குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம்.
ரமேஷ் ஆர்மியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். மூன்றரை வருடமாக வழக்கு ஒன்றை நடத்தி அதில் பயனளிக்காமல் ரொம்ப கஷ்டத்திற்குப் பிறகு தான் என்னை சந்திக்கிறார்கள். பொதுவாக மற்றவர்கள் நடத்திய வழக்கை நான் எடுக்கமாட்டேன். இந்த வழக்கை ஒருமுறையாவது பார்த்துவிட்டு அதன் பிறகு முடிவு செய்யுங்கள் என்று ரமேஷினுடைய அண்ணன் என்கிட்ட சொன்னார். அதன் பின்னர், லீவ் நேரத்தில் ரமேஷ் என்னை சந்தித்து அவருடைய கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.
ரமேஷ் சேர்ந்து வாழ வேண்டும் என ஒரு கேஸ் போட்டதாகவும், தனக்கும் தனது குழந்தைக்கும் மெயிண்டெனன்ஸ் வேண்டும் என மனைவி கேஸ் போட்டதாகவும் சொன்னார். மேலும், ரமேஷினுடைய அப்பா ஆர்மியில் இருந்து ரிட்டர்யர்டாகி இறந்த பின், அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட இடத்தில் என்னுடைய மகனுக்கு பாகம் கேட்டு என் மனைவி சூட் கேஸ் ஒன்றையும் போட்டிருக்கிறாள் எனச் சொன்னார். ஆர்மியில் இருப்பதால் அவரால் உடனே உடனே இங்கு வந்து கேஸ் நடத்த முடியவில்லை. நிம்மதியாக இருக்கமுடியவில்லை, யாராவது துப்பாக்கியால் சுட்டால் கூட செத்துப்போக நினைப்பதாகக் கூறி வருத்தப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஒரு கிராமத்தில் தான் அந்த பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். ஆரம்பத்தில் சந்தோஷமாகத் தான் இருந்துள்ளது. ஆனால், என்னவோ அந்த பெண்ணுக்கு ரமேஷ் வீட்டில் உள்ள யாரையும் பிடிக்கவில்லை. அடிக்கடி தனிக்குடித்தனம் போக வேண்டும் என்று அவள் நச்சரித்துள்ளாள். அப்பா இறந்த பின், அண்ணனும் குடும்பத்துடன் தனியாக வாழ்ந்து வருவதால் அம்மாவை தான் மட்டுமே பார்க்க முடியும் என்ற சூழ்நிலையில் அதனை ரமேஷ் மறுத்துவிடுகிறார். ரமேஷ் இருக்கும் இடத்திற்கு வரச் சொன்னாலும் அவள் வருவதில்லை. குழந்தை பிறந்து 3 மாதம் கழித்து அவளை அழைத்த போது, குழந்தையை 5 மாதம் வரை வளர்த்து தருகிறோம் அவளது பெற்றோர் சொல்ல அதற்கும் சரி என்று இவர் இருந்திருக்கிறார். 5 மாதம் கழித்து அவள் வீட்டுக்கு வந்தாலும், தன்னால் குழந்தையை கவனிக்க முடியவில்லை என்று மீண்டும் அவள் வீட்டுக்கு சென்றிருக்கிறாள். குழந்தையை தான் கவனிப்பதாக மாமியார் சொன்னாலும் அதை அவள் கேட்பதில்லை. இப்படி அடுக்கடுக்கான பிரச்சனைகள் வருகிறது.
எப்போதும், அவளது அக்காவின் கணவனை வைத்து ரமேஷை கம்பேர் பண்ணி பேசுகிறாள். ஓயாது பிரச்சனைகள் வருகிறது. இதிலிருந்து என்னை எப்படியாவது காப்பாற்றிவிடுங்கள் என்று ரமேஷ் சொன்னதையடுத்து நான் இந்த வழக்கை எடுத்தேன். ஆர்மியில் இருப்பதால் அடிக்கடி வரமுடியவில்லை. மூன்றரை வருடமாகியும் கேஸ் முடியாதது சரியில்லை, அதனால் இந்த வழக்கை ஒரு மாதத்தில் முடிக்க வேண்டும் என சிவில் ரிவிஷன் என்ற பெட்டிஷனை சென்னை உயர்நீதிமன்றத்தில் போட்டு ஆர்டர் வாங்கினேன். இந்த பெட்டிசனை போடுவதற்கு முன்னாடி, மனைவியை அம்மாவை கவனித்து வீட்டில் இரு எனக் கூறி ரமேஷ் பணிக்கு சென்றதற்கு பிறகு, அவள் காலையில் வெளியே கிளம்பி மற்ற இடங்களுக்கு சென்று மாலை தான் வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருக்கிறாள். ஒருநாள், அவள் காலையில் வெளியே கிளம்பிய பிறகு மாமியாருக்கு ஹார்ட் அட்டாக் வந்து கீழே விழுந்திருக்கிறார். மாலை வீடு திரும்பிய அவள், மாமியாரை பார்த்த போது மாமியாருக்கு உயிர் இல்லாததை கண்டு பயத்தில் எதுவும் செய்யாமல் அப்படியே வெளியே போய்விட்டாள். ரமேஷினுடைய அண்ணன் எதேர்ச்சியாக அன்று வீட்டுக்கு வந்து பார்த்தால் அம்மா இறந்துபோயிக்கிறார்.
கேஸ் நடக்கும் போது அவளிடம் நான் கேள்வி கேட்ட போது இந்த விஷயத்தை சொல்லி மாட்டிக்கிட்டாள். இரண்டு மூன்று விஷயத்தில் அவள் பொய் சொல்லி பின்பு மாட்டிக்கிட்டாள். அதன் பிறகு, அவளது வக்கீல் வந்து என்னிடம், கேஸ் நடத்த வேண்டாம், இடத்தை மட்டும் அவளுக்கு கொடுத்துவிட சொல்லுங்கள் என்று சொன்னார். மேலும், நிரந்தர ஜீவனாம்சம் வேண்டும் என்று கேட்டார். அதன் பிறகு, ரமேஷை அழைத்து பேசினேன். அவளுக்கு அட்வைஸ் பண்ணி கடைசியாக அவளுக்கு 15 லட்சமும், குழந்தைக்கு 10 லட்சமும் கொடுக்க சொன்னேன். அதன் பிறகு, சூட் கேஸ் பெண்டிங் இருந்தது. அந்த இடம், தனக்கும் சகோதர சகோதரிக்கும் மூன்று பாகமாக பிரியும். அதன்படி, அந்த நில அளவின்படி எப்படி மதீப்பீடு செய்யப்படுகிறதோ அதை தான் கொடுப்பேன் என ரமேஷ் ஒப்புக்கொண்டார். கடைசி பேச்சுவார்த்தைக்கு பிறகு, அந்த இடத்தின் விலைபடி, 6 லட்சம் ரூபாயை அந்த குழந்தையின் பேரில் டெபாசிட் செய்யப்பட்டது. அதன் பிறகு, இருவருக்கும் விவகாரத்து ஆனது.