Skip to main content

"புறக்கணிக்கப்பட்டதற்கு காரணமே அறியாமல் அந்தத் தகப்பனின் காலை மீண்டும் கட்டிக் கொண்டது பச்சிளம் பிள்ளை.." - லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #28

Published on 25/04/2020 | Edited on 25/04/2020


அந்த நாற்காலிகள் இரண்டும் கடந்த மூன்று மணிநேரங்களாக எங்களைச் சுமந்து கொண்டு இருக்கிறது. நாங்கள் என்பது நானும் என் ஒன்றரை வயது மகளும்! தட்டுங்கள் திறக்கப்படும் என்பது பைபிள் வாசகம். நாங்களும் காத்திருக்கிறோம் கடந்த மூன்று மணி நேரமாக என் மகளின் பிஞ்சு கரங்கள் தட்டித்தட்டிப் பார்த்தும் திறக்கவில்லை எங்கள் வீட்டு படுக்கையறைக் கதவு விளக்கற்ற அந்த இருட்டு அறையின் பீரோவிற்குப் பக்கத்தில் நானும் அவளும் மட்டும். எங்களின் தற்போதைய துணை பூட்டப்பட்ட கதவிற்குப் பின்னால் இருந்து வழியும் வெளிச்சம் அது தாங்கி வரும் கதவின் இடுக்குகள்தான். 
 

 

க


ம்மா... பசிக்கி... என்ற மகளின் குரலில் கலைந்து நான் என் தனத்தின் வாயிலாக அவளின் பசியைத் தீர்க்கிறேன். என் பசி மட்டும் ஆறாமல் ஓர் அங்குல வயிற்றுக்குள் கதறிக் கொண்டு இருக்கிறது. உயிரைப் பறிப்பது கரோனா மட்டும்தானாயென்ன? பசியென்னும் அரக்கனும் தான். அவன் இந்த பூமியில் தன் பாதச் சுவடுகளைப் பதிப்பதை நாம் உணராமல் தான் இருக்கிறோமாயென்ன? பழைமைகள் அனைத்தையும் மனிதன் மீண்டும் மீண்டும் தேடிப் பிடித்துக் கொண்டு இருக்கிறான். முகக் கவசத்திற்குப் பின்னே முகத்தை மறைத்துக் கொள்வதைப் போல கணினியின் திரையும், தொலைக்காட்சியின் திரையும், செல்போனின் திரையும் நம் அகத்தை மறைக்கும் கவசங்களாகிப் போகின்றன. அலுங்காமல் ஓய்வெடுக்கும் அத்தனை அறைகளும் சதா விழித்திருக்கும் சமையலறையைப் பார்த்து பொறாமை கொள்கின்றன. 

இதோ நாலாயிரம் செங்கல்களை இணைத்த சிமெண்ட் கலவைகளுக்குள் இறுகிப் போன மனிதனின் முகமும் மனமும், பெரும்பாலான இன்றைய பேச்சுகள் இயந்திரங்களுடன் தான் என்றாகிப் போக நாம் அனைவருமே ஒரு காரணம்தான் ஆனால் சமுதாயத்தைக் குறை கூறிக் கொண்டு இருப்போம். சமுதாயம் என்பதே நாம் தான் என்ற மறந்துவிட்டு! சமூகத் தொற்று பரவாமல் இருக்க கரோனா தன் பசிக்கு எங்களை இரையாக்கிக் கொள்ளாமல் இருக்க வாசற்கதவு சாத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் மற்றொரு சாத்தப்பட்ட கதவுக்குப் பின்னால் மனித நேயம் ஒன்றும் புதைந்து இருக்கிறது. 21 முழு நாட்கள். கட்டம் கட்டப்பட்ட அக்னி செங்கல்களை வலம் வந்து காலம் பூராவும் காப்பாற்றுவேன் என்று கரம் பிடித்த காதல் கணவனும் என் பிள்ளையைப் பெற்றத் தகப்பனும் இருக்கிறான்.
 

http://onelink.to/nknapp


மூன்று மணி நேரங்கள் அறைக்கு வெளியே நீர் கூட பருக முடியாமல் என்று வறண்ட தொண்டையையும் மீறி விசும்பல்கள் அந்த மூடிய கதவைத் தொடர்ந்து தட்டிக் கொண்டேதான் இருந்தது. கதவு மட்டும் திறக்கவேயில்லை. ஒரு காந்தத்தின் காதல் மின்சார வயர்களின் மேல் நகர்தலைப் போலத்தான் அவனும் என்னை ஈர்த்தான். புத்தம் புதிதாகத் தெரிந்தது உலகம், அன்னை தந்தையைக் கூட நெருங்க முடியாத அளவிற்கு என்னை கட்டிப் போட்டு சிறை வைத்தது அவனின் குறுஞ்செய்திகள். விழிப்படலம் மூடினால் கூட எங்கே அவனின் பிம்பம் கடந்து போய்விடுமோ என்று இரவுகளை அனைத்தையும் பகலாக்க ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தேன் சோதனைக் குப்பிகள் இல்லாமலேயே! ஆனால் உடலின் மேற்பரப்பில் வீரியம் தீர்த்துக் கொள்ளும் நேரம் மட்டும்தான் அவனின் ஆண்மை விழித்துக் கொள்கிறது. மற்ற நேரங்களில் பாம்பு உரிக்கும் சட்டை போல தன் உடல் சூட்டைத் தணித்துக் கொள்ளும் நேரம் மட்டும் அன்பும் காதலும் காமச்சட்டைப் போட்டுக் கொள்கிறது. 
 

ப


சாத்தப்பட்ட இரண்டு கதவுக்குப் பின்னால் நான் இருக்கின்ற காரணத்தைச் சொல்லாமல் வேறு ஏதேதோ பேசிக்கொண்டு இருக்கிறேன், மனைவியின் உடல் முழுவதும் வெறும் காதுகளை மட்டும் படைத்துவிடு அவள் நான் பேசுவதைக் கேட்டால் மட்டும் போதும் என்று ஒரு கணவன் கடவுளிடம் வரம் கேட்டான் என்று ஒரு கிராமியக் கதையுண்டு. அவளை வாசல்தாண்ட விட்டால் பின்னால் வா என்று அவனை விடவும் முன்னேறிவிடுவாளாம். அதனால் இந்த 21 நாட்களில் இயந்திரங்கள் நம்மை ஆக்கிரமித்துக் கொண்டது தொடுதிரை விளையாட்டுகள். நம்மைத் தூண்டில் புழுவைக் கபளீகரம் செய்யும் ஆழ்கடல் மீனைப் போல உள் இழுத்துக் கொண்டது. இதுவும் ஒரு வகை சைக்கோத்தனத்தை வளர்ப்பதைப் போலத்தான் நம்மையும் அறியாமல் நாம் அதற்குள் மூழ்கிப்போகிறோம். நம் ஆர்வத்தைப் பெருக்கி அடிமையாக்கிக் கொள்ளவே அதிலும் காசு வைத்து விளையாடுகிறார்கள். அப்படி மற்றொரு பிளேயருக்கு செக் மேட் கொடுத்துவிட்டாளாம் மகள் தன் பிஞ்சு விரல்களால்!

பாப்பா ரைம்ஸ்பாரு கதை கேளுன்னு மொபைல் போனைக் கையில் கொடுத்த போது அது தவறாகத் தெரியவில்லை அந்தத் தகப்பனுக்கு எத்தனை பாயிண்ட்ஸ் எடுத்திருந்தேன் எல்லாம் வேஸ்ட் ச்சீ என்று அந்த பாயிண்ட்ஸ் எடுக்கும் வரையில் இரண்டு பேரும் வெளியேவே இருங்கள் என்று அறைக்கு வெளியில் உயிருள்ள தேவதையைத் தவிர்த்து உயிரற்ற சாத்தானைத் தொட்டு ரசித்துக் கொண்டு இருக்கிறான். மூன்று மணி நேரங்களின் நத்தை நகர்ந்தலுக்குப் பிறகு கதவு திறக்கப்பட்டது. புறக்கணிக்கப்பட்டதற்கு காரணமே அறியாமல் அந்த தகப்பனின் காலை மீண்டும் கட்டிக் கொண்டது பச்சிளம் பிள்ளை.