பல மனிதர்களின் பிரச்சனைகளுக்கு கவுன்சிலிங் கொடுத்து வரும் ஜெய் ஜென், ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வாயிலாக தான் கொடுத்த நிறைய கவுன்சிலிங் பற்றி நம்மிடையே பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் சாமானிய மனிதர்களிடன் தனக்கு கிடைத்த கவுன்சிலிங் பற்றி விரிவாக விளக்குகிறார்.
அப்பொது ஜெய் ஜென் பேசுகையில், “பெரிய யோகிகள் துறவிகளிடமிருந்து கிடைக்கும் வாழ்க்கை பாடங்கள் சாமானிய மனிதர்களிடமிருந்து நிறையவே கிடைகிறது. அப்படித்தான் எனக்கு 2011ஆம் ஆண்டு கோயம்புத்தூருக்கு அருகிலுள்ள வடவள்ளி பஸ் ஸ்டாப்பிற்கு எதிரே இருக்கும் ஒரு செருப்பு கடைக்காரரிடம் கிடைத்தது. ஒரு முறை நான் அங்கு நடந்து செல்லும்போது என் செருப்பு கிழிந்துவிட்டது. அங்கு செருப்பு தைக்கும் நபரிடம் சென்றேன். அங்கு போனதும் ஆச்சர்யமான விஷயம் நடந்தது. அந்த நபர் ஒரு டேபிளை எடுத்து அதில் சாக்கை விரித்து ‘வாங்க சார் உக்காருங்க செருப்ப கழட்டி கொடுங்கனு’ சாதாரணமாக பேசினார். எனக்கும் இப்படி யாரவது பேசினால் உடனே பேச தோன்றும். அவரும் அப்படியே என்னிடம், “சார் நான் இப்போ செருப்பு தைக்கும் தொழிலில் இருக்கேன் யாருடை முகத்தையும் பார்க்க மாட்டேன். என்னுடைய பார்வை எல்லாம் நடந்து செல்பவர்களின் கால்களை மட்டும்தான் பார்க்கும். நன்றாக நடந்தால் அது நமக்கான கால் இல்லை. இப்படி பார்த்துக்கொண்டு இருக்கும்போதுதான் உங்கள் கால் கொஞ்சம் தடுமாறியதை பார்த்து உடனே உங்க முகத்தை பார்த்துவிட்டேன்” என்றார். தொழிலில் ஷார்ப்பாக கவனம் செலுத்தி வரும் அவரிடம் மேலும் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தேன்.
அதன் பிறகு அவர், ‘சார் என் பொண்ணு, பையன் இரண்டு பேருமே டாக்டர்’ அப்படினு சொல்லி ஒவ்வொரு தையலுக்கும் சிரித்துகொண்டே பேசினார். அதை பார்த்து எனக்கு கையில் ஒரு கேமரா இல்லையே என்ற ஃபீல் வந்தது. ஒரு புரபொஷ்னல் ஃபோட்டோகிராஃபர் அளவிற்கு ஃபோட்டோ எடுக்க தெரியாவிட்டாலும் ஓரளவிற்கு ஃபோட்டோ எடுப்பேன். அந்தளவிற்கு அவரின் சிரிப்பு அழகாக இருந்தது. பின்பு நான் டாக்டர் படிக்க வைக்கிறீங்க எவ்ளோ பெரிய விஷயம் என்றேன். அதற்கு அவர், ‘நான் படிக்கல என்னை எங்க அப்பா, அம்மா படிக்க வைக்காததற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் என் பசங்கள படிக்க வைக்க அத்தனை முயற்சிகளையும் நான் எடுப்பேன். முடிஞ்ச அளவிற்கு கஷ்டத்தை சொல்லி படிச்சு டாக்டர் ஆகு வேண்டும் என்று சொல்லாமல், நகைச்சுவையாக என் பசங்களிடம் பேசுவேன் அவர்களும் ‘இன்னைக்கு மொத்தம் எத்தனை காலு பா’ என்று பேசுவார்கள். கஷ்டப்படுவதை நானே சொல்லாமல் அவர்களாகவே அதை உணர்ந்து படிக்க ஆரம்பித்து இன்று என் பசங்க டாக்டர் ஆகிட்டாங்க” என்றார்.
அதன் பின்பு நான், அதான் டாக்டர் ஆகிடாங்கல அப்புறம் ஏன் நீங்க செருப்பு தைக்கும் வேலை பார்க்குறீங்க என்றேன். அதற்கு அவர், ‘ஒரு அப்பாவா நான் என் பசங்களை படிக்க வச்சு வேலை வாங்க வச்சுட்டேன். இதுக்கு மேல அவங்க கிட்ட நான் காசு வாங்கிட்டு இருப்பது உயிரோட இருந்து செத்ததிற்கு சமம்’ என்றார். எனக்கு புரியாமல் ஏன் இப்படி சொல்றீங்க என்றேன். அதற்கு அவர், ‘சார் இப்படி யோசிங்க... நம்ம ஒரு நிறுவனம் வச்சு அங்கு நம்ம தொழிலாளிகளிடம் வாங்கி சாப்பிடுவோமா? அதே மாதிரிதான் சார் குடும்பமும் உடம்புல சக்தி இருக்கும் வரை நமக்கானதை நம்ம தான் பார்த்துக்கொள்ள வேண்டும். விருப்பம் இருந்தா குழந்தைகள் பார்த்துக்கொள்வார்கள்’ என்றார். இதைவிடவும் ஒரு விஷயம் சிரித்துக்கொண்டு சொன்னார். அது என்னவென்றால் என் பையனுக்கு ஒரு லட்சம் செருப்பு தைத்து ஒரு வீடு கட்டிவிட மாட்டனா? என்று கூறினார். அதன் பிறகு நான் அவருடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டேன். அவர் மிகவும் சந்தோஷப்பட்டார். சில பேர் குனிந்து செருப்பை கொடுப்பார்கள். அவர்களிடம் நாம் கும்பிட்டு அந்த செருப்பை வாங்கிக்கொள்வேன். ஆனால், நிறைய பேர் முகத்தை கூட பார்க்காமல் நின்று கொண்டு செருப்பை கொடுப்பார்கள். செருப்பை தைத்த பிறகு அவர் யாரோ? நான் யாரோ என்று அவர்கள் சென்றுவிடுவார்கள். ஆனால், உங்களை போன்ற மனிதர்களை பார்த்து பேசியதில் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். மற்றவர்களுக்கு கொடுக்கும் மரியாதை எந்த அளவுக்கு முக்கியம் என்பதையும், பெற்ற பிள்ளைகளாக இருந்தாலும், அவர்களிடம் இருந்து எந்தவித உதவியையும் எதிர்பார்க்கக் கூடாது என்பதையும், தொழில் மேல் அவர் வைத்த மரியாதையயும் அவரிடம் இருந்து நான் பாடமாக கற்றுக்கொண்டேன்.