Skip to main content

இந்தியா ஏன் ஒருநாள் தொடரை இழந்தது? - ஐந்து காரணங்கள்

Published on 18/07/2018 | Edited on 18/07/2018

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்றிருந்தாலும், இந்திய அணியால் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்ல முடியவில்லை. உலக தரவரிசையில் நம்பர் 1 - நம்பர் 2 இடங்களில் இருக்கும் இந்த இரு அணிகளுக்கும் இடையிலான தொடரில், இங்கிலாந்து அணியின் கைகளே ஓங்கியிருந்தன. வெற்றியைத் தீர்மானிக்கும் லீட்ஸ் போட்டியில் அது அப்பட்டமாக தெரிந்தது.
 

england

 

 

 

இதை மாற்றியிருக்கலாம், இவரை சேர்த்திருக்கலாம் என பல விமர்சனங்கள் முன்வைக்கப்படும் சூழலில், இந்தியா தொடரை இழந்ததற்காக நாம் சொல்லும் ஐந்து காரணங்கள் இதோ..
 

பும்ரா, புவனேஷ்வர் இல்லாதது
 

Virat

 

 

 

டி20 தொடரின் தொடக்கத்திலேயே காயம் காரணமாக இந்தியா திரும்பினார் ஜஸ்பிரித் பும்ரா. புவனேஷ்வர் குமாரும் முதுகுவலி காரணமாக ஓய்வில் இருந்துவிட அனுபவமில்லாத சித்தார்த் கவுல் மற்றும் ஸ்ரதுல் தாக்கூரால் சுமையை சுமக்க முடியவில்லை. டெஸ்ட் தொடருக்காக பந்துவீச்சாளர்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உமேஷுக்கு ஓய்வளிக்கப்பட்டது. மூன்றாவது போட்டியில் புவனேஷ்வர் களமிறங்கியும் ஆட்டத்தில் சூடு பறக்கவில்லை. 
 

குல்தீப் யாதவ்வை கணித்துவிட்டார்கள்
 

டி20 தொடரின்போது அசத்தலாக பந்துவீசிய குல்தீப் யாதவ், ஒருநாள் தொடரின் தொடக்கத்திலும் இங்கிலாந்து வீரர்களை திணறடித்தார். உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் ட்ரம்ப் கார்ட் என்றெல்லாம் பேசப்பட்ட குல்தீப் யாதவ்வை, அடுத்தடுத்த போட்டிகளில் பீல்டு ஒர்க், ஹோம் ஒர்க் செய்த இங்கிலாந்து வீரர்கள் கணித்துவிட்டார்கள். கடைசி போட்டியில் விக்கெட் எதுவும் கொடுக்காமல் 55 ரன்கள் கொடுத்த குல்தீப்பே அதை உணர்ந்திருப்பார். 
 

 

 

சொதப்பிய இந்திய பேட்ஸ்மென்கள்
 

இந்திய அணியின் பலமே அதன் பேட்டிங் லைன்அப் தான். ஆனால், இங்கிலாந்து தொடரில் அது மெய்யாகவில்லை. அதிக நம்பிக்கை வைத்திருந்த கே.எல்.ராகுல் ஏமாற்ற, தொடக்க இணையான ரோகித்-தவான் தாக்குப்பிடிக்கவில்லை. லார்ட்ஸில் நடைபெற்ற போட்டியில் முதல் நான்கு விக்கெட்டுகளுக்கு 96 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது இந்திய அணி. அதைத் தொடர்ந்து தோனி நிதானம் கடைபிடிக்க மைதானமே அலறித்துடித்தது. கடைசி போட்டியிலும் அதே நிலையே நீடித்தது.
 

அசத்திய ஜோ ரூட்டின் பெர்ஃபாமென்ஸ்
 

இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி அழுத்தமான பேட்டிங் லைன்அப் உடன் களமிறங்கியது. குறிப்பாக ஜோ ரூட்டின் ஆட்டம் என்பது அதிக கவனத்தைப் பெற்றது. குல்தீப் யாதவ்வை அவர் கையாண்ட விதம், கடைசி இரண்டு போட்டிகளில் அவரது நிதானமான விளையாட்டும், சதங்களும் இங்கிலாந்து அணிக்கு பெரிய பலத்தைக் கொடுத்தது. மோர்கன் - ரூட் இணையும் அதிக நேரம் களத்தில் நீடித்து இந்திய அணி பவுலர்களை சோதித்தது குறிப்பிடத்தக்கது. 
 

இங்கிலாந்தின் ஸ்பின் - ஃபாஸ்ட் பவுலிங் காம்போ
 

Virat

 

 

 

முதல் போட்டியில் ஏற்பட்ட இழப்பைத் தொடர்ந்து இங்கிலாந்து பவுலர்கள் அடுத்த இரண்டு போட்டிகளில் மிகச்சிறப்பாக விளையாடினர். டேவிட் வில்லி, மார்க் உட் மற்றும் அடில் ரஷித் ஆகியோரின் பந்துவீச்சு இந்திய பேட்ஸ்மென்களை சுலபமாக வெளியேற்றினர். குறிப்பாக ரஷித் வீசிய பந்துகளை விராட் கோலியே பெருமிதமாகப் பேசினார்.