16வது ஐ.பி.எல். டி.20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்துவருகின்றன. இந்த ஐ.பி.எல். போட்டியில் 10 அணிகள் மோதுகின்றன. தற்போதுவரை நடந்துள்ள ஐ.பி.எல். போட்டியில் குஜராத் அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் 10 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், 10 புள்ளிகளுடன் லக்னோ அணி மூன்றாவது இடத்திலும், 10 புள்ளிகளுடன் சென்னை அணி நான்காவது இடத்திலும் உள்ளன. சென்னையுடன் வரும் 6ம் தேதி மோதும் மும்பை அணி 8 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், சென்னை - மும்பை அணிகள் வரும் மே 6ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கான நேரடி டிக்கெட் விற்பனை 3ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று இரவு முதல் இளைஞர்கள் ஏராளமானோர் டிக்கெட் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானம் அண்மையில் புனரமைக்கப்பட்ட பிறகு மொத்தம் 38 ஆயிரம் ரசிகர்கள் வரை நேரடியாக போட்டிகளைக் காண முடியும் என்ற நிலையில், 22,000 டிக்கெட்டுகள் மட்டுமே ஆன்லைன் மற்றும் நேரடி விற்பனைக்கு விடப்பட்டுள்ளன. 1500 ரூபாய் டிக்கெட்கள் நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது. ரூ. 2000 மற்றும் ரூ. 2500 டிக்கெட்கள் நேரடியாகவும் ஆன்லைனிலும் விற்கப்படுகிறது. அதேபோல், ரூ. 3000 மற்றும் ரூ. 5000 மதிப்புள்ள டிக்கெட்கள் ஆன்லைனில் விற்கப்பட்டுவருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் அதிக அளவிலான இரசிகர்கள் கூடியுள்ளதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதில் டிக்கெட் வாங்கவந்த இரசிகர்கள் சிலர் ‘தோனியை நேரில் பார்க்க எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் காத்திருப்போம். தல தோனி இந்த தொடர்தான் கடைசியாக விளையாடப்போகிறார். அவரை கடைசியாக மைதானத்தில் ஒரு முறை பார்த்தால் போதும். நீண்ட நேரமாக நின்றுகொண்டிருக்கிறோம்; டிக்கெட் கிடைக்குமா எனத் தெரியவில்லை’ என்று தெரிவித்தனர்.