Skip to main content

"அரைவேக்காட்டு சாப்பாடுதான்; அந்த வாசனையே நம் ஆட்களுக்கு பிடிக்காது" - பர்மா கதைகள் பகிரும் பாக்யம் #3

Published on 12/05/2022 | Edited on 12/05/2022

 

burma history

 

பிழைப்புத்தேடி உலகம் முழுவதும் பல நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு, கடந்த நூற்றாண்டில் முதன்மைத் தேர்வாக இருந்தது பர்மா. குறிப்பாக, தமிழர்களுக்கும் பர்மாவுக்கும் இடையே மிகநெருக்கமான உறவு உள்ளது. அந்த வகையில், பர்மாவில் பிறந்து தன்னுடைய இளமைக்காலம் முழுவதையும் பர்மாவில் கழித்த பாக்யம், பர்மா குறித்தும், அங்கு வாழ்ந்த தமிழர்களின் வரலாறு குறித்தும் நக்கீரனிடம் தொடர்ந்து பகிர இருக்கிறார். அவர் பகிர்ந்து கொண்ட பர்மா கதைகளின் மூன்றாம் பகுதி பின்வருமாறு...

 

"இங்கிருந்து பர்மாவிற்கு சென்ற மக்களுக்கு ஆரம்பத்தில் எந்தப் பிரச்சனையும் கிடையாது. உழைப்பு, வசதி, திருப்தியான வாழ்க்கை அவர்களுக்கு கிடைத்தது. பிள்ளைகள் வளர்ப்பு மட்டும்தான் அவர்களுக்கு சிரமமாக இருந்தது. நம் ஆட்கள் பெரும்பாலானோர் விவசாயம் செய்தார்கள். சிலர் துறைமுகத்தில் வேலை பார்த்தார்கள். முஸ்லீம்கள் சிலர் சொந்தமாக மரக்கடை வைத்திருந்தார்கள். 

 

பர்மாவை அப்பர் பர்மா, லோயர் பர்மா என்று பிரித்திருந்தார்கள். நாங்கள் இருந்தது லோயர் பர்மா. மலைப்பகுதிதான் அப்பர் பர்மாவில் வரும். அங்கிருந்து இந்தியாவின் எல்லைவரை அப்பர் பர்மாதான். நாட்டில் பெரிய அளவில் சட்டங்கள் இல்லை. குழந்தை பிறந்தால் கட்டாயம் பதிவு செய்யவேண்டும் என்றெல்லாம் அங்கு கிடையாது. நான் பிறந்ததற்கெல்லாம் அந்த நாட்டில் பதிவு இருக்காது. யார் வேண்டுமானாலும் வரலாம், வாழலாம் என்று இருந்ததை ராணுவ ஆட்சி வந்த பிறகுதான் ஒரு ஒழுங்குக்குள் கொண்டுவந்தார்கள். அதன் பிறகுதான், அங்கிருந்த வெளிநாட்டினர் வெளியேற ஆரம்பித்தனர். 

 

மீன், கீரைதான் அந்த மக்கள் அதிகம் சாப்பிடுவார்கள். நம்மைப்போல அல்லாமல் அரைவேக்காட்டில்தான் உண்பார்கள். அதிலிருந்து வரும் ஒருவகையான வாசனை பெரும்பாலும் நம் ஆட்களுக்கு பிடிக்காது. கையெடுத்து கும்பிடும் பழக்கமெல்லாம் அங்கு கிடையாது. நெஞ்சில் கை வைத்து தலையை குனிவதுதான் அங்கு மரியாதை செலுத்தும் முறை. உடை விஷயத்தில் ரொம்பவும் கண்ணியமாக இருப்பார்கள். வயிறு தெரிவதுபோல உடை உடுத்தவே மாட்டார்கள். 

 

இன்று அங்குள்ள தமிழர்கள் பர்மாகாரர்களாகவே மாறிவிட்டார்கள். அவர்கள் மொழி பேசிக்கொண்டு, அந்த மக்கள் உடையை உடுத்திக்கொண்டு அந்த மக்களோடு மக்களாகவே ஆகிவிட்டார்கள். பள்ளிக்கூடங்களை பொறுத்தவரை கிறிஸ்டியன் பள்ளிகள்தான் அதிகம். இன்று அரசியலில் பெரிய ஆட்களாக உள்ள பெரும்பாலோனோர் அங்கு படித்தவர்கள்தான்".

 

 

சார்ந்த செய்திகள்