Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... மரண முகூர்த்தம் #17

Published on 09/09/2021 | Edited on 09/09/2021

 

marana muhurtham part 17

 

அத்தியாயம்-17

 

என்ன படித்து என்ன? காஞ்சனா பட அனிமேஷனுக்கே, டாக்டர் லேகாஸ்ரீ தியேட்டரில் நுனி சீட்டில்  அமர்ந்திருப்பாள். அவ்வளவு பயந்தாங்கொள்ளி.

 

கவியோ ‘அந்நியன்’ விக்ரம் மாதிரி, குரல் மாற்றிப் பேசி... பயமுறுத்திக்கொண்டிருக்கிறாள். அதில் அவள் கண்ணை வேறு, ‘சந்திரமுகி’ மாதிரி உருட்டி, உருட்டிக் காட்டிக்கொண்டிருந்தாள். 

 

லேகாவிற்கு என்ன பண்ணுவதென்றே புரியவில்லை. கொஞ்சம் தைரியத்தைத் திரட்டிக்கொண்டு..

 

ரிலாக்ஸான  குரலில்  "கவி, கூல் கூல்..”. என்று சொல்லிக்கொண்டே அவளின் கைகளைப் பிடித்தாள்.. 

 

லேகாவின் கைப்பட்டதும்  திடுக்கென்று தூக்கிப் போட்டது கவிக்கு.

”என்னாச்சுங்க மேடம் .? நான் ஏதாவது உங்களை டிஸ்டர்ப் பண்ணேனா..?” என்று அப்பாவியாய்க் கேட்டாள் கவி.

”ஒன்றும் இல்லை சீனியர் டாக்டரைப் பார்க்கப் போகணும்னு சொல்லிகிட்டு இருந்தீங்க...” என்று லேகா சுதாரிப்புடன் சொல்லிவிட்டு...

 

டேபிள் மீதிருந்த  தண்ணீரை ஒட்டகம் போல் ஒரே மூச்சில் உறிஞ்சினாள் லேகா.

”ஏன் மேடம் டென்ஷனா இருக்கீஙக?” என்று அம்மாஞ்சி மாதிரி கேட்டாள் கவி.

”ஒன்னுமில்ல.. எப்படி சீனியரை பார்க்கறதுன்னு யோசிக்கறேன்.. அவரிடம் எப்படிப் பேசுவது என்று தெரியலையே..” என்று குழம்பினாள் லேகா.

 

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே இண்டர்காம் அழைத்தது.

"சீனியர் தான்" என்று ரிஸீவரை மூடிக்கொண்டு சொன்னாள்.

"சரிங்க... சார். ஐயாம் கம்மிங் சார்..” என்று சொல்லிவிட்டு ரிஸீவரை வைத்துவிட்டுப் பறந்தாள். 
லேகா வரும்வரை கவி அந்த அறையிலேயே காத்திருந்தாள்.

 

கவிக்கு இருந்த ஒரே நம்பிக்கை அந்த டாக்டரிடம் தியா என்ன சொன்னாள் என்பதை அறிந்துகொள்வதுதான். நடக்குமா? என்ற இமாலய கேள்வியுடன் காத்திருந்தாள். 

 

அந்த நேரம் பார்த்து வெளியில், அழகான, பழக்கப்பட்ட, உயிரில் கலந்த ஒரு குரல் கேட்டது. கண்ணாடிக் கதவின்  இடுக்கில் வழிந்த அந்தக் குரல் அவளை அங்கே உட்காரவிடவில்லை. எப்படியாவது அந்தக் குரலுக்கு சொந்தக்காரரைப் பார்க்கும் ஆவலில் வேகமாகக் கதவைத் திறந்து வெளியே வந்தாள். உயரமாக இருந்த இரு நபர்கள்  பேசிக்கொண்டே..  லிஃப்ட்டில் ஏறினார்கள். 

 

லிஃப்ட் மூடப் போகும் ஒரு செகண்ட் அந்த நபரைப் பார்த்தாள் கவி. பார்த்த நொடியிலேயே இந்தக் கட்டடம் இடிந்து விழக்கூடாதா? என்று  நினைத்தாள். இல்லை... இந்த நிமிடமே பொய்யாகக் கூடாதா? என்று கவி வேண்டினாள். 

 

ஏதோ நினைவு வந்தவளாக அம்மாவிற்கு ஃபோன் பண்ணினாள். ரிங் போய் கட்டானது. ஏன் அம்மா ஃபோன் எடுக்கலை? ஒருவேளை அம்மாவிற்கு உடம்புக்கு ஏதாவதா..? அந்த நினைவே அவளுக்குப் படபடப்பைத் தந்தது. மீண்டும் ஃபோன் பண்ணினாள் ரிங் அடித்துக்கொண்டிருந்தது, ஒரு ரிங்கிலேயே ஃபோனை எடுக்கும் அம்மா, ஏன் ஃபோன் எடுக்கலை என்று பயந்தாள். வேண்டாத எண்ணம் எல்லாம் 160 கி.மீ .வேகத்தில் ஓடி வந்தது. 

 

இப்போது இவளை யாரோ அழைத்தார்கள். டக்கென்று ஃபோனை எடுத்து "ஃபோன் அடிச்சா எடுக்க மாட்டியாம்மா" என்று கத்தினாள். ஆனால் எதிர்முனையில் வேறு ஆள்.

"மேம் ஐ.சி.ஐ.சி. பேங்க்கிலிருந்து பேசறோம். உங்களுக்கு லோன் வேணுங்களா மேம்" என்ற கேட்டுக்கொண்டிருக்கும்போதே கவி பட்டென்று... "எனக்கு 100 கோடி லோன் வேணும். தரமுடியுங்களா.. வைங்க ஃபோனை" என்று கத்திவிட்டு ஃபோனைக் கட் பண்ணாள். 

 

இருப்புக் கொள்ளாமல் மீண்டும் வீட்டிற்கு ஃபோன் பண்ணினாள். திலகா உடனே ஃபோனை எடுத்துவிட்டார். "செல்லம் என்னடா இந்த நேரத்தில்,”

"அம்மாகிட்ட பேசறதுக்கு நேரம் காலம் இருக்கா என்ன..?” என்று சற்று எரிச்சலாகக் கேட்டாள்.

 

கவி கேட்டதைக் காதில் வாங்காமல் "நீ நல்லாயிருக்கியாடா" என்றார் அன்பாக.

"ம்.. ஒகே ம்மா... அப்பா எப்படி இருக்கிறார்..?"

"ம்.. நல்லா இருக்கார், ஏன்டி அப்பாவைக் கேட்கற, நீதான் தினமும் பேசுவியே" என்று அம்மா கேட்க...

"ஒகே மாம்... பை" என்று ஃபோனை வைத்தாள்.

 

நார்மலாக இருக்கும் டாடி ஏன் மருத்துவமனைக்கு வர வேண்டும் என்று மனம் குழப்பத்தில் கும்மியடித்துக்கொண்டிருந்தது. 

 

டாக்டர் லேகா உள்ளே வந்து ரிலாக்ஸாக சேரில் சாய்ந்தாள். கவி சென்றிருப்பாள் என்று நினைத்தவளுக்கு அவள் போகாமல் இருப்பது லேசாக எரிச்சலை தந்தது. அதை வெளிக்காட்டாமல், 

"கவி.. சீனியர் இல்லை. அவர் ஃபிரெண்டு வந்தாரு. அவரோட கீழ போயிருக்காரு"

"அந்த ஃபிரண்டு அவ்வளவு பெரிய ஆளா... மேம்" என்று கவி அப்பாவியாய்க் கேட்க,

“அவர் யாருன்னே தெரியாதா? அவரு பேர் எஸ்.கே.எஸ். நிறைய ஸ்கூல் நடத்துறார்”

"ஓ... அப்படிங்களா.. அப்ப சீனியரைப் பார்த்து பேசமுடியாதுங்களா? லேகா மேம், அந்த எஸ்.கே.எஸ். மீது அவ்வளவு மரியாதை வச்சிருக்கீங்க. அவர் மகள் கேட்கிற கோரிக்கையை மட்டும் செய்ய மாட்றீங்களே" என்று கவி கேட்க,

"கவி என்ன சொல்றீங்க?" என்று அதிர்ச்சியானாள் லேகா.

"என் பள்ளியில் என்னவோ நடக்குது லேகா மேம். அதைக் கண்டுபிடிக்கத்தான் உயிரைக் கொடுத்து என் வீட்டிற்குத் தெரியாமல் போராடுகிறேன். பிளீஸ்... ஹெல்ப் பண்ணுங்க" என்று கண்ணில் நீருடன் கேட்டாள்.

 

சற்று யோசித்துவிட்டு, "உங்களுக்கு நான் ஹெல்ப் பண்றேன். வாங்க சீனியர் டாக்டர் ராஜேஷை பார்க்கலாம்" என்று அவர் கேபினுக்குள் சென்றார்கள்.

 

தன்னை அடையாளம் காட்ட வேண்டாம் என்றாள் கவி.

"சார் இவ என் கசின். போன மாதம் தியான்னு ஒரு பேஷன்ட் வந்தாங்களே, அவங்களுடைய குளோஸ் ஃபிரெண்ட். தியா எதுக்காக மன அழுத்தமா இருந்தாங்கன்னு தெரிஞ்சிக்கனும்னு நினைக்கறாங்க” 

 

அவர் முகத்தில் சிந்தனை வட்டமடித்தது.

"ஓ அப்படியா?  முதல்ல உட்காருங்க, எப்பவும் பேஷன்ட் டீடெய்ல சொல்ல மாட்டோம். நீங்க டாக்டர் லேகாவோட கசின்ங்கறதால சொல்றேன். அந்தப் பொண்ணு ஏதோ லவ் அஃபையரில் இருந்திருக்கு போல,. அதுல, ஏதோ பிராப்ளம்" என்று டாக்டர் சொல்லிக்கொண்டே இருக்கும்போது...


"யாரு... நானா? .நானா..? எனக்கு லவ்வா..? நானா.?” என்று சத்தம் போட்டுக்கொண்டே சேரில் இருந்து எழுந்து டாக்டரின் கழுத்தை நெறிக்கப் போனாள்.

அவள் குரலைக் கேட்டு டாக்டர் ராஜேஷும் அதிர்ந்தார். மறக்கமுடியாத தியாவின் குரல்.

"கவி.. கவி.." என்று லேகா அவள் கைகளைப் பிடித்து இழுத்தவுடன் சுயநினைவுக்கு வந்தாள்.

"சாரி..சார்" என்று சொல்லிவிட்டு கவி, அந்த கேபினைவிட்டு வெளியே வந்தாள்.

 

லேகாவோ சீனியர் டாக்டரிடம் பேசி சமாதானப்படுத்திக்கொண்டிருந்தாள். கவிக்கு ஃபோன் வந்தது.

"சொல்லுங்க டாடி "

"என்னடா அம்மாவிடம் நான் நல்லாயிருக்கேனான்னு கேட்டியாம்"

"ஒன்னும் இல்லை, உங்க நினைவு. அதான்"

"அப்படியா? என்னைப் பார்த்திருப்ப அதான் கால் பண்ற"

 

டாடி சொன்னதைக் கேட்டதும் அதிர்ந்தாள் கவி.

 

( திக் திக் தொடரும் )

 

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... மரண முகூர்த்தம் #16