கரோனா ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடி காரணமாக வெனிசுலா நாட்டைச் சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியனான ரூபென் லிமார்டோ கேஸ்கன் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார்.
வெனிசுலா நாட்டைச் சேர்ந்த ரூபென் லிமார்டோ கேஸ்கன், 2012-ம் ஆண்டு நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக்கில் வாள்வீச்சு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். இவர் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்க இருக்கிற டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்காக தயாராகி வருகிறார். கரோனா நெருக்கடி காரணமாக தற்சமயம் உலகம் முழுவதும் பல போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதையடுத்து, சரியான ஸ்பான்ஸர்ஷிப் கிடைக்காமல் தவித்து வருகிறார். இதனையடுத்து, இந்த தற்காலிக நெருக்கடியை சமாளிக்கும் விதமாக உணவு டெலிவரி செய்யும் வேளையில் இறங்கியுள்ளார்.
இதுகுறித்து ரூபென் லிமார்டோ கேஸ்கன் கூறுகையில், "போட்டிகள் ஏதும் தற்போது நடைபெறாத காரணத்தால் போதிய வருவாய் இல்லை. என்னுடைய குடும்பத்திற்காக நான் சிறிது வருவாய் ஈட்டியாக வேண்டும். எனக்கு இன்னும் கனவுகள் உள்ளது. ஆதலால், விளையாட்டை விட்டுவிட விரும்பவில்லை. எங்கு சென்றாலும் என் நாட்டின் கொடியை பெருமையுடன் உயர்த்திப்பிடிப்பேன்" எனக் கூறினார்.