ஐபிஎல் 2024 இன் மூன்றாவது லீக் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.30க்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்து வீச தீர்மானித்தார். அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. தொடக்க ஆட்டக்காரர்களாக சால்ட் மற்றும் நரைன் களமிறங்கினர். நரைன் 2 ரன்களில் ஆட்டமிழக்க , அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் 7 ரன்களில் ஆட்டம் இழந்தார். அவருக்கு அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டக் அவுட் ஆகி ஏமாற்றினார். அடுத்து வந்த நம்பிக்கை நாயகன் நித்திஷ் ராணாவும் 9 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் சால்ட் நிதானமாக ஆடினார். அவருக்கு துணை நின்ற ரமன்தீப் சிங் அதிரடி ஆட்டத்தில் கவனம் செலுத்தினார். 4 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 17 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சிறப்பாக ஆடிய சால்ட் 40 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து இணைந்த ரிங்கு சிங் மற்றும் ரசல் இணை ஹைதராபாத் அணி பந்து வீச்சை வெளுத்து வாங்கியது. குறிப்பாக அபாயகரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரசல் 7 சிக்ஸர்கள் மற்றும் மூன்று பவுண்டரிகளுடன் 25 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். அவருக்கு துணை நின்ற ரிங்கு சிங் 15 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ரசல் 64 ரன்களுடனும், ஸ்டாரக் 6 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் நின்றனர்.இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. ஹைதராபாத் அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய தமிழ்நாட்டு வீரர் நடராஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதற்கு அடுத்தபடியாக மார்க்கண்டே 2 விக்கெட்டுகளும் கேப்டன் கம்மின்ஸ் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஹைதராபாத் அணி களம் இறங்கியது. அந்த அணிக்கு மயங்க் அகர்வால் மற்றும் அபிஷேக் இணை சிறப்பான துவக்கம் தந்தது. பொறுமையாகவும் அவ்வப்போது அதிரடியையும் காட்டிய அந்த இணை முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் குவித்தது. அகர்வால் 32 ரன்களும் அபிஷேக் 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ராகுல் திரிபாதி 20 ரன்களும், மார்க்ரம் 18 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
பின்பு வந்த ஹென்றிச் கிளாசன், அப்துல் சமத் இணை பொறுப்புடன் ஆடியது. சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த அப்துல் சமத் 15 ரன்கள் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து ஹென்றிச் கிளாசன், சபாஷ் அகமது இணை கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சிதறடித்தது. சிக்ஸர்களில் மட்டுமே கவனம் செலுத்திய கிளாசன் 29 பந்துகளில் 8 சிக்ஸர்களுடன் 63 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்படும் நிலையில் சபாஷ் அகமது மற்றும் ஹென்றிச் கிளாசன் ஆகியோர் ஆட்டம் இழந்தனர். கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டபோது ரன் எதுவும் எடுக்காமல் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் வரலாற்றில் சாதனை விலைக்கு எடுக்கப்பட்ட மிட்சல் ஸ்டார்க் 4 ஓவர்களில் விக்கெட் எதுவும் எடுக்காமல் 53 ரன்களை வாரி வழங்கினார். அடுத்தபடியாக ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகை அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட பேட் கம்மின்ஸ் கடைசி பந்தில் ரன் எடுக்க முடியாமல் தோல்விக்கு காரணமாக அமைந்தார். கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இளம் வீரர் ஹர்ஷத் ராணா சிறப்பாக பந்து வீசி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ரன்களையும் கட்டுப்படுத்தி கொல்கத்தா அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். கொல்கத்தா அணியில் ஹர்ஷத் ராணா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளும், ரசல் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரேன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
-வெ. அருண்குமார்