![burevi cyclone ramanathapuram district](http://image.nakkheeran.in/cdn/farfuture/hkKJE13CxkXyKN_JgQUHBDzzc3omQPwN53usB9MknRI/1606965362/sites/default/files/inline-images/cyclone12333444.jpg)
"வங்கக்கடலில் பாம்பனுக்கு 90 கி.மீ. தொலைவில் 'புரெவி' புயல் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் 'புரெவி' புயல் இராமநாதபுரம் மாவட்டம் பாம்பனை நெருங்கிக் கொண்டிருக்கிறது" என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திரிகோணமலையில் கரையைக் கடந்த புயல் பாம்பன்- குமரி இடையே நாளை அதிகாலைக்குள் மீண்டும் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'புரெவி' புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, தூத்துக்குடி, திருச்சி, இராமநாதபுரம் உள்பட பல மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்தது. அதேபோல் புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தின் பல இடங்களில் கனமழை கொட்டியது.
காரைக்காலில் பெய்து வரும் கனமழை காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 9,10,11,12 ஆம் வகுப்புகளுக்கு இன்று (03/12/2020) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா அறிவித்துள்ளார்.
அதிகபட்சமாக வேதாரண்யம் (நாகை)- 19 செ.மீ., தலைஞாயிறு (நாகை)- 14 செ.மீ., இராமேஸ்வரம் (இராமநாதபுரம்)- 12 செ.மீ., தங்கச்சிமடம் (இராமநாதபுரம்)- 8 செ.மீ., பாம்பன் (இராமநாதபுரம்)- 6 செ.மீ மழை பதிவானது.