இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி படுதோல்வி அடைந்துள்ளது. இங்கிலாந்து அணியினரின் பந்துவீச்சில் தாக்குப்பிடிக்க முடியாமல், இந்திய வீரர்கள் திணறியது தோல்விக்கு வழிவகுத்தது.
லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கைத் தேர்வுசெய்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 107 ரன்களில் ஆல் அவுட் ஆக, அதன்பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 396 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி, 130 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் 159 ரன்களில் இன்னிங்ஸ் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, 2 - 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தத் தோல்வி குறித்து பேசியுள்ள இந்திய கேப்டன் விராட் கோலி, “இங்கு மறைப்பதற்கு ஒன்றும் கிடையாது. நாங்கள் சரியாக விளையாடவில்லை என்பதுதான் உண்மை. தொடக்கத்தில் சிறப்பாக பந்துவீசினாலும், அதையே எங்களால் தொடர முடியவில்லை. சரியான இடத்தில் நாங்கள் பந்தை பிட்ச் செய்யவில்லை. கடந்த ஐந்து டெஸ்ட் போட்டிகளில் கடைசி போட்டிதான் எங்களது மோசமான விளையாட்டை பிரதிபலித்தது என்று சொல்வேன். மிகச்சிறந்த அணியான இங்கிலாந்து, கூடுதல் பலத்துடன் விளையாடும்போது, எந்த அணியையும் வீழ்த்த முடியும். அதுவும் சொந்த மண் என்ற வாய்ப்பும் அந்த அணிக்குக் கிடைத்தது. சூழலைக் காரணமாக சொல்ல முடியாது. சரியாக விளையாடியிருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.