
கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.
இந்தத் தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் ஆவார். அதே சமயம் செஸ் வீரர் குகேஷுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் வரும் நவம்பர் 20 ஆம் தேதி முதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செஸ் சாம்பியன்ஷிப் தொடரை நடத்த விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என பிடே (FIDE - International Chess Federation) அறிவித்துள்ளது. செஸ் தொடரை நடத்த குறைந்தபட்ச ஏலத் தொகையாக சுமார் ரூ.68 கோடி நிர்ணயிக்கபட்டுள்ளது. இந்தப் போட்டிகள் எங்கு நடைபெறும் என்ற அறிவிப்பு ஜூலை மாதம் முடிவு செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது. உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் சார்பில் குகேஷ் - சீன வீரர் டிங் லிரெனை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.