தத்தெடுக்கப்பட்ட குழந்தைக்கும், தத்தெடுத்த தம்பதிக்கும் கொடுத்த கவுன்சிலிங் குறித்து குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் நம்மிடம் விவரிக்கிறார்.
கண்ணத்தில் முத்தமிட்டாய் படம் போன்ற நிஜ வாழ்க்கையில் நடந்த குழந்தை தத்தெடுப்பு பற்றிய நிகழ்வு இது. அந்த படத்தை பார்த்து இன்ஸ்பையர் ஆன ஒரு தம்பதி தங்களுக்கு குழந்தை இல்லை என்று ஒரு வயது குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர். பின்பு அந்த குழந்தை 11ஆம் வகுப்பு படிக்கும் போது தத்தெடுத்த உண்மையை உடைத்துள்ளனர். அதன் பிறகு நடந்த விளைவால் அந்த குடும்பத்தினர், என்னைச் சந்தித்தனர்.
முதலில் இந்த விஷயம் தெரிந்தவுடன் அந்த குழந்தைக்கு ஒரு வாரம் ஷாக்காக இருந்துள்ளது. பின்பு இவ்வளவு நாட்களாக தான் கேட்டு பெற்றோர்கள் செய்ய முடியாது என்று சொன்ன நினைவுகள் எல்லாம் அந்த குழந்தையை மிகவும் பாதிப்படைய செய்திருக்கிறது. இதற்கு முன்பு, அந்த குழந்தை கோபப்பட்டதே கிடையாது. ஆனால் இந்த விஷயம் தெரிந்த பின்பு, ரொம்ப கோப மனப்பான்மை வெளிப்பட்டுள்ளது. இது குறித்து அந்த குழந்தையிடம் பேசுவதற்கு முன்பு தத்தெடுத்த அந்த தம்பதி என்னிடம் தங்கள் குடும்பத்தில் இதுபோன்று யாரும் கோபப்படமாட்டார்கள் ஒருவேளை இது குழந்தையின் பரம்பரை குணாதீசியமாக இருக்குமா? கேள்வி கேட்டனர். அதற்கு நான், அந்த தம்பதியிடம், சின்ன வயதிலிருந்து அந்த குழந்தை முன்பு நடந்துகொண்ட விதங்கள்தான் இப்போது எதிரொலிக்கிறது. அது இந்த குழந்தைக்கு மட்டுமில்லை எந்த குழந்தையை எடுத்துக்கொண்டாலும் அந்த குழந்தைகள் பார்ப்பதைத்தான் செய்வார்கள் என்றேன். மேலும், அது பரம்பரை குணமும் இல்லை என்றேன். இப்படிப்பட்ட எண்ணங்கள் இருந்தால் கண்டிப்பாக குழந்தையை மாற்ற முடியாது என்று அறிவுரை கூறினேன்.
அதன் பின்பு, அந்த குழந்தையிடம் பேசும்போது என்னை எதற்கு முதலில் தத்தெடுத்தார்கள்? என்று அந்த குழந்தை கேட்டது. இதற்கு பதில், வளர்த்தவர்களிடம்தான் இருக்கிறது என்று மூவரையும் உட்கார்ந்து பேசச் சொன்னேன். அந்த குழந்தை மீண்டும் அதே கேள்வியை அவர்கள் இருவரை பார்த்து கேட்டதற்கு, கல்யாணமாகி குழந்தை இல்லாததால் தங்கள் வாழ்க்கையை அழகாக மாற குழந்தை தேவைப்பட்டதால் தத்தெடுத்தோம் என்று பதிலளித்தார்கள். அதற்கு அந்த குழந்தை, தத்தெடுத்த பிறகு நான் உங்கள் குழந்தைதானே பின்பு ஏன் உண்மையை சொன்னீர்கள் என்று கேட்டாள். அதற்கு வளர்த்தவர்கள், உறவினர்களுக்கு இந்த விஷயம் தெரியும். ஒருவேளை அவர்கள் மூலம் இந்த விஷயம் தெரிந்தால் நீ கஷ்டப்படுவ அதனால்தான் சொன்னோம் என்றார்கள்.
இதற்கு அந்த குழந்தை, தான் ஆசைப்பட்ட சின்ன சின்ன விஷயங்கள்கூட கிடைக்காததற்கு காரணம் சொந்த அப்பா, அம்மா இல்லை என்பதால்தான் என்று வேதனையுடன் சொன்னாள். குழந்தை அப்படி சொன்னதும் வளர்த்தவர்கள், அப்படியெல்லாம் இல்லை சாப்பிட, குளிக்க, படிக்க இதுபோன்ற விஷயங்களுக்கு நீயாக பழக வேண்டுமென்றுதான் சில விஷயங்களை தவிர்தோம் என்றனர். பின்பு அந்த குழந்தை, நான் வயதிற்கு வந்த நேரத்தில்கூட எமோஷனல் சப்போர்ட்கூட ஒரு அம்மாவாக நீங்கள் எனக்கு தரவில்லை என்றது. இதையேல்லாம் கேட்ட பிறகு நான், வளர்த்தவர்களிடம் உங்க குழந்தையிடம் பாசமாக பேசுங்கள் என்றேன். அவர்களும் முடிந்த அளவிற்கு குழந்தையின் மீதுள்ள பாசத்தை வெளிப்படுத்தி பேசினார்கள். ஆனாலும், அந்த குழந்தையின் மனம் அதை ஏற்க மறுத்தது. பிறகு அந்த பெற்றோர்களிடம் இதுவரை அந்த குழந்தை மிஸ் பண்ண எல்லாத்தையும் உங்கள் செயல்கள் மூலம்தான் கொடுக்க முடியும் என்றேன். மேலும், பெரியவர்களான நமக்கே சில நேரம் அம்மா மடியில் தூங்க ஆசை இருக்கும். அதுபோல குழந்தை கேட்பதையெல்லாம் செய்து பாசம் காட்டுங்கள் என்றேன். இதேபோல் அந்த குழந்தையிடம் நீ இதுவரை ஆசைப்பட்ட எல்லாத்தையும் ஒரு பெரிய நோட் எடுத்து எழுது அதையெல்லாம் அவர்கள் செய்வார்கள். எதாவது அப்படி கிடைக்கவில்லையென்றால் என்னிடம் கேட்டதுபோல் ஓபனாக கேட்டுவிடு. சில விஷயங்களில் பெற்றோர்கள் கண்டிப்புடன் நடந்துகொள்வார்கள். அதற்காக நீ அவர்களை வளர்த்தவர்கள் என்று சிந்திக்கக் கூடாது. இந்த ஜென்மத்தில் அவர்கள்தான் உனக்கு அப்பா, அம்மா கண்டிப்பாக உனக்கு பிடித்த விஷயத்தை செய்வார்கள் என்று கூறி அனுப்பி வைத்தேன். இதற்கு பிறகு அந்த குழந்தையின் பெற்றோர்கள் கையில்தான் எல்லாம் இருக்கிறது.