2 புதிய பந்துகளைப் பயன்படுத்துவதால் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் பேரழிவைச் சந்திப்பதாக உலக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் ஒரு புதிய பந்தைப் பயன்படுத்தும் முறையை ஐசிசி 2011ஆம் ஆண்டு கொண்டுவந்தது. ஐ.பி.எல். போட்டிகளைப் போல ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக இருக்கவேண்டும் என்பதற்காக இந்த முறை அறிமுகம் செய்யப்பட்டது. ஏனெனில், ஆட்டம் தொடங்கிய சில ஓவர்களில் பந்தின் தன்மை மாறுவதால், வேகப்பந்து வீச்சாளர்கள் ரிவர்ஸ் ஸ்விங் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் அதீத ஸ்பின் ஆகிய வித்தைகளைப் பயன்படுத்த முடிவதில்லை. இதனால், பேட்ஸ்மென்கள் மிக சாதாரணமாக பவுலர்களை பந்தாடுகிறார்கள். தற்போது நடந்து கொண்டிருக்கும் ஆஸி. - இங்கிலாந்து ஒருநாள் தொடரே இதற்கு சரியான உதாரணம்.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘2 புதிய பந்துகளைக் கொண்டுவந்த நடைமுறை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை பேரழிவுக்கு இழுத்துச் செல்லவே வழிவகுக்கும். அதனாலேயே பந்து அதன் தன்மை இழந்து, ரிவர்ஸ் ஸ்விங் ஆவதில்லை. ரிவர்ஸ் ஸ்விங் என்ற ஒன்றை சமீபகாலமாக காணமுடியாததற்கும் அதுதான் காரணம். பேட்ஸ்மென்களைக் கட்டுப்படுத்தும் டெத் ஓவர்களையும் பார்க்க முடியவில்லை’ என ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார். சச்சின் தெண்டுல்கரின் இந்தப் பதிவுக்கு பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாக்கார் யூனிஸும் ஆதரவளித்துள்ளார்.