Skip to main content

ஹவுஸ் ஓனர் உடன் நெருக்கம்;மனைவியின் முடிவால் அதிர்ந்த கணவன் - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்:96

Published on 22/10/2024 | Edited on 22/10/2024
advocate-santhakumaris-valakku-en-96

குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம் 

ஜீவிதா என்ற பெண்ணுடைய வழக்கு இது. இப்பெண் ஆற்காடு பகுதியைச்சேர்ந்தவர். இவரின் அப்பா காவல் துறையில் பணியாற்றி வருகிறார். ஜீவிதாவுக்கு மும்பையில் நல்ல சம்பாத்தியத்துடன் வேலை பார்க்கும் ஒரு பையனை 65 பவுன் நகை போட்டு அவளது பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கின்றனர். சில பிரச்சனைகள் காரணமாக ஜீவிதாவின் கணவர் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாக என்னிடம் வந்தனர். அந்த நோட்டீஸில், தனது வீட்டு ஓனர் பெண், இன்னும் நிறைய பெண்களுடன் தொடர்பிருப்பதாக மனைவி சந்தேகப்படுகிறாள். சில நேரங்களில் தனது மொபைலை திருட்டுதனமாக எடுத்து அதிலுள்ள நம்பர்களை விசாரிக்கிறாள். அதனால் மன உளைச்சல் ஆகிறது விவாகரத்து வேண்டும் என்று அதில் இருந்தது. 

அதன் பிறகு ஜீவிதாவிடம் பேசியபோது, சில பார்ட்டிகளுக்கு கணவன் மனைவியாக சென்றிருக்கும்பொது ஜீவிதாவைத் தனியாக விட்டுவிட்டு அங்குள்ள சில பெண்களிடம் மட்டுமே அவளின் கணவர் பேசியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அவர்கள் தங்கியிருக்கும் வீட்டின் ஓனர் பெண் என்பதால், அந்த ஓனரின் கணவர் இல்லாத சமயத்தில் அந்த பெண் வாடகை கேட்டு வீட்டிற்கு வரும்போதெல்லாம் ஜீவிதாவின் கணவர் வீட்டில் இருந்திருக்கிறார். வங்கிக் கணக்கில் வாடகை செலுத்திவிடலாம் என்று ஜீவிதா கூறுகிறாள். அதற்கு அவர் மறுத்திருக்கிறார். சில நேரங்களில் அந்த ஓனரம்மாவைப்போல் ஜீவிதாவும் நவநாகரீக உடை அணிய வேண்டும் என்று அவளின் கணவர் கூறியிருக்கிறார். அதற்கு ஜீவிதா, முன்பு நான் எப்படி இருந்தேன் என்று பார்த்துதானே திருமணம் செய்து கொண்டீர்கள். இப்போது ஏன் அந்த பெண் மாதிரி உடையணியவேண்டும் என்று வற்புறுத்துகிறீர்கள் என்றிருக்கிறாள். 

ஒரு நாள் இரவு தனது கணவர் படுத்திருக்கும்போது அடிக்கடி அவரின் மொபைலுக்கு அழைப்பு வந்திருக்கிறது. ரிங் டோன் சத்தத்தால் தூக்கத்தை தொழைத்த ஜீவிதா கணவரின் மொபைலை எடுத்து பேசியிருக்கிறாள். ஆனால் ஜீவிதாவின் குரலை கேட்டதும் அழைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. சந்தேகத்தில் கணவரின் மொபைலில் இருந்த பெண்களின் நம்பர்களை தனியாக ஒரு நோட்டில் எழுதி தனது அப்பா போலீசாக இருப்பதால் விசாரிக்க கொடுத்திருக்கிறாள். விசாரித்ததில் தனது கணவர் நிறைய பெண்களுடன் தொடர்பிலிருப்பது தெரிய வந்திருக்கிறது. அதன் பின்பு ஜீவிதாவின் அப்பா தனது மருமகனுக்கு சென்னையிலுள்ள பெரிய நிறுவனம் ஒன்றில் வேலை வாங்கி தனது மகளையும் அவளின் கணவரையும் தனது பேத்தியையும் சென்னையிலேயே குடியமர்த்தியிருக்கிறார். அதன் பிறகும் தொடர்ந்து பெண்களுடான தொடர்பை ஜீவிதாவின் கணவர் கைவிடவில்லை. அதனால் இருவருக்கும் இடையே சில வாக்குவாதங்கள் நடந்திருக்க அவளின் கணவர் விவாகரத்து கேட்டுள்ளார். 

இதையெல்லாம் கேட்ட பிறகு நான் ஜீவிதாவிடம் அவருடன் உனக்கு வாழ விருப்பம் இருக்கிறதா? என்றேன். அவளும் தனது கணவருடன் வாழவேண்டும் என்று உறுதியாக இருந்தாள். அதன் பிறகு அவளின் கணருக்கும் அவளுக்கும் கவுன்சிலிங் நடைபெற்றதில் ஜீவிதாவின் கணவர் அவளுடம் குடும்பம் நடத்துவதில் விருப்பம் இல்லை என்ற முடிவிலேயே இருந்தார். இப்படியே ஒரு வருடங்கள் கழிந்தது. அதன் பிறகு ஜீவிதாவுக்கும் அவளது குழந்தைக்கும் பணத் தேவைகள் இருப்பதால் மெயிண்டனன்ஸ் வழக்கு தொடர்ந்தோம் அதில் ஒரு பெரிய தொகையை தர சொல்லி ஜீவிதாவின் கணவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அவர் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தார். அப்போது முன்பு உத்தரவிட்ட தொகையைவிட குறைத்து தர நீதிமன்றம் உத்தரவிட்டது ஆனால் அதையும் அவரால் தர முடியாமல். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுக்கு சென்றார் அங்கு கண்டிப்பாக ஜீவிதாவுக்கும் அவளது குழந்தைக்கும் தர வேண்டிய பணத்தை கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வந்தது. இதற்கிடையில் அவர் பணம் தராமல் இழுத்தடித்தால் மொத்தமாக ரூ.35 லட்சத்தை ஜீவிதாவிடம் கொடுத்தான். பின்பு அவள் அந்த பணத்தை வாங்கி கொண்டு தனது மகளின் படிப்பு செலவுக்காக வைத்து கொண்டு விவாகரத்து ஒப்புக்கொண்டாள், இந்த வழக்கும் முடிவடைந்தது.