கேப்டன் சுப்மன் கில் தமையிலான இந்திய அணி ஜிம்பாப்வேவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதனையொட்டி இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த 6 ஆம் தேதி (06.07.2024) நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதனையடுத்து 7 ஆம் தேதி (07.07.2024) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என இந்தியா அணி சமன் செய்திருந்தது.
அதனைத் தொடர்ந்து இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி கடந்த 10 ஆம் தேதி (10.07.2024) நடைபெற்றது இதில் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. அதே சமயம் இந்தப் போட்டியில் இந்திய அணி வென்றதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 150 வெற்றிகளை ஈட்டிய முதல் அணி என்ற சிறப்பையும் இந்தியா பெற்றது.
இந்நிலையில் இந்தத் தொடரின் 4வது போட்டி இன்று (13.07.2024) நடைபெற்று வருகிறது. அதன்படி இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஜிம்பாப்பே அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 152 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு ஜிம்பாப்வே அணி 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. இதனையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 4 வது டி20 போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் துஷார் தேஷ்பாண்டே அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.