Skip to main content

காதலனை நினைத்து நோ சொன்ன மனைவி; தொடர் முயற்சியில் கணவர் அடைந்த வெற்றி - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்:91

Published on 08/10/2024 | Edited on 08/10/2024
 advocate-santhakumaris-valakku-en-91

குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம்.  

குகன் என்ற நபரை பற்றிய வழக்கு இது. இவர் நன்றாக படித்து நல்ல வேலையில் இருக்கக்கூடியவர். அவ்வப்போது குகனுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பும் வந்துள்ளது. இந்த சூழலில் குகனுக்கு மேட்ரிமோனி ஆப் மூலம் அவனது பெற்றோர் திருமண வரன் பார்த்துள்ளனர்.  இந்திய முறைப்படி இருக்கக்கூடிய நன்றாக படித்த மற்றும் வேலை செய்யக்கூடிய பெண்ணை குகன் எதிர்பார்த்திருக்கிறான். அப்படி ஒரு பெண்ணை மேட்ரிமோனி தேடி கண்டுபிடித்து அவனது பெற்றோர் பார்த்துள்ளனர். அதே போல் பெண் வீட்டாருக்கும் பையனை பிடித்திருந்திருக்கிறது.

ஆனால் அந்த பெண்ணின் அம்மா, கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் மென்றால் மாப்பிள்ளையும் பெண்ணும் இருக்கிற வீட்டிற்கு மாப்பிள்ளையின் பெற்றோர்கள் வரக்கூடாது. அதே போல் திண்டுக்கல் அருகிலுள்ள மாப்பிள்ளையின் சொந்த ஊருக்கு எனது மகளை அழைத்துச் செல்ல கூடாது. மாப்பிள்ளையின் அப்பா, அம்மா என் மகளுக்குப் பிறக்கும் குழந்தையைத் தொடக்கூடாது. குழந்தைக்காக மருத்துவமனையில் என் மகள் இருந்தால் அதற்கான செலவை மாப்பிள்ளைதான் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று பல கண்டீசன்களை வைத்துள்ளார். அதற்கு அந்த பையனும் அவனது பெற்றோரும் காலப்போக்கில் இதையெல்லாம் சரி செய்துகொள்ளலாம் என்றும் பையன் எதிர்காலத்தில் வெளிநாட்டில் இருக்கப்போவதால் அந்த கண்டீசனை பெரிதாக நினைக்காமல் திருமணத்திற்கு ஒப்புக்கொள்கின்றனர். 

பெண்ணின் அம்மா சொன்ன கண்டீசனை ஏற்றுக்கொண்ட குகன், அந்த பெண்ணுக்கு கால் செய்து பேச முயற்சிக்கிறான். அப்போது அந்த பெண் திருமணத்திற்கு முன்பு எனக்கு பேச விருப்பமில்லை அப்பா, அம்மா சொன்னதன் காரணமாகத்தான் நானும் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டேன் என்று சொல்லி இருக்கிறாள். நடப்பதை எல்லாம் திருமணத்திற்குப் பிறகு சரி செய்துகொள்ளலாம் என்று குகன் தனக்குத்தானே சமாதானப்படுத்திக்கொண்டு திருமணத்திற்கு தயாராக ஆரம்பித்தான். அதே போல் திருமணமும் நன்றாக முடிந்தது.

பின்பு மனைவியுடன் கொடைக்கானல் சென்ற குகன், தனது மனையுடன் பழக முயற்சிக்கிறான். இருந்தும் அந்த பெண் கொஞ்சம்கூட குகனுக்கு அதற்கான இடம் கொடுக்கவில்லை. இது ஒருபுறம் வெளியில் நடக்க இருவருக்கும் இடையேயான தாம்பத்திய உறவுக்கும் அந்த பெண் இடம் கொடுக்காமல் இருந்திருக்கிறாள். அதற்கு குகன் விளக்கம் கேட்டால் எனக்கு செக்ஸுக்கான ஆர்வம் உன்னுடன் வரவில்லை என்று பதிலளித்திருக்கிறாள். எப்போதும்போல குகன் பழக கொஞ்சம் டைம் கொடுக்க வேண்டும் என்று மீண்டும் தனக்குத்தானே பதிலளித்துப் புரிந்துகொள்கிறான்.

சில நாட்களுக்குப் பிறகு தன்னுடைய வேலையை பார்ப்பதற்காக அந்த பெண் பெங்களூர் செல்கிறாள். அதேபோல் குகனும் டெல்லிக்குச் சென்று தனது வேலையை பார்த்திருக்கிறான். அப்போது அவனுக்கு லண்டன் சென்று வேலை செய்ய ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. லண்டன் செல்வதற்குள் தன்னுடைய மனைவியுடன் சில நாட்களை கழிபோம் என்று பெங்களூர் வந்து மனைவி தங்கியிருந்த ஹோட்டலில் தங்கியிருக்கிறான்.

ஆனால் அவனுடைய மனைவி அலுவலகத்தில் வேலை இருப்பதாகக் கூறி குகனை பார்க்க மறுத்திருக்கிறாள். பின்பு குகன் தனது மனைவியிடம் நான் லண்டன் செல்லும்வரை என்னுடன் வந்து நான் தங்கியிருக்கும் பூனாவில் இருக்கும் வீட்டில் என்னுடன் இரு என்று சொல்லி இருக்கிறான். பின்பு அவனது மனைவியும், மாமியாரும் பூனா வீட்டிற்கு வந்து தங்க தொடங்கினர். அங்கு இருக்கும் போது அம்மாவும் மகளுமாக சேர்ந்து ஒரு மனிதனுக்கு தரும் சாதாரண மரியாதையைக் கூட குகனுக்கு தராமல் இருந்துள்ளனர். இதற்கிடையில் அங்குள்ள குகனைப் பிடிக்காத சிலர், குகனுக்கும் அங்கிருக்கும் ஒரு சின்ன பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக புகார் கூறியிருக்கின்றனர். இதையடுத்து குகனின் மனைவி அவனிடம் செக்ஸுக்காக அழையும் பையன் நீ என்று அசிங்கமாகத் திட்டி சண்டை போட ஆரம்பித்துள்ளார். ஆனால் குகன் திருமணமாகி இத்தனை நாட்களாகியும் நான் உன்னை தொட்டதுகூட இல்லை என்று கூறி பதிலுக்கு சண்டையிட்டுள்ளான். சண்டை இருவருக்கும் முற்றிப்போக, உன்னை விட்டு லண்டனுக்குச் சென்றால்தான் நிம்மதி என்று கோபத்தில் குகன் சொல்லவும் மீண்டும் தனது அம்மாவை அழைத்துக்கொண்டு பெங்களூருக்கு அந்த பெண் சென்றுள்ளார். 

அதன் பிறகு லண்டன் சென்ற குகன் மனைவிக்கு, எப்படி இருக்க? என்று மெயில் அனுப்புகிறான். அந்த பெண் அதற்கு, யார் நீ? என்று பதில் அனுப்பி கோபத்துடன் பேச தொடங்கியிருக்கிறாள். தொடர்ந்து பேசுகையில் நான் இப்படித்தான் இருப்பேன் இஷ்டம் இருந்தால் இரு இல்லையென்றால் என்னைவிட்டு போ என்று அவள் கூற அதற்கு குகன் பிறகு ஏன் என்னை திருமணம் செய்து கொண்டாய் என கேட்டிருக்கிறான். அதற்கு அந்த பெண் நான் பால் என்பவருக்குக்காக்கக் காத்திருந்தேன். ஆனால் உன்னுடன் திருமணமாகிவிட்டது என்றாள். இதை திருமணத்திற்கு முன்பே சொல்லியிருக்கலாமே என்று யார் அந்த பால் என்று குகன் விசாரிக்க பால் தனது முன்னாள் காதலன் என்றும் இப்போது அவனுக்கு மூன்றாவது திருமணம் நடந்துவிட்ட வருத்தத்தில் இருப்பதாக அந்த பெண் சொல்லி இருக்கிறாள். மேலும் அந்த பெண், உன்னை விட பால் பெட்டரான நபர் என்று சொன்னதும் குகன் மிகவும் வருத்தப்பட்டிருக்கிறான். இதையடுத்து மூன்று மாதங்கள் கழித்து குகன் தனது பெற்றோரிடம் பேசும்போது, மனைவியுடன் நடக்கும் சண்டைகளை மறைத்து அவள் திருந்திவிடுவாள் என்ற பதிலை தனக்குத்தானே சொல்லி ஆறுதல் அடைந்துள்ளான்.

இப்படியே ஒரு வருடம் கடந்த பிறகு மீண்டும் மனைவியிடம் பால் என்பவருக்குத் திருமணமாகிவிட்டது இன்னும் ஏன் அவனையே நினைத்துக்கொண்டு இருக்கிறாய் நமது வாழ்க்கை தொடங்க ஆரம்பிப்போம் என்று மனைக்கு மெயில் அனுப்பியுள்ளான். அந்த பெண் அவசரமாக இருந்தால் உன் அம்மாவிடம் போ என்று அசிங்கமாகப் பேசி பால் இடத்தில் வேறொருவரை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை என்று குகனிடம் கூறியிருக்கிறாள். இதனால் மனவுளைச்சளுக்கு ஆளான பால் விவாகரத்து கேட்டுள்ளான். அப்போது அந்த பெண் நான் யோசித்து சொல்கிறேன் என்று கூற மீண்டும் ஆறு மாதங்கள் கழித்து குகன் கேட்கும்போது அந்த பெண்ணிடம் இருந்து பதில் வராமல் இருந்துள்ளது.

அதைத்தொடர்ந்து இந்தியாவிற்குத் திரும்பிய குகன் பெற்றோருடன் வந்து என்னைச் சந்தித்து நடந்ததைக் கூறினான். பின்பு அந்த மெயில் எல்லாவற்றையும் வைத்து குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பினோம் அதைப் பார்ந்த அந்த பெண் அதற்கும் பதிலளிக்காமல் 3,4 மாதம் குகனை அலைக்கழித்தாள். இதையடுத்து அந்த பெண் வேலை செய்யும் அலுவலகத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய பிறகு அப்போதும் அவள் பதிலளிக்கவில்லை. அதனால் எக்ஸ் பார்ட் முறையில் மனு அளித்தோம் தொடர்ந்து அந்த பெண் வரமால் இருந்ததால் நீதிமன்றம் வழக்கை எக்ஸ் பார்ட் டீக்ரீ முறையில் மாற்றி குகனின் விவாகரத்துக்கு உத்தரவளித்தது. இப்படித்தான் இந்த வழக்கு முடிவடைந்தது.