Skip to main content

மாடர்ன் உடை பிடிக்காத கணவர்; சந்தேகித்த மனைவி - டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு: 28

Published on 13/10/2023 | Edited on 13/10/2023

 

detective-malathis-investigation-28

 

கணவன் மீது தவறாக சந்தேகப்பட்ட மனைவி பற்றிய வழக்கு குறித்து முதல் பெண் துப்பறிவாளர் மாலதி விவரிக்கிறார்

 

ஒரு பெண் நம்மிடம் கேஸ் கொடுக்க வந்தார். தான் மாடர்ன் உடைகளை அணிந்தால் தன்னுடைய கணவருக்கு பிடிப்பதில்லை என்றும், அதனால் அவருக்கு வேறு யாருடனோ தொடர்பிருக்க வாய்ப்பிருக்கிறது என்றும் கூறினார். அவர் குறித்த அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொண்டோம். அவரை 20 நாட்கள் பின்தொடர்ந்தோம். அவரிடம் தவறான நடவடிக்கைகள் எதுவும் இல்லை என்பதை அறிந்தோம். இதுபோன்ற வழக்குகளில் தவறாக எதுவும் இல்லை என்று சொன்னாலும் வழக்கு கொடுத்தவருக்கு கோபம் வரும். 

 

இப்போது விவாகரத்து பெறுவது என்பது சாதாரண விஷயமாகிவிட்டது. வெறும் 10 நாட்களில் பிடிக்கவில்லை என்று கூறி பிறந்த வீட்டுக்குப் பெண் வரும் நிகழ்வுகள் எல்லாம் நடக்கின்றன. இந்த வழக்கில் அந்தப் பெண்ணின் கணவர் குறித்த தவறான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. அதை அவருடைய மனைவியிடம் நாங்கள் தெரிவித்தோம். கணவன் மனைவி இருவரும் கிராமத்தில் இருந்து வந்தவர்கள். எனவே கணவரால் தன்னுடைய மனைவி நவீன உடைகள் அணிவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் இப்போது காலம் மாறிவருகிறது என்பதை அவர் உணரவில்லை. 

 

இன்று அனைவரும் நைட்டி அணிய ஆரம்பித்துவிட்டனர். எனக்கு திருமணமான காலத்தில் அப்படி இல்லை. கணவரிடம் உட்கார்ந்து பேசுமாறு மனைவிக்கு நான் அறிவுறுத்தினேன். சந்தேகத்தின் அடிப்படையில் வாழ்க்கையை வாழ்வது தவறு என்று கூறினேன். குழந்தைகளின் எதிர்காலத்துக்கும் அது நல்லதல்ல என்று எடுத்துரைத்தேன். நாங்கள் அவரோடு இதுபற்றி பேசினால் இவ்வளவு நாட்கள் நாங்கள் அவரைப் பின்தொடர்ந்தது தெரிந்துவிடும். அதனால் அவர்கள் இருவருக்கும் பெரிய பிரச்சனைகள் வரும். எனவே மனைவியை பேசச் சொன்னேன். 

 

அதன் பிறகு அவர்கள் இருவரும் பேசி சமாதான உடன்படிக்கைக்கு வந்தனர். கணவரின் விருப்பப்படி இனி தான் சேலையே அணியப்போவதாக அவர் தெரிவித்தார். கணவருடைய வழிக்கு மனைவி சென்றார். 10 வருடத்துக்கு முன்பு நடந்த விஷயம் இது. இப்போதும் இதுபோன்ற நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். சமுதாயம் இன்னும் முற்றிலுமாக மாறிவிடவில்லை.