Skip to main content

மும்பை இன்னமும் சச்சினின் அணி தான்... 4-வது முறை கோப்பையை வென்று சாதிக்குமா?

Published on 20/03/2019 | Edited on 20/03/2019

இனி இரண்டு மாதங்கள் கிரிக்கெட் ரசிகர்களின் விவாதப் பொருள் ஐ.பி.எல். டி20 தொடராகத்தான் இருக்கும். இதில் அதிகம் விவாதிக்கப்படும் அணிகள் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ். தமிழ்நாட்டில் கூட மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரசிகர்கள் அதிகம். தமிழ்நாட்டில் மும்பை அணியின் டி ஷர்ட்களை அணிந்திருக்கும் இளைஞர்களைக் காணலாம். இந்த அளவுக்கு மும்பையை தவிர மற்ற இடங்களிலும் மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் பிரபலமாகவும், அதிக ஆதரவுடனும் இருக்க காரணம் சச்சின் தான்.

 

sachin

 

முதல் சில சீசன்களில் மட்டுமே விளையாடினார் சச்சின். ஆனால் அதற்கான தாக்கம் இன்னும் இருக்கிறது. மேலும் ரோஹித்தின் பேட்டிங் மற்றும் கேப்டன்ஷிப், பும்ராவின் டெத் பவுலிங், பாண்டியா சகோதரர்களின் ஆல்ரவுண்ட் ஆட்டங்கள் உள்ளிட்ட காரணங்களால் சச்சினின் ரசிகர்கள் இன்னும் மும்பை அணியின் பக்கம் உள்ளனர். 
 

2013, 2015, 2017 என ஒரு வருடம் விட்டு ஒரு வருடம் மும்பை அணி கோப்பையை வென்றது. இதனால் இந்த வருடமும் கோப்பையை வெல்லும் என சமூக வலைத்தளங்களில் சில மும்பை அணியின் ரசிகர்கள் கூறி வருகின்றனர். 3 முறை ஐ.பி.எல். கோப்பை, 2 முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பை வென்று டாப் அணியாக வலம் வருகிறது மும்பை. ஐ.பி.எல்.லில் சென்னை மற்றும் மும்பை அணிகள் முக்கிய அணிகளாக கருதப்படுகிறது. சமூக வலைதளங்களில் அதிக ஃபாலோவர்ஸ் உள்ள அணி மும்பை இந்தியன்ஸ். 
 

ஐ.பி.எல். தொடர்களின் தொடக்கத்தில் ஒரு சில தொடர்களில் சற்று ஏமாற்றம் அளித்து வந்த மும்பை அணி பின்னர் சிறப்பான அணியாக உருவெடுத்து 3 முறை கோப்பையை வென்றுள்ளது. சென்னை மற்றும் மும்பை அணிகள் இதுவரை 23 போட்டிகளில் சந்தித்த நிலையில் மும்பை அணி 12 போட்டிகளிலும், சென்னை அணி 11 போட்டிகளிலும் வென்றுள்ளது. சென்னை அணியை அதிக முறை வீழ்த்தியுள்ள ஒரே அணி மும்பை அணி மட்டுமே. 

 

mi vs csk

 

கடந்த ஆண்டு மும்பை அணியின் காம்பிநேசனில் நடந்த ஒரு சில தவறுகளால் சில போட்டிகளில் தோல்வி அடைந்து ப்ளே ஃஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போனது. இந்த ஆண்டு அந்த தவறுகளை சரிசெய்து நான்காவது முறை கோப்பையை வெல்லும் முனைப்புடன் களம் காண்கிறது மும்பை அணி. கேப்டன்ஷிப்பில் அசத்தி வருகிறார் ரோஹித். 
 

கடந்த இரு ஐ.பி.எல்.லிலும் ரோஹித் சர்மா ஒப்பனிங் இறங்காமல் மிடில் ஆர்டரில் களமிறங்கினார். இந்த 2 தொடர்களில் அவரது சராசரி 23.83 மட்டுமே. இந்த முறை அவர் அனைத்து போட்டிகளிலும் துவக்க வீரராக களமிறங்க உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
 

எவின் லீவிஸ், குயிண்டன் டி காக், ரோஹித் சர்மா, சூர்ய குமார் யாதவ், இஷான் கிஷன் போன்ற வீரர்களுடன் மும்பை அணியின் டாப் ஆர்டர் வலுவான பேட்டிங் வரிசையை கொண்டு பலமாகவுள்ளது. இவர்களுடன் உள்ளூர் வீரர்களான அன்மோல்பிரீத் சிங், சித்தேஷ் லாடு, ஆதித்யா தாரே ஆகியோர் பேக் அப் வீரர்களாக இருப்பார்கள். 
 

ஆல்ரவுண்டர்களான ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு, குருணல் பாண்டியா, பென் கட்டிங் ஆகியோர் ஆட்டத்தை மாற்றக்கூடிய திறமை கொண்டவர்கள். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள். லோயர் ஆர்டர் பேட்டிங்கில் அதிரடியாக ஆடக்கூடிய ஆல்ரவுண்டர்கள் அணிக்கு கூடுதல் பலமாக இருப்பார்கள்.  
 

ஸ்பின் பவுலிங்கில் மயங்க் மார்க்கண்டே, ராகுல் சஹார், ஜெயந்த் யாதவ் ஆகியோர் உள்ளனர். மேலும் குருணல் பாண்டியா ஸ்பின் பவுலிங்கில் பங்களிப்பார். ஃபாஸ்ட் பவுலிங்கை பொறுத்தவரை உலகத்தரம் வாய்ந்த டி20 பவுலரான பும்ரா எதிரணியை மிரட்டும் வகையில் நல்ல ஃபார்மில் உள்ளார். ஆடம் மில்னே, மிட்செல் மெக்லீனஹன், ஜேசன் பெஹ்ரன்டார்ப், மலிங்கா, ரஷிக் சலாம், பரிந்தர்  சரண் என ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் மிகவும் வலுவாக உள்ளது.  
 

யுவராஜ் சிங்கை மும்பை அணி எந்த ரோலில் பயன்படுத்த உள்ளது என்பதை ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர். மும்பை அணியின் பயிற்சியாளராக ஜெயவர்தனே, பேட்டிங் பயிற்சியாளராக ராபின் சிங், பவுலிங் பயிற்சியாளராக ஷேன் பான்ட், பீல்டிங் பயிற்சியாளராக ஜெம்ஸ் பம்மென்ட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் உள்ள 25 வீரர்களில் 17 இந்திய வீரர்கள், 8 வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர். 
 

ஐ.பி.எல். தொடர் முடிந்தவுடன் உலகக்கோப்பை தொடர் தொடங்கவுள்ள நிலையில் பேட்டிங்கில் முக்கிய வீரர்களான  எவின் லீவிஸ், குயிண்டன் டி காக் ஆகியோர் தொடர் முழுவதும் விளையாடுவது சந்தேகம் தான். அதேபோல பும்ரா, ஆடம் மில்னே, ஜேசன் பெஹ்ரன்டார்ப் ஆகிய முக்கிய வீரர்கள் தொடரில் முழுவதும் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் குறைவாக கருதப்படுகிறது.  
 

ஸ்பின் பவுலிங்கில் குருணல் பாண்டியா, மயங்க் மார்க்கண்டே ஆகியோர் மட்டுமே ஓரளவு நம்பிக்கை தருவார்கள். ஸ்பெஷல் ஸ்பின்னர்கள் இல்லாததும், அனுபவம் இல்லாத ஸ்பின்னர்கள் இருப்பதும் அணிக்கு பலவீனமாக அமையும். சென்ற வருடமும் மும்பை அணிக்கு இதே பலவீனம் இருந்தது. 
 

முஸ்டாபிஸூர் ரஹ்மான், பாட் கம்மின்ஸ், அகிலா தனஞ்ஜெயா, டுமினி, சவுரப் திவாரி, பிரதீப் சங்வான் ஆகிய வீரர்களை விடுவித்து டி காக், யுவராஜ் சிங், பரிந்தர் சரண், லஷித் மலிங்கா ஆகியோரை இந்த ஆண்டு புதிதாக எடுத்துள்ளனர். 

 

பலம்: 

வலுவான தொடக்க இணை மற்றும் மிடில் ஆர்டர் பேட்டிங்.

உலகத்தரம் வாய்ந்த ஃபாஸ்ட் பவுலர்கள்.

சிறந்த ஆல்ரவுண்டர்கள். 

 

பலவீனம்:

ஸ்பின் பவுலிங் யூனிட். 

தொடர் முழுவதும் முக்கிய வீரர்கள் விளையாடுவது சந்தேகம்.

பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியாவுக்கு பேக் அப் இந்திய வீரர்கள் இல்லாதது.
 

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் விவரம்:
 

ரோஹித் சர்மா(கேப்டன்), ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, குருணல் பாண்டியா, சூர்ய குமார் யாதவ், இஷான் கிஷன், யுவராஜ் சிங், லஷித் மலிங்கா, எவின் லீவிஸ், குயிண்டன் டி காக், பொலார்டு, பென் கட்டிங், ஆடம் மில்னே, மிட்செல் மெக்லீனஹன், ஜேசன் பெஹ்ரன்டார்ப், ஆதித்யா தாரே, மயங்க் மார்க்கண்டே, ஜெயந்த் யாதவ், பரிந்தர் சரண், ராகுல் சஹார், அன்மோல்பிரீத் சிங், சித்தேஷ் லாடு, பங்கஜ் ஜெய்ஷ்வால், அனுகுல் ராய்,  ரஷிக் சலாம்.