தான் சந்தித்த பல்வேறு கவுன்சிலிங் பற்றியும், பல வகையான மனிதர்களுக்கு அவர் கொடுத்த கவுன்சிலிங் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக ஜெய் ஜென் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில், சாதியை விட்டுக்கொடுக்காத பெற்றோருக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி விளக்குகிறார்.
தனது மகள் யாரோ ஒரு பையனை காதலிக்கிறார் என்று அப்பாவும், அம்மாவும் என்னிடம் வந்தார்கள். நல்ல பையனா? என்று கேட்டதற்கு, அதெல்லாம் தேவையில்லை மகளிடம் பேசி புரிய வையுங்கள் என்றனர். திரும்ப திரும்ப, பையனை பற்றி கேட்டாலும், அதற்கு பதிலளிக்காமல் மகளிடம் மட்டும் பேசி புரிய வையுங்கள் என்று மீண்டும் மீண்டும் கூறினர். தெளிவாக சொல்லுங்கள் என்று கேட்ட பிறகு, பெரும் யோசனைக்கு பிறகு, பையன் வேற ஜாதியைச் சேர்ந்தவர், இது ஒத்துவராது என்று அப்பா கூறினார். தனது ஜாதி மேல் ஜாதி என்றும், பையனுடைய ஜாதி தாழ்த்தப்பட்ட ஜாதி என்றும் கூறினார்.
காலேஜில் இரண்டு பேரும் படிக்கும் போது பழக்கமாகி இருவரும் காதலித்துள்ளனர். இப்போது அவர்கள் இருவரும் வேறு வேறு வேலையில் இருக்கின்றனர். திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு பெற்றோரிடம் சொல்ல அவர்கள் எதிர்த்திருக்கின்றனர். பையனை பற்றி தகவலை கேட்டாலும், பெண்ணின் பெற்றோர்கள் சொல்ல மாட்டிக்கிறார்கள். அந்த ஜாதியை பிடிக்கவில்லை என்ற வெறுப்புணர்வில் பையனை பற்றிய தகவலை என்னிடம் சொல்வதற்கு கூட அவர்கள் தயாராக இல்லை. பையன் நல்ல பையனாக தான் இருக்கிறான், ஆனால் அந்த ஜாதியில் இருப்பதால் தேவையில்லை என்று முதன் முதலில் பையனை பற்றி பாசிட்டிவாக சொல்கின்றனர். அவர்களிடம் நடத்திய உரையாடலில், பையன் நல்ல பையன், வேலையில் நல்ல சம்பளம் வாங்குகிறார் என்பது எனக்கு தெரிய வருகிறது.
பையன் வீட்டிலும் சாதி உணர்வோடு தான் இருக்கிறார்கள்., ஆனால், பையனுக்கு பிடித்திருப்பதால் இந்த திருமணத்திற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், பெண்ணுடைய அப்பா அம்மாவுக்கு இந்த திருமணத்திற்கு துளி கூட விருப்பமில்லை. இந்த காதல் விஷயம் தெரிந்த நாளில் மகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிடலாம் என்று யோசித்ததாலும், பின்பு மகளின் பாசத்தால் அதை விட்டுவிட்டதாகவும் மிகவும் இயல்பாக அப்பா சொல்கிறார். அந்த பெண்ணிடம் பேச ஆரம்பித்தேன். பெண்ணிடம் பேசிய வகையில் அவன் நல்ல பையன் தான். பையனிடம் பேசுவதற்கு முன்னால், அந்த பெண்ணின் அப்பா அம்மாவிடம் பேச ஆசைப்பட்டேன். தான் ஒரு மேல் ஜாதியில் பிறந்ததால், அந்த ஜாதியில் எப்படி திருமணம் செய்து வைக்க முடியும் என்ற நோக்கத்தில் அப்பா பேசுகிறார். பையனை பற்றி பேசினாலே அந்த அம்மா அவ்வளவு ஆக்ரோஷமாக இருக்கிறார்.
பையனிடம் பேச ஆசைப்படுவதாக நான் சொன்ன பிறகு, பெரும் யோசனைக்கு பிறகு பேசுவதற்கு அப்பா ஒப்புக்கொண்டார். அதன் பிறகு, பெண்ணின் மூலம் அந்த பையனை பார்க்கிறேன். நல்ல பையன் என்று எதையெல்லாம் நினைத்துக்கொண்டிருக்கமோ அதில் எல்லாம் அந்த பையன் பொருத்தமாக இருக்கிறான். எந்தவித கெட்ட பழக்கமும் இல்லாத, அநாவசியமாக செலவு செய்யாத, எளிமையான வாழ்க்கை முறையில் அந்த பையன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். திருமணத்திற்கு பிறகு, அவன் வைத்திருக்கும் எதிர்கால திட்டத்தை எல்லாம் அந்த பையன் சொல்கிறான். புத்தகங்களை படிக்கும் பழக்கங்களை கொண்ட அந்த பையன், வாழ்க்கையை பற்றிய புரிதலை கொண்டிருக்கிறான் என்பதை அவனிடம் பேசியதில் இருந்து தெரிந்தது. இரண்டு நாட்கள் கழித்து, பெண்ணுடைய அப்பா அம்மாவை வரவழைத்து பேச ஆரம்பித்தேன். மாப்பிள்ளையிடம் பேசினேன் என்று தான் ஆரம்பித்தேன். மாப்பிள்ளையா என்று அதிர்ச்சியடைந்தார். அதன் பின்னர், பையனிடம் தான் பேசினேன் என்றேன். நான் மாப்பிள்ளை என்றவுடன், அந்த அம்மாவுக்கு நான் என்ன சொல்ல வருகிறென் என்பது புரிந்துவிட்டது.
நீங்கள் ஒரு மாப்பிள்ளையை பார்ப்பீர்கள் என்றால் அவருக்கு என்ன என்ன தகுதிகள் வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறீர்கள் என்று கேட்டதற்கு, ஒரே ஜாதியில் இருக்க வேண்டும், நல்ல படிப்பு இருக்க வேண்டும், கெட்ட பழக்கங்கள் இருக்கக்கூடாது, பொருளாதாரம் நன்றாக இருக்க வேண்டும், என இப்படியாக ஒரு 13 பாயிண்ட்ஸ் சொன்னார்கள். நீங்கள் சொன்ன 13 பாயிண்ட்ஸ்களில் 12 பாயிண்ட்ஸ் அந்த மாப்பிள்ளை ஒத்துப்போகிறார். உங்களுக்கு ஓகேவா? என்று கேட்டதற்கு அவர்களும் சரி தான் என்றனர். அதன் பின்னர், இந்த பையன் அந்த ஜாதியில் பிறந்தது அவருடைய குற்றமா? உங்கள் மகள் உங்களுடைய ஜாதியில் பிறந்தது வரமா? என்று அவர்களிடம் கேட்டேன். இதை கேட்டவுடன், அந்த அம்மாவுக்கு கொஞ்சம் புரிந்துவிட்டது. நான் சொன்னதை மீண்டும் சொன்ன போது அவருக்கும் புரிந்துவிட்டது. இந்த ஜாதியில் பிறந்ததற்கு அந்த பையன் என்ன செய்ய முடியும்? அதே போல், உங்களுடைய ஜாதியில் பிறந்ததால் உங்களுடைய மகளுக்கு என்ன கிடைத்தது? என்றெல்லாம் சொன்ன போது அவர்களுக்கு கொஞ்ச கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது. இந்த பையன் அந்த ஜாதியில் பிறந்தது அவருடைய குற்றமா? என்று நான் சொன்ன அந்த கேள்வி அவரை ஆழமாக சிந்திக்க வைத்தது. அந்த அம்மாவும், ஜாதி பற்றை விட்டு உடையும் தருவாயில் இருக்கிறார். ஏனென்றால், ஜாதியை தவிர அந்த பையனுக்கு எல்லா தகுதிகளும் இருப்பதாக அவர்கள் உணர்ந்தனர்.
யோசனை செய்து அடுத்த நாள் வருவதாக சொன்ன அவர்கள், ஒரு வாரம் கழித்து அவர்கள் மூன்று பேரும் வந்தனர். மகளிடம் பேசியதில், அந்த பையனை தான் திருமணம் செய்துகொள்வதாக இருக்கிறார் என்று மகள் தீவிரமாக இருப்பதாக சொன்னார். இந்த பையன் அந்த ஜாதியில் பிறந்தது அவருடைய குற்றமா? என்று நீங்கள் கேட்ட கேள்வி மனசுக்குள் ஒரு மாதிரி இருப்பதாகவும் சொன்னார். பையனும் நல்ல பையனாக இருக்கிறான். மகள் விருப்பத்திற்கு மீறி நாம் என்ன செய்ய முடியும்? என்றார். அதற்கு நான், நீங்களும் ஒரு முறை பையனை பற்றி விசாரித்து சரியாக வந்தால் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு எடுத்துப்போகும்படி சொன்னேன். அதன் பின்பு, விசாரித்து பார்க்கும் போது பையன் நல்ல பையனாக இருக்கிறார். மகளுக்கு பிடித்துவிட்டது நாம் என்ன செய்ய முடியும் என்றார். அதற்கு நான், இந்த மனநிலையே தவறானது தான். இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொள்வது பெருந்தன்மை என்று நினைக்காதீர்கள். இந்த மனநிலையோடு ஒப்புக்கொள்வதற்கு ஒப்புக்கொள்ளாமலே இருக்கலாம். பையனுடைய குணாதியத்திற்கும், பெண்ணுடைய குணாதியத்திற்கும், அவர்களுக்குள் இருக்கும் விருப்பத்திற்கும் சரி என்றால் ஒப்புக்கொள்ளுங்கள். இப்போதும், நம் ஜாதி தான் மேல் ஜாதி, பையனுடைய ஜாதி கீழ் ஜாதி தான், ஆனால் நல்ல பையன் என்ற மனநிலையில் இருக்காதீர்கள். இந்த மனநிலையோடு திருமணம் செய்து வைத்தால் பின்பு பிரச்சனை தான் வரும் என்றேன். அதற்கு அவர், அதுவும் சரிதான் என்று சொன்ன பிறகு கவுன்சிலிங் அதோடு முடிந்தது. அதன் பிறகு, அவர்களுக்குள் திருமணம் நடைபெற்றுள்ளது.
ஒரு ஐந்தாறு வருடங்கள் கழித்து, ஒரு பொது இடத்தில் அப்பாவை சந்திக்கும் சூழல் ஏற்பட்டது. மகளும், மாப்பிள்ளையும் நன்றாக இருக்கிறீர்களா என்று கேட்டதற்கு அவர் சிரித்துக்கொண்டே அது தான் நீங்கள் முதலிலே மாப்பிள்ளை என்று சொல்லிவிட்டீர்களே என்றார். ஜாதி மேல் அதிகம் பிடிப்பு உள்ள அவரிடம், அந்த ஜாதியில் பிறந்ததற்கு அந்த பையன் தப்பு பண்ணான் என்ற நான் கேள்வி தான் இனிமேல் ஜாதியை பற்றி பேசக்கூடாது என்ற முடிவுக்கு வந்துவிட்டதாக சொன்னார். எங்கள் ஜாதியில் பார்த்திருந்தால் இப்படி ஒரு நல்ல மாப்பிள்ளைய பார்த்திருக்க மாட்டேன் என்றார். தலைமுறை தலைமுறையாக யாரோ சொன்ன அந்த வார்த்தையை நம்பிக்கொண்டு, கண்ணுக்கு முன்னால் தெரிகிற நல்ல மனிதர்களை இழக்கலாமா?.