உலகப்பணக்காரர்கள் பட்டியல் என்பது நாம் அடிக்கடி பார்த்து வருவதுதான். அந்த பட்டியலில் சமீபத்தில் ஒரு சாதனை நடந்திருக்கிறது. இதுவரை இல்லாத அளவு சொத்து மதிப்போடு பணக்காரர்கள் பட்டியலின் உயரத்தை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறார் ஒருவர், அதுவும் இந்த கரோனா காலத்தில்.
நவீன டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக மனித இனம் கற்பனை செய்து பார்க்க முடியாத பல புதிய கண்டுபிடிப்புகள் நாள்தோறும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக இணைய வளர்ச்சியில் ஏற்பட்ட மாற்றம் துண்டு துண்டாக பிரிந்து கிடந்த ஏழு கண்டங்களையும் ஒன்றாக இணைத்து உலகத்தையே இன்று நம் உள்ளங்கைக்குள் கொண்டுவந்து சேர்த்தது. 'உலகமே உள்ளங்கைக்குள் வந்துவிட்டது' என அனைவரும் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் ஒரே ஒருவர் மட்டும் சற்று மாற்றி யோசித்தார். அந்த நபர் இன்று உலகப்பணக்காரர் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ள ஜெப் பெசோஸ். உலகத்தையே உள்ளங்கைக்குள் கொண்டுவர முடியும் எனும் போது நுகர்வோர் சந்தையைக் கொண்டுவர முடியாதாயென்ன... இந்த கேள்விக்கு விடையாகக் கிடைத்த பதில் தான் இணைய வணிக சாம்ராஜ்ஜியமாக உலகெங்கும் இன்று கொடிகட்டிப் பறக்கும் அமேசான்.
பொதுவாக உலகசாதனையாளர் என்றாலே அவர் பள்ளிப்படிப்பையோ அல்லது கல்லூரிப்படிப்பையோ பாதியில் கைவிட்டிருப்பார் என்பது போன்ற ஒரு எண்ணம் இங்கு விதைக்கப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் தவிடுபொடியாக்கும் வண்ணம் ஜெப் பெசொஸ் வாழ்க்கை பயணம் உள்ளது. ஜெப்பிற்கு நான்கு வயது இருக்கும் போதே அவர் தாயார் விவாகரத்து வாங்கி மறுமணம் செய்கிறார். தாயார் மற்றும் வளர்ப்பு தந்தை அரவணைப்பிலேயே வளர்கிறார் ஜெப் பெசொஸ். ஜெப்பின் வளர்ப்பு தந்தை ஒரு பொறியாளர். அதனால் அவருக்கும் இளம் வயதிலேயே அத்துறை மீது தீராத ஆர்வம் ஏற்படுகிறது. பள்ளிப்படிப்பை முறையாக முடித்து கல்லூரியில் எலெக்ட்ரிக்கல் மற்றும் கணினித்துறையில் பட்டம் பெறுகிறார். படித்து முடித்தவுடன் நல்ல வேலை, கை நிறைய சம்பளம், அடுத்தடுத்து பதவி உயர்வு என ஜெப் பெசொஸ் வாழ்க்கை பயணிக்கிறது. இணையதளப் பயன்பாடு அதிகரிப்பு மற்றும் அதில் ஏற்பட்ட புரட்சி ஜெப்பை மாற்றி யோசிக்க வைத்தது. உடனே வேலையை விடுகிறார். உடன் இருந்தவர்கள் முட்டாள்தனமான முடிவு என எச்சரிக்கின்றனர். உடன் இருந்தவர்களின் எச்சரிக்கை இனி ஒவ்வொரு நகர்வையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும் என்பதை அவருக்கு உணர்த்தியது. நிறுவனத்திற்கு பெயர் வைப்பதில் தொடங்கி என்ன மாதிரியான பொருட்கள் விற்பனை செய்யலாம் என்பது வரை ஆழ்ந்து யோசிக்கிறார்.
ஜூலை 5 1994ம் ஆண்டு புத்தகம் விற்பனை செய்யும் இணைய நிறுவனமாக அமேசான் தொடங்கப்படுகிறது. புத்தகம் ஆர்டர் செய்தால் வீடு தேடி வந்து கொடுக்கப்படும் என்ற முறை பெரும் வரவேற்பை பெற்றது. விற்பனை சூடு பிடிக்க தொடங்கியது. அமேசான் நிறுவனத்தின் வளர்ச்சி முதலீட்டார்களை தன் பக்கம் ஈர்த்தது. முதலீட்டாளர்கள் வருகையைத் தொடர்ந்து அமேசான் மின்னணு சாதனங்கள், துணிகள், குழந்தை விளையாட்டு பொருட்கள், மளிகை பொருட்கள் என பல துறைகளில் தன்னுடைய கரங்களை ஆழப்பதித்தது. அதனைத் தொடர்ந்து புத்தக வாசிப்பிற்கு கிண்டில், சினிமாவிற்கு அமேசான் ப்ரைம் எனத் தொடர்ந்து புது முயற்சிகள் செய்து நாள்தோறும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களைத் தன் பக்கம் ஈர்த்தது.
ஜெப் பெசொஸ் தொழில் நுணுக்கங்கள் தெரிந்த ஒரு அதிமூளைக்கு சொந்தக்காரர். நிறுவனம் தொடங்கியபோது வாடிக்கையாளர்களை உளவியல் ரீதியாக நம் நிறுவனத்திற்கு நிரந்தர வாடிக்கையாளராக்க வேண்டும் என்று குறைந்த விலை, அதிரடித் தள்ளுபடி என சிறு நட்டத்தில் விற்பனை செய்து அதற்கு எல்லாம் சேர்த்து தற்போது மொத்தமாக அறுவடை செய்து கொண்டிருக்கிறார். உலக அளவில் இன்று 180 மில்லியன் மக்கள் அமேசான் நிறுவனத்தின் வாடிக்கையாளராக உள்ளனர்.
ஜெப் பெசொஸ் வெற்றிக்கான வழிகள் குறித்து கூறியவை "நீங்கள் முழு விருப்பத்துடன் எந்தவொரு வேலையையும் செய்யாத வரை அதில் உங்களால் சிறந்த பங்களிப்பை அளிக்கமுடியாது. எப்போதும் உங்கள் மனம் சொல்வதைக் கேளுங்கள். முடிவு எடுக்கும் போது உங்கள் மூளைக்கு வேலை கொடுக்காதீர்கள். உங்கள் கனவுகள் மீது முழுக்கவனத்தையும் செலுத்துங்கள். ஒரு கட்டத்தில் துணிந்து சில முடிவுகளை நீங்கள் எடுக்க வேண்டிவரும். அதனைச் சரியாக செய்யுங்கள். உங்களை நீங்கள் சரியாக கட்டமைத்து கொள்ளுங்கள். வெற்றியாளர்கள் வரிசையில் உங்களுக்கான இடம் காத்திருக்கிறது”...