Skip to main content

பள்ளிக்கு போகமாட்டேன்; அடம் பிடித்து அழுத மாணவர்கள் - ஆஷா பாக்யராஜ் பகிரும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை :18

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
parenting-counselor-asha-bhagyaraj-advice-18

ஒரு குழந்தைக்கு அடித்தளமாக இருந்து வழிகாட்டியாக இருக்க வேண்டிய பெற்றோரும், ஆசிரியருமே குழந்தைக்கு சரியான பாதையை அமைத்து கொடுக்க தவற, அதனால் ஏற்பட்ட விளைவுகளுக்கு ஆட்பட்ட ஒரு குழந்தைக்கும், பெற்றோருக்கும் கொடுத்த கவுன்சிலிங் பற்றி குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் நம்மிடையே விவரிக்கிறார். 

பள்ளியில் படிக்கும் 6 மாணவர்கள் பள்ளிக்கு மாதக்கணக்காக செல்லப் பிடிக்காமல் இருப்பதாக அவர்களது பெற்றோர்கள் என்னிடம் கவுன்சிலிங்கிற்கு கூட்டி வந்தார்கள். அவர்கள் நன்றாக பள்ளிக்குச் சென்று வந்தவர்கள் தான். திடீரென பள்ளிக்குப் போக பிடிக்காமல் ஏதாவது உடல்நிலை சரியில்லை என்று காரணம் சொல்லி கடந்த இரு மாதமாக பள்ளிக்கு போகாமல் இருக்க,  அவர்களது பெற்றோர் மூன்றாவது மாதம் தான் என்னிடம் கூட்டி வருகிறார்கள். நான் அந்த குழந்தைகளிடம் பேசினேன். எல்லா குழந்தைகளிடம் பேசியதிலிருந்து ஒரு குழந்தையை ஹைலைட் பண்ணி சொல்றேன். அதில் ஒரு குழந்தை என்னிடம், "எல்லாம் ஓக்கே தான் ஆண்ட்டி நான் போகிறேன்" என்று  கூறினாலும், மறுபடியும் பெற்றோரிடம் அதே காரணங்கள் சொல்லி பள்ளிக்கு செல்வதை தவிர்த்திருக்கிறது. மேலும், விலை மதிப்பான பொருட்களைக் கேட்டு வாங்கி  கொடுத்தால் மட்டுமே, பள்ளிக்கு போவதாக சொல்லி வாங்கி கொள்ளுதல் போன்று தொடர்கிறது. பெற்றோரும் வேறு வழி இல்லாமல், எப்படியாவது பள்ளிக்கு அனுப்பி விடவேண்டும் என்று வாங்கி கொடுத்திருக்கிறார்கள். 

அந்த குழந்தை என்னிடம் இரண்டு மூன்று செஷன் வந்தபோது, என்னிடமே இதை வாங்கி கொடுக்கச் சொல்லுங்கள் ஆண்ட்டி, நான் போகிறேன் என்று கூறுகிறது. அதுவே அந்த குழந்தையின் டிமாண்டாகவே இருக்கிறது. பொதுவாக பெற்றோருமே அவர்களது குழந்தை மூன்று நான்கு மாதங்களாக பள்ளிக்கு செல்லவில்லை என்றால் விட்டு விடுகிறார்கள், கடைசியாக திடீரென்று தான் என்னிடம் கூட்டி வருகிறார்கள். அதன்பிறகு இவர்களை நம் வழிக்கு கொண்டு வருவதே பெரும்பாடாக இருக்கிறது. இந்த ஏழு கவுன்சிலிங்கில், அந்த குழந்தை பள்ளிக்குச் செல்லாத காரணம் நான் தெரிந்து கொண்டது இதுதான். "என் டீச்சர் என்னை படிக்காத பசங்களோடு சேர்த்து வைத்து பேசுகிறார்கள். வகுப்பில், முதல் இரண்டு பெஞ்ச்சில் படித்த பசங்கள் இருக்க, நான் நண்பர்களோடு அதிகமாக பேசுகிறேன் என்று சராசரியாக படிக்கும் மாணவர்களோடு என்னை கடைசி பெஞ்ச்சில், அவர்களோடு அமரவைத்து விட்டார்கள். அது எனக்கு பிடிக்கவில்லை. மேலும் என்னை ஏதாவது புகார் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அதே பள்ளியில் படிக்கும் என் அக்காவோடும் என்னை கம்பேர் பண்ணுகிறார்கள். என் நண்பர்கள் சேர்க்கை சரி இல்லை, என் நடவடிக்கை சரி இல்லை என்றும் பேசுகிறார்கள்", என்று அந்த பிள்ளை இதனால் பள்ளிக்கு செல்ல விருப்பமில்லை என்று கூறுகிறார். 

அந்த குழந்தையின் பெற்றோரும் பள்ளிக்கு சென்று பேசி இருக்கிறார்கள். ஆசிரியரும் சரியாக பதிலளித்தும், பெற்றோர் சென்ற பிறகு அந்த குழந்தையை அழைத்து தான் என்ன செய்தாலும் போய் சொல்லி விடுவாயா என்று மேலும் கார்னர் பண்ணி இருக்கிறார்கள். இதையெல்லாம் அந்த குழந்தை என்னிடம் சொன்னபோது, இதெல்லாம் சேர்ந்து தான் அவன் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதன் காரணம் என்று தெரிந்தது. பெற்றோரும் அந்த குழந்தையை நன்றாக படித்து காட்டினால், ஆசிரியர் இப்படி செய்ய மாட்டார் என்று, படிப்பின் மூலமாகத்தான் ஒருவனின் நல்ல குணம் நிரூபிக்க முடியும் என்றும் கூறி இருக்கிறார்கள். இதனால் அக்குழந்தை என்னிடம் கவுன்சிலிங்கில், நான் நன்றாக படித்தால் நல்ல பையனா என்று கேட்டு அறிகிறான். மேலும் தான், தன் அம்மாவிற்கு தன் அக்கா கூட அவ்வளவு வேலை செய்ததில்லை என்றும்,  தான்தான்  பாத்திரம் கழுவி கொடுப்பதிலிருந்து, படுக்கை சரி செய்வது முதல் எல்லா உதவியும் செய்து கொடுத்தாலும், என்னை அவர்கள் ஒன்றும் பெரியதாக சொன்னதே இல்லை என்று கூறுகிறான். தான் இதுவரை இது வேண்டும் அது வேண்டும் என்றும் கேட்டதே இல்லை, இந்த இரண்டு மாதமாக தான் பள்ளிக்கு போகாத போது தான் இதெல்லாம் முதன்முறை கேட்பதாகவும், ஆனால் என்ன வாங்கி கொடுத்தாலும் தான் பள்ளிக்கு செல்லப் போவதில்லை என்றும் தீர்மானமாக கூறுகிறான்.  

எனவே இக்குழந்தைக்கு முதலில் தன்னம்பிக்கை  வரவைக்க வேண்டும். இரண்டாவது படிப்பை தவிர்த்து, அவனின் தனித்துவ திறமையை வெளிக் கொண்டு வரவேண்டும். மூன்றாவது அவனது பெற்றோருமே நிறைய தாழ்வாக பேசி இருக்கிறார்கள், எனவே அவர்களின் மீது அவனுக்கு நம்பிக்கை வரவைக்க வேண்டும். இதற்கடுத்தே, அந்த குழந்தை பள்ளிக்கு அனுப்ப முடியும்.  பள்ளியில் எல்லா ஆசிரியரும் பெரும்பாலும் அப்படி இருப்பதில்லை. நாம் தான் நம் பிள்ளையிடம், நீ எங்கே சென்றாலும் யாராவது ஒரு ஆள் உன்னை குறைத்து பேச இருக்கத்தான் செய்வார்கள், அதைத் தாண்டி வரத்தான் வேண்டும் என்று சொல்லி பழக்கப் படுத்த வேண்டும். அந்த குழந்தையிடம் இன்னமும் நான் கவுன்சிலிங் கொடுத்து கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் இப்போது பள்ளிக்கு செல்ல ஆரம்பித்து இருக்கிறான். அவ்வப்போது போகாமல் இருப்பது இருக்கிறது தான் என்றாலும், கஷ்டப்பட்டு போய்க்கொண்டுதான் இருக்கிறான். பெற்றோரிடமும் அழுதாலும் மிகவும் பொறுமையாக கையாள வேண்டும்,  எப்படியும் கடைசியாக பள்ளிக்கு போகத்தான் செய்வான்; ஆனால் கேட்பதை வாங்கி கொடுப்பது போன்ற பழக்கத்தை மட்டும் நிறுத்தி விடவேண்டும் என்றும் கூறினேன். 

பொதுவாகவே நான் எல்லா பெற்றோருக்கு சொல்லும் அறிவுரை இதுதான். காலையில் பிஸியான வேலையில், பிள்ளைகள் தானாக அலாரம் சத்தத்திற்கு பெரும்பாலும் எழுவதில்லை. பெற்றோர் தான் எழுப்பவேண்டும் என்று இருக்கிறது. எனவே அவர்களின் நாள் தொடக்கமாக எழுப்பும்போதே அடித்து பதற்றமாக எழுப்பாமல், சிரித்த முகத்தோடு எழுப்பவேண்டும். என்னிடம் கவுன்சிலிங் வந்த குழந்தை பொதுவாகவே தினசரி படுக்க செல்லும்போதே, நாளை பள்ளியில் யாரிடம் திட்டு வாங்க வேண்டி இருக்கும் என்று தான் பயந்து பயந்து அந்த நினைப்போடே தான் தூங்க செல்கிறான், அதனால் அவன் காலையில் அந்த பயத்தோடு தான் எழுவான். எனவே நான் அந்த பெற்றோருக்கு, தூங்க செல்லும்போது நிறைய தன்னம்பிக்கையோடு பேசுங்கள், என்றும் காலையில் எழுந்ததும், நன்றியுணர்ச்சியோடு பேசி, அவனது தனித்துவ திறமையில் சிறந்து இருத்தலை ஆதரிப்பதாக பேசி  மதிப்பெண் குறைவாக எடுத்தாலும்  உங்களுக்கு அவனை பிடிக்கும் என்றே பேசுங்கள் என்று கூறினேன். 

வீட்டிலிருந்து தான் ஒரு குழந்தைக்கு தன்னம்பிக்கை ஆரம்பிக்கிறது. நான் பார்த்த அந்த ஏழு கவுன்சிலிங்கிலும் அந்த ஆறு மாணவர்களும்  வெவ்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர்களுக்குள் இருக்கும் பொதுவான ஒரே சிக்கல், வீட்டிலும் ஆதரவு கிடைக்கவில்லை என்பது தான். உதாரணத்திற்கு பள்ளியில் தன்னிடம் வம்பு செய்யும் மாணவனை பற்றி வீட்டில் சொன்னாலும், அவர்களுக்கு கிடைக்கும் ஒரே மாதிரி பதில், நீ ஏதாவது செய்திருப்பாய் என்பது தான். இப்படி இருக்க, அந்த குழந்தை யாரிடம் போய் சொல்லமுடியும். எனவேதான் அவர்கள் அடித்தாலும் சரி, திட்டினாலும் சரி, பள்ளிக்கு செல்லாமல் இருப்பதையே ஒரே வாய்ப்பாக எடுத்து கொள்கிறார்கள். ஆகவே, முதலில் அந்த குழந்தையின் காரணத்தை கண்டுபிடித்து விட்டு, அவர்களின் தன்னம்பிக்கை முதல் அவர்களது குடும்பம் வரை இருக்கும் சிக்கல்களை கண்டு பிடித்தால் தான் அவர்கள் பள்ளிக்கு செல்வதை சரி செய்ய முடியும்.