குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம்.
சரண் என்பவருடய வழக்கு இது. ஒரே பையன், பிஸினஸ் பார்க்கிறார். ஜாதக பொருத்தம் பார்த்து ஒரு பெண் அமைந்து, பெரியோர்களால் நிச்சயத் தேதி முடிவாகிறது. ஆனால், பெண்ணோ நிச்சயத்தில் அவ்வளவாக விருப்பம் காட்டாமல் இருக்கிறாள். ஒரு நெருக்கம் இல்லை. புகைப்படக்காரர்கள் போட்டோ எடுக்கும்போதும் கூட சரியான ஒத்துழைப்பு இல்லை. ஒருவித வெறுமையாக இருக்கிறாள். திருமணம் பின்பு சரியாகி விடும் என்று சரண் நினைக்கிறார். முதலிரவிலும் தங்களுக்கு செய்திருந்த அலங்காரங்கள் எல்லாவற்றையும் மிகவும் கோபமாக தூக்கி வீசுகிறாள். இதெல்லாம் சரணுக்கு வேதனையாக இருக்கிறது. எவ்வளவு அன்பாக பேசியும் அவளிடம் சரியான பதிலில்லை. கணவன் மனைவி ஒற்றுமையாக இல்லாமல் இருப்பதை சந்தேகித்து சரணுடைய அப்பா அவனை விசாரிக்கிறார். மனம் தாங்காமல் சரணும் சொல்லி விடுகிறார். அவர் பெண் வீட்டினருக்கும் சொல்லி பெண்ணின் தந்தை அவளிடம் விசாரிக்க அவள் ஏதோ சமாளித்து விடுகிறாள்.
தேனிலவுக்கு அந்த பெண் தன் தம்பி இருக்கும் ஆஸ்திரேலியாவிற்கு செல்ல வேண்டும் என்று விருப்பம் கொள்ள அங்கேயே போகிறார்கள். அங்கும் தம்பியுடனே சுற்றுவது என்று கூட வருகிறான். இருவரும் அங்கே மனமில்லை என்றாலும் சேர்ந்து இருந்து விடுகிறார்கள். அதற்கு பின் சென்னையில் தனி வீடு பார்த்து போய் விடுகிறார்கள். அங்கே அவள் கர்ப்பமாகிறாள். சரண் மற்றும் அவரது பெற்றோருக்கு அவ்வளவு மகிழ்ச்சி. ஆனால் அந்த பெண்ணிற்கு இந்த குழந்தை வேண்டாம் என்றும் ஒரு இரண்டு வருடம் நன்கு சேர்ந்து வாழ்ந்த பின்னர் பெற்று கொள்ளலாம் என்று அழிக்க நினைக்கிறாள். இது சரணால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சரண் பெற்றோர் பார்க்க வந்திருந்த போதும் கூட அவர்களிடம் சரியாக முகம் குடுத்து பேசவில்லை. அவள் பின்னர் தன் அம்மா அப்பாவை பார்க்க வேண்டும் என சொல்லிவிட்டு பாட்டி வீட்டிற்கு சென்று விடுகிறாள். போனவள் பத்து நாட்கள் கழித்து வருகிறாள். டாக்டர் செக்கப் கேட்டதற்கு தன் குழந்தை நிற்கவில்லை என்று சொல்லி விடுகிறாள்.
அதில் ஆரம்பித்து இரு வீட்டிலும் புரிதல் இல்லாமல் போய் அடிக்கடி பிரச்சனை, தகராறு என்று ஆகிறது. இரண்டு மாதம் அப்படி போக, கடைசியில் அந்த பெண் சரணுடன் போய் வாழ மாட்டேன் என்று சொல்லி விடுகிறாள். பெற்றவர்களும் சரணும் சேர்ந்து வாழ அறிவுரை சொல்லி, இனிமேல் புதிதாக சேர்ந்து வாழலாம் என்று பலவாறு பேசி அனுப்பி வைக்கிறார்கள். அவனுடன் வந்த பின்னர் தன் தோழிக்கு கல்யாணம் பெங்களூரில் நடக்கிறது. போய் பார்க்கப் போகிறேன் என்று நகையை லாக்கரில் இருந்து எடுக்கிறாள். மாமனார் வந்து பார்த்த போது அவரிடம் சொல்ல, அவர் எடுத்து போகும் நகையை குறித்து வைக்க சொல்கிறார். அவரிடம் நீங்கள் எனக்கு போட்ட வைர நெக்லஸ் ரொம்ப பிடித்தது மாமா. நான் என்ன என் நகை, உங்கள் நகை என்று பிரித்தா பார்க்கிறேன் என்று அன்பாக பேச அவரும் இறங்கி எது வேண்டுமோ எடுத்து செல்லுமாறு சொல்கிறார். ஆனால் இவளோ அவர்கள் நகையை வைத்து விட்டு தன் அம்மா வீட்டில் போட்ட நகையை எடுப்பது போல நடித்து பையன் வீட்டு நகை எல்லாமே எடுத்து சென்று விடுகிறாள். அதன் பின்னர் திரும்பி இங்கே வரவே இல்லை.
இரண்டு வருடம் மேல் ஆனது. அடுத்து சரண் குடும்பம் மேல் வரதட்சணை கொடுமை, மாமியார் கொடுமை, என்று எல்லா கேஸ் போட்டு, பெண்ணின் அப்பா சரணுக்கு கார் வாங்கிக்கொள்ள சொல்லி அன்பளிப்பாக கொடுத்த இருபது லட்சத்தையும் இவர்கள் வேண்டுமென்றே வாங்கி கொண்டு வீட்டை விட்டு தன்னை துரத்தி விட்டதாக வேறு புகார்கள். போலீஸ் கைது செய்யும் வரை வழக்கு ஆகிறது. எல்லாருக்கும் பெயில் வாங்கி, ஸ்டேஷனில் கையெழுத்து வாங்கி வழக்கு மேல் வழக்கு போட்டு இறுதியில் சரண் வெறுத்து போய் அவரே விவாகரத்து பதிவு செய்தார். அந்த பெண்ணிற்கும் விவாகரத்து தான் வேண்டும் என்றாலும் அவர்கள் மேல் போட்ட எல்லா வழக்கையும் வாபஸ் பெற வேண்டும் என்றால் தனக்கு ஐந்து கோடி பணம் வேண்டும் என்று கேட்டாள். மீடியேஷன் போட்டும் பலனில்லை. வழக்கை வேண்டுமென்றே சுப்ரீம் கோர்ட்டிற்கு அனுப்பி அங்கு மீண்டும் மீடியேஷன் போட்டு பேசியதில் ஒரு கோடியே இருபது லட்சத்திற்கு ஒத்துக்கொண்டு மியூச்சுவல் கன்செண்ட் போட்டு விவாகரத்து வழங்கப்பட்டது. இப்பொழுது சரண் இரண்டாவது திருமணம் செய்து சந்தோஷமாக இருக்கிறார். அந்த பெண் தன் தோழியுடன் சேர்ந்து ஏதோ கடை வைத்திருக்கிறாள் என்று தெரிய வந்தது.