர் வெளியில் தெரியாமல் அவருக்குப் பக்கபலமாக இருந்திருப்பார்கள். 

 

அசோக்கின் வாழ்க்கையிலும் அவன் முன்னேறுவதற்கு அவர் மாமனார் பக்கபலமாக இருப்பார் என நினைத்தான். அலமேலு நினைத்தது போல டவுனுக்கு அழைத்துப் போய் வேலை வாங்கித் தரப் போகிறார் என எண்ணினான். "இப்படி திடீரென்று வந்து கிளம்பு என்று சொன்னால் என்ன அர்த்தம்? வீட்டில் போட்டது போட்டபடி கிடக்கு”. என்று பொய்க் கோபம் காட்டினாள் அலமேலு. 

”வீட்டு வேலையை எல்லாம் எங்க அம்மா பாத்துப்பாங்க"  என்று சொன்ன பெருமாள், ஒரு கணம் அம்மா ஏதாவது தவறாக நினைத்துக் கொள்ளப் போகிறாள் என்று யோசித்து "அம்மா கூட மாட ஒத்தாசை பண்ணுவாங்க. சட்டு புட்டுன்னு வேலைய முடிச்சுட்டுக் கிளம்புங்க" என்று அவசரப்படுத்தினார்.

"அலமேலு, நீங்க எல்லாம் காசி செட்டிப் பாத்திரக்கடையில் இருங்க. நான் பின்னாடியே வந்துடறேன்னு" என்று சொல்லிட்டு எங்கேயோ கிளம்பிப் போனார் பெருமாள்.

"என்னடி இந்த மனுஷன் இப்படி வெயில்ல நிக்க வச்சுட்டார்."என்று புலம்பினார் அலமேலு.

"அப்பா என்ன பண்றாரு. எனக்கும் புரியல மா" என்று குழம்பினாள் சங்கவி.

" உழைச்சி உழைச்சி மண்ணைப் பொன்னாக்கத் தெரிந்த ஆம்பளைக்கு, அதை உருக்கி நகையாக ஆக்கத் தெரியாதா?" என்று பூடகமாக பேசினாள் கூடவே ஒட்டிக்கொண்டு வந்திருந்த பவுனு பாட்டி. 

 

கொஞ்ச நேரத்துல பெருமாளே டயர் வண்டி கட்டிக்கொண்டு, கடைக்கு வந்தார். அவர் வந்த தோரணையைப் பார்த்து ஆச்சரியப்பட்டு வண்டி எல்லாம் எதுக்கு என்று குழம்பினாள் அலமேலு. 

 

மாமா வேர்க்க விறுவிறுக்க வந்ததைப் பார்த்ததும், பக்கத்துக் கடையில் இருந்து  சோடா கலரு வாங்கி வந்து எல்லோருக்கும் கொடுத்தான் அசோக். 

"அலமேலு, கடைக்குள்ளப் போய் சங்கவிக்கு சீர் சாமான்  எல்லாத்தையும் குறை இல்லாமல்  வாங்கு" என்று மனசாரச் சொன்னார் பெருமாள்.

"ஆத்தா நீ வந்து உன் பேத்திக்கு குலம் விளங்க  பூஜை சாமான் எடுத்துக் கொடு" என்று அம்மா பவுனை அன்போடு அழைத்தார்.

"சீர் செனத்தி செய்யறதுக்கெல்லாம் ஏதுடா பணம்னு"? மகனிடம் அதிகாரமாகக் கேட்டாள் பவுன்.

"அதெல்லாம் வீட்ல போய் பேசிக்கலாம். இப்போ போய் பொருள்களை வாங்கு” என்று சொல்லிவிட்டு, முதலில் பெருமாள் கடைக்குள் நுழைந்தார். 

"செட்டியாரய்யா, மகளுக்கு கல்யாணம் முடிஞ்சுருச்சு. உங்களுக்கு எல்லாம் சொல்ல முடியாத சூழ்நிலை. தப்பா எடுத்துக்காதீங்க. சீர் சாமானெல்லாம்  எடுத்துக் கொடுங்க" என்று குரலில் லேசான தயக்கத்துடன் சொன்னார் பெருமாள்.

 

இதை கவனித்த அசோக் "நான் சுயநலமாக செய்த செயலால்  நம்ம வீட்டு பெரியவங்க, மத்தவங்க மத்தியிலே தடுமாறுகிறார்கள். கம்பீரமாக மகளுக்கு கல்யாணம்னு பத்திரிக்கை நீட்ட வேண்டிய இடத்தில் எல்லாம், கல்யாணம் முடிஞ்சிருச்சுன்னு  சொல்லும்போதே அவங்க மனசு எப்படி கூனிக் குறுகும்"- இப்பதான் நினைத்து வருந்தினான் அசோக்.

 

அசோக் முகம் மாறியதைப் பார்த்ததும் வார்த்தைகளில் உற்சாகமாக "மச்சான் பையன்தான். தங்கமான பையன்" என்று அசோக்கை செட்டியாரிடம் அறிமுகப்படுத்தினார் பெருமாள். 

 

முதலில் காமாட்சி அம்மன் விளக்கை கையில் வைத்துக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தாள் அலமேலு.

"அடியே விளக்கின் வறும்பை எண்ணிப்பாரு. லாபம் நஷ்டம் என்று எண்ணிக்கொண்டே லாபத்தில் தொடங்கி லாபத்தில் முடியவேண்டும். அந்த மாதிரிதான் வாங்கணும்னு" பாட்டி சொன்னாள். பெரியவர்கள் எல்லாம் சாமான்களைப் பார்த்து பார்த்து எடுத்துக்கொண்டிருந்தார்கள். விலை குறைவாகவும் இருக்கணும். அதேநேரம் பொருள் அழுத்தமாகவும் இருக்கணும்னு பார்த்தார்கள்.

 

சங்கவி குழந்தைத்தனமாக அங்கிருக்கும் பாத்திரங்களில் தன் உருவத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள். அடிக்கடி அசோக் அருகே சென்று இருவரின் ஜோடிப் பொருத்தத்தையும் பார்த்து ரசித்துக் கொண்டாள். அசோக் இதை ஓரக்கண்ணால் கவனித்துக் கொண்டிருந்தான்.

"அம்மா எனக்கு நிறைய பாத்திரங்கள் வேணும். ஒரு ஸ்பூன் கூட விடாம வாங்கி தரணும்” என்றுஅதிகாரம் பண்ணினாள் சங்கவி.

"கழுதையா பொதி சுமந்து, மாடா உழைச்சி, நிற்க நேரமில்லை. நடக்கத் தெம்புமில்லைங்கற கதையாக முதுகுக்கு ஊத்துற தண்ணிய, வயித்துக்கு ஊத்திட்டு, உனக்கு சீர் செனத்தி செய்தா... அதிகாரம் கேட்குதா உனக்கு?" என்று செல்லக் கோபத்துடன் அவளை அடிக்க வந்தாள் பவுனு பாட்டி.

" மாமா.. அப்பத்தா அடிக்க வருது” என்று கடை என்று கூட பார்க்காமல் ஓடி அசோக் பின்னாடி மறைந்து கொண்டாள்.

"ஏன்யா.. பெருமாள், இந்த புள்ள வெள்ளந்தியா விளையாடிட்டு இருக்கு. இது எப்படி போய் பொறுப்பாக குடித்தனம் பண்ணும்" சந்தேகமாகக் கேட்டார் செட்டியார்.

" எல்லாம் மாமியார் வீட்டுக்குப் போய், அத்தைக்காரி முகரகட்டையிலேயே  இடிச்சா... தன்னால  பொறுப்பு வரும்” என்று அலமேலு சொன்னாள்.

சாமான்களையெல்லாம் எடுத்து முடித்ததும் செட்டியாரிடம்  ஒரு மணி நேரம் பேரம் பேசி, பணத்தைக் கொடுத்து "பொருளுக்கு எல்லாம் சங்கவி என்ற பெயரை போட்டுக்கிட்டே இருங்க. நாங்க பக்கத்தில நகைக் கடை வரைக்கும் போய்ட்டு வர்றோம்” என்று சொல்லிவிட்டு எல்லோரையும் அழைத்துகொண்டு நகைக் கடைக்கு சென்றார் பெருமாள். எல்லோருக்கும் ஆச்சரியம்.

நகை எடுக்க இந்த மனுஷனுக்கு ஏது பணம் என்று நினைத்தனர். பெருமாள் பணத்தைப் பற்றி பேசக்கூடாது என்று சொன்னதால் அமைதியாக இருந்தனர்.

மாரிமுத்து ஆச்சாரி கூலி, சேதாரம் எல்லாம் போட்டு குறைப்பது போல போக்கு காட்டி, ஒரு பவுன் ரூ.2000க்கு போட்டு தாளித்தார்.  3 பவுனில் அட்டிகையும்  2 பவுனில் டாலர் செயினும் வாங்கினார்.

 

பொழுது சாயும் போது, டயர் வண்டி நிறைய சீர் செனத்தியோட  ஊரு சனம் எல்லாம் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு, வீட்டில் வந்து இறங்கினார் பெருமாள்.

" பெருமாள் பெரிய மனுஷன் தாம்பா நீ.  கடன் பட்டாவது பொண்ணுக்குக்கு  சீர் செய்து அனுப்புற  பாரு. நீ நல்லா இருக்கணும் பா" என்று வாழ்த்தினார் ஊர் பெரியவர் ஒருவர்.         

 

ஒரு நல்ல நாள் பார்த்து பொண்ணுக்குப் பட்டுப்புடவை, மாப்பிள்ளைக்கு பட்டுவேட்டி கட்டி, சம்பந்திக்கு பட்டுப்புடவை பட்டு வேட்டி எடுத்துவிட்டு, கட்டில், பீரோ ,பித்தளை அண்டா , சில்வர் சாமான்கள், என்று டயர் வண்டியில் ஏற்றிக்கொண்டு மாட்டு வண்டியில பொண்ணு மாப்பிள்ளையை கூட்டிக்கொண்டு, பொண்ணை மாமியார் வீட்டுக்கு அங்காளி பங்காளி உடன் அழைத்துக்கொண்டு சென்றார் பெருமாள்.

 

வீட்டை விட்டு அவமானப்படுத்தி துரத்தி அனுப்பிய அசோக், மீண்டும் வீட்டு வாசலில் வந்து நிற்பதைப் பார்த்ததும் கண்ணுசாமியும், மணியும் அதிர்ந்தனர். 

 

மகனைப் பார்த்ததும் தங்கம் மனதுக்குள் சந்தோஷப்பட்டாலும் பெரிய மகன்  மணிக்காக  அதை வெளியில் காட்டாமல் முகத்தை மிளகாய்த் தோட்டத்துக்குக்   குத்தகைக்கு  விட்டிருந்தார்.

 

அதற்குள் அக்கம் பக்கம் கூடிவிடவும்  ஆரத்தி எடுப்பதற்காக உள்ளே சென்றாள்  தங்கம்.

 

மணியும் கண்ணுசாமியும் அசோக் அருகில் வந்தனர். சங்கவி பயந்து நடுங்கிக் கொண்டே அசோக்கின் முதுகின் பின்புறம் மறைந்தாள். அப்போது...

 

(சிறகுகள் படபடக்கும் )