Skip to main content

அஸ்வினுக்கு வந்த சோதனையும்.. காயங்களால் அவதிப்படும் இந்திய அணியும்!

Published on 27/07/2018 | Edited on 27/07/2018

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் வீரர்கள் வரிசையாக காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தத் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் காயம் காரணமாக, நாடு திரும்பி வருவதால் அது இந்திய அணிக்கே பலவீனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
 

Ashwin

 

 

முதலில் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான பயிற்சியின்போதே தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் கணுக்கால் காயம் காரணமாக நாடு திரும்பினார். பவர்ப்ளேயில் அசத்தலாக பந்துவீசும் அவர், ஆல்ரவுண்டராகவும் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காயம் அவரை சொந்த நாட்டுக்கே அனுப்பிவைத்தது.
 

அதேபோல், ஜஸ்பிரீத் பும்ராவும் காயத்தால் அவதிப்பட்டு, போட்டியில் கலந்துகொள்ளாமல் இருந்ததால், அவரையும் அணி நிர்வாகம் இந்தியாவுக்கு அனுப்பியது. டெத் ஓவர்களில் புவனேஷ்வருடன் இணைந்து எதிரணி வீரர்களுக்கு டஃப் கொடுப்பார் என்று பார்த்தால், ஏற்கெனவே முதுகுவலியில் கஷ்டப்படும் புவனேஷ்வரை தனியே விட்டுவிட்டு அவர் மட்டும் கிளம்பிட்டார். புவனேஷ்வரின் காயமும் லிஸ்டில் சேர்ந்துகொண்டதால் இது ஒருநாள் தொடரில் இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

 

 

அதேசமயம், உமேஷ் யாதவ் போன்ற அனுபவம்வாய்ந்த வீரரை டெஸ்ட் தொடருக்காக பத்திரப்படுத்தி வந்தது இந்திய அணி. இந்நிலையில், தற்போது அஸ்வின் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் கலந்துகொள்வாரா என்ற கேள்வி யெழுந்துள்ளது. எஸ்ஸெக்ஸ் அணிக்கு எதிரான மூன்றுநாள் பயிற்சி ஆட்டத்தில் அஸ்வின் ஒரு ஓவர் கூட பந்துவீசவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பெற்றிருந்தாலும், காயம் அஸ்வினை அடுத்தகட்டத்துக்கு நகர விடாமல் செய்திருக்கிறது. ஏற்கெனவே காயங்கள் அணியில் சிதைவை ஏற்படுத்தியிருக்க, அஸ்வினுக்கு வந்த சோதனை இந்திய அணியையே வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது.