இந்தியாவில் நிலவிய சாதிய ஒடுக்குமுறைகளுக்குச் சற்றும் சளைத்ததில்லை அமெரிக்காவில் நிலவிய கறுப்பின மக்களுக்கு எதிரான நிறவெறி ஒடுக்குமுறை. அந்த ஒடுக்குமுறைகளின் பிடிகளுக்கு ஊடாகவே குத்துச்சண்டை வீரராக உருவெடுத்தான் காஸ்சியஸ் கிளே எனும் அந்த இளைஞன். கறுப்பினத்தவரான அவனுக்கு 18 வயதில் அமெரிக்காவின் பிரதிநிதியாக ஒலிம்பிக் மேடையை அலங்கரிக்க வாய்ப்பு கிடைக்கிறது. 1960ஆம் ஆண்டு இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற அந்த ஒலிம்பிக் தொடரில் மெல்லிய மிகுஎடை பிரிவில் தங்கப் பதக்கம் வென்று உலகின் கவனத்தைத் தன் பக்கம் திருப்புகிறான். தங்கப் பதக்கம் கழுத்தில் அணிவிக்கப்படுகிறது. அதை, தனக்குக் கிடைத்த கௌரவம் என்பதைவிட உலக அரங்கில் அமெரிக்காவிற்குக் கிடைத்த கெளரவமாகக் கருதுகிறான். கழுத்தில் அணிவிக்கப்பட்ட பதக்கத்தைக் கழட்ட அவனுக்கு மனமில்லை. சில நாட்கள் கழித்து அப்பதக்கத்தோடு காஸ்சியஸ் கிளே அமெரிக்கா திரும்புகிறான். வழக்கமான வரவேற்பு, பாராட்டுகளுக்குப் பிறகு உணவருந்துவதற்காக ஓர் உணவகத்திற்குச் செல்கிறான்.
ஒலிம்பிக் தொடருக்குத் தயாராவதற்காகக் கடந்த சில மாதங்களாகக் கட்டுக்கோப்பான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடித்துவந்த காஸ்சியஸ் கிளே, தற்போது விரும்பியபடி உண்ண நினைத்து உணவுகளை ஆர்டர் செய்கிறான். ஆர்டரைக் குறித்துக்கொண்டு உள்ளே சென்ற சர்வர், நீண்ட நேரமாகத் திரும்பிவரவில்லை. உணவு தயாராகத் தாமதமாகிறது என்று நினைத்துக்கொண்டிருந்தான் காஸ்சியுஸ் கிளே. அருகே வந்த அந்த உணவகத்தின் மேனேஜர், கறுப்பினத்தவர்களுக்கு உணவு பரிமாறும் வழக்கம் கிடையாது என காஸ்சியஸ் கிளேவிடம் தயக்கத்துடன் கூறுகிறார். "நான் இந்த நாட்டிற்காகத் தங்கம் வென்றவன்... நான் கோல்ட் மெடலிஸ்ட்" என்கிறான் காஸ்சியஸ் கிளே. இருப்பினும், அந்த மேனேஜர் தயங்கிக்கொண்டே இருக்க, ஆவேசத்துடன் அங்கிருந்து வெளியேறிய காஸ்சியஸ் கிளே, ஓகியோ நதிக்குச் சென்று தன்னுடைய தங்கப் பதக்கத்தைத் தூக்கி எறிகிறான். என்னை மதிக்காத நாட்டிற்காக இனி நான் விளையாட மாட்டேன் என முடிவெடுத்த காஸ்சியஸ் கிளே, அதன் பிறகு தொழில்முறைக் குத்துச்சண்டை போட்டிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தான். கறுப்பின மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க ஆரம்பித்த காஸ்சியஸ் கிளே, இஸ்லாம் மதத்தைத் தழுவி தன்னுடைய பெயரை முகமது அலியாக மாற்றிக்கொண்டான். நிறவெறி ஆதிக்கத்திலிருந்து விடுபட கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாத்திற்கு மாறுவதே தீர்வு என நம்பிய முகமது அலி, அதற்கான பிரச்சாரங்களையும் முன்னெடுத்தான். அதன்பிறகு, உலக குத்துச்சண்டையின் முகமாக முகமது அலி எழுச்சி பெற்ற வரலாறு நாமறிந்ததே.
முகமது அலியாக அறியப்படும் காஸ்சியஸ் கிளே, 1942ஆம் ஆண்டு அமெரிக்காவின் கென்டகி நகரில் லூயிஸ்வில்லே எனும் இடத்தில் பிறந்தார். தந்தை பெயர்ப் பலகைகள் எழுதும் பெயிண்டர். தாய் இல்லத்தரசி. 12 வயதிற்குப் பிறகே முகமது அலிக்கு பாக்ஸிங் அறிமுகமாகியது. முகமது அலிக்கு 12 வயது இருக்கும்போது திருடன் ஒருவன் அவரது சைக்கிளைத் திருடிவிடுகிறான். என் சைக்கிளைத் திருடியவனைப் பிடித்து அவன் கைகால்களை முறிக்க வேண்டும் என முகமது அலி ஆவேசமாகக் கத்த, அருகே இருந்த போலீஸ்காரர் ஜோ மார்ட்டின் 'அதற்கு நீ குத்துச்சண்டை கற்றுக்கொள்ள வேண்டும்' என்கிறார். அதன் பிறகு, முகமது அலிக்கு குத்துச்சண்டை பக்கம் கவனம் திரும்புகிறது. காவலர் ஜோ மார்ட்டின் குத்துச்சண்டை பயிற்சியாளர் என்பதால் பின்னாட்களில் அவரிடமே சில காலம் பயிற்சி பெற்றார் முகமது அலி. தன்னுடைய 12 வயதிற்குப் பிறகே குத்துச்சண்டை பக்கம் கவனத்தைத் திருப்பிய கறுப்பினத்தைச் சேர்ந்த ஓர் இளைஞன், நிறவெறி தாண்டவமாடிக்கொண்டிருந்த அமெரிக்காவிற்காக 18 வயதில் ஒலிம்பிக் மேடையேறிய அதிசயமே முகமது அலியின் திறமைக்குச் சான்றாகும்.
"எனக்கு சிறுவயதாக இருக்கும்போதிலிருந்தே ஏன் அனைத்தும் வெள்ளையாக இருக்கிறது என்ற சந்தேகம் அடிக்கடி எழும். 'ஜீசஸ் வெள்ளையாக இருக்கிறார். புகைப்படத்தில் உள்ள தேவதைகள் அனைவரும் வெள்ளையாக இருக்கிறார்கள். கறுப்பு தேவதைகள் புகைப்படம் எடுத்துக்கொள்ள மாட்டார்களா? மிஸ் அமெரிக்கா, மிஸ் வேர்ல்டு, மிஸ் யூனிவர்ஸ் வெல்பவர்கள் அனைவருமே வெள்ளையாக இருக்கிறார்கள். அதிபர் வெள்ளை மாளிகையில்தான் இருக்கிறார். அதிர்ஷ்டத்தின் நிறமாக வெள்ளை இருக்கிறது. துரதிர்ஷ்டத்தின் நிறமாக கறுப்பு அடையாளப்படுத்தப்படுகிறது. ஒருவரை மிரட்டுவதைக்கூட பிளாக்மெயில் என்கிறார்கள். ஏன் ஒயிட்மெயில் எனக் கூறுவதில்லை?' ஆகிய சந்தேகங்களை என் அம்மாவிடம் அடிக்கடி கேட்பேன். சிறு வயதிலேயே நீக்ரோக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். நான் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று திரும்பிய பிறகு ஓர் உணவகம் சென்றேன். நான் கறுப்பினத்தவன் எனக்கூறி எனக்கு உணவு கொடுக்க மறுத்தனர். ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவன் எனக் கூறியும் எனக்கு உணவு பரிமாற முடியாது என்றனர். வெள்ளைக்காரர்களின் அச்செயல் எனக்கு ஆத்திரமூட்டியது. நேரே ஓகியோ நதிக்குச் சென்று ஒலிம்பிக்கில் நான் வென்றபோது இசைக்கப்பட்ட அமெரிக்க தேசிய கீதத்தையும் பறந்த தேசியக் கொடியையும் மனதில் நினைத்துக்கொண்டே பதக்கத்தைத் தூக்கி ஆற்றில் எறிந்தேன். உலக அரங்கில் அமெரிக்காவைப் பெருமைப்படுத்தியும் எனக்கான மரியாதை அமெரிக்காவில் கிடைக்கவில்லை என்றால் அந்தப் பதக்கத்திற்கு எந்த மதிப்பும் இல்லை." இவ்வாறாக தனக்குள் எழுந்த கேள்விகளையும் அவற்றிற்கு இந்த சமூகம் கொடுத்த பதில்களையும் அந்த பதில்கள் தன்னுள் ஏற்படுத்திய தாக்கத்தையும் விவரிக்கிறார் முகமது அலி.
அதன் பிறகு, தனிப்பட்ட தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்த முகமது அலி, பல முன்னணி வீரர்களை வீழ்த்தி மூன்று முறை மிகுஎடை பிரிவில் உலக சாம்பியன் பட்டம் பெற்றார். இந்தச் சாதனையைப் படைத்த முதல் வீரர் என்ற பெருமையையும் முகமது அலி வசமானது. எதிர்கொள்ள ஆபத்தான குத்துச்சண்டை வீரராக உருவெடுத்து வந்த முகமது அலியை அமெரிக்கா மீண்டும் சீண்டியது. வடக்கு வியட்நாம் மற்றும் தெற்கு வியட்நாமிற்கு இடையேயான யுத்தத்தில் தெற்கு வியட்நாமிற்கு ஆதரவாக அமெரிக்கா படைகள் 1965ஆம் ஆண்டு களத்தில் குதித்தன. உலகம் முழுவதும் நடக்கிற யுத்தங்களில் தன்னுடைய ராணுவக் கைவரிசையைக் காட்டி மறைமுக ஆதாயம் அடையும் அமெரிக்கா, வழக்கத்திற்கு மாறாக வியட்நாம் மண்ணில் கடுமையான இழப்பைச் சந்தித்தது. இதனால் வியட்நாம் மண்ணில் படையை அதிகரிக்க முடிவெடுத்து, அமெரிக்கர்கள் கட்டாயம் ராணுவச் சேவையாற்ற வேண்டும் என்ற உத்தரவை அமெரிக்கா பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்த முகமது அலி, அமெரிக்கப் படையில் சேர மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா, முகமது அலியின் உலக சாம்பியன் பட்டத்தைப் பறித்தது. அத்தோடு அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. இதை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்திய முகமது அலி, நான்கு ஆண்டுகள் கழித்து இந்த வழக்கில் வெற்றிபெற்றார்.
"இதுவரை வியட்நாமைச் சேர்ந்த எவரொருவரும் என்னைக் கறுப்பினத்தவன் என்று கூறி பாரபட்சமாக நடத்தியதில்லை. அவர்களோடு எனக்கு எந்த முரண்பாடும் இல்லாதபோது, நான் ஏன் அவர்களை எதிர்த்துச் சண்டைபோட வேண்டும். அதுமட்டுமில்லாமல், போர் என்பது நான் ஏற்றுக்கொண்டுள்ள இஸ்லாத்திற்கு எதிரானது" என ஏகாதிபத்திய அமெரிக்காவை எதிர்த்து அவர் எழுப்பிய குரல், உலகின் பல மூலைகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குத்துச்சண்டை களத்தில் முகமது அலி பெற்ற வெற்றிகளைவிட, கறுப்பினத்தவர்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தில் அவர் பெற்ற வெற்றிகள் அதிகம். மால்கம் எக்ஸ் போன்ற சமூக செயற்பாட்டாளர்கள் கடும் சிரமப்பட்டு ஏற்படுத்திய விழிப்புணர்வுகளையும் உடைத்தெறிந்த அடிமைவிலங்குகளையும் தன்னுடைய குத்துச்சண்டை புகழ் மூலம் எளிமையாகச் செய்தவர் முகமது அலி. ஆக, முகமது அலி குத்திய ஒவ்வொரு குத்தும் அரசியல் ஆய்வாளர்களால் உலக சண்டியர் என அழைக்கப்படும் அமெரிக்காவின் போலி மேன்மைவாதத்தின் மீது விழுந்த குத்துகள்தான்.
கனவினை நோக்கித் தொடர்ந்து ஓடுவோம்!