தாம்பத்தியத்திற்கு மறுத்த மனைவியின் வழக்கு பற்றி குடும்ப நல வழக்கறிஞர் சாந்தகுமாரி விவரிக்கிறார்
புருஷோத்தமன் அவர்களின் கதை இது. வெளிநாட்டில் படித்த நல்ல புத்திசாலி அவர். அவருக்கு குடும்பத்தில் ஒரு பெண் பார்த்து திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு முன்பு போனில் இருவரும் பேசியபோது அந்தப் பெண் குறைவாகவே பேசினார். முதலிரவின் போது இதில் தனக்கு நம்பிக்கையில்லை என்று அவள் கூறினாள். அவனும் தனக்கு அதில் நம்பிக்கையில்லை என்றான். அது அவளுக்குப் பிடித்திருந்தது. ஒரு வருடத்திற்கு இருவரும் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று அவள் கூறினாள். அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டான்.
இருவரும் தனித்தனி படுக்கைகளில் படுத்து, நண்பர்கள் போலவே பழகினர். இருவரும் நிறைய இடங்களுக்கு ஒன்றாக வெளியே சென்றனர். ஆனாலும் உடலுறவுக்கு அவள் தயாராக இல்லை. சில நாட்கள் கழித்து மருத்துவரிடம் செல்லலாமா என்று அவன் கேட்டான். அவளுக்கு கோபம் வந்தது. அவன் மீது அவளுக்கு ஈடுபாடு உள்ளது என்றும், உடலுறவில் ஆசையில்லை என்றும் அவள் தெரிவித்தாள். ஏன் என்று விசாரித்தபோது "ஒரு ஆணுடன் தனியறையில் என்னால் இருக்க முடியாது" என்று கூறினாள். அவனுக்கு மிகுந்த வருத்தம் ஏற்பட்டது.
சில மாதங்கள் கழித்து இந்த விஷயத்தை தன்னுடைய பெற்றோரிடம் அவன் பகிர்ந்துகொண்டான். அவளுடைய பெற்றோரிடம் பேச இவனுடைய பெற்றோர் முடிவு செய்தபோது அதை அவன் தடுத்தான். ஒரு வருட காலம் வரை காத்திருக்க முடிவு செய்தான். அவனுடைய பெற்றோரிடம் அவன் பேசிய விஷயம் அவளுக்குத் தெரிந்தது. ஒப்பந்தத்தை அவன் மீறிவிட்டான் என்று அவள் கூச்சல் போட்டாள். மருத்துவரிடம் செல்லவும் அவள் மறுத்தாள். இனி அந்தப் பெண்ணுடன் வாழ முடியாது என்று முடிவு செய்த அவன் என்னிடம் வந்தான்.
இந்த திருமணத்தை செல்லாத திருமணமாக அறிவிக்க வேண்டி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தோம். இதுகுறித்து நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புக்கு தான் எந்த வகையிலும் இடையூறாக இருக்க மாட்டேன் என்று அந்தப் பெண் பதிலளித்தார். இதுபோன்ற பிரச்சனைகளில் சிக்கும் ஆண்கள் விரைவாக நீதிமன்றம் செல்வது நல்லது. இந்த வழக்கில் அந்தப் பெண்ணின் நேர்மை எனக்கு பிடித்திருந்தது. ஆனால் அனைத்தையும் தாமதமாகச் செய்ததுதான் அந்தப் பெண்ணின் தவறு. இவர்கள் சேர்ந்து வாழ்வதை விட பிரிந்திருப்பதே நல்லது எனவும் பட்டது.