இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இருபது ஓவர் உலகக்கோப்பை போட்டி கடந்த ஞாயிற்றுக் கிழமை (24.10.2021) நடைபெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி, அபார வெற்றி பெற்றது. உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்துவது இதுவே முதன்முறையாகும். இந்தச்சூழலில் இந்தியாவின் தோல்வியையடுத்து, இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை, ஒரு தரப்பினர் சமூகவலைதளங்களில் கடுமையாக வசை பாடி வருகின்றனர். அதேநேரத்தில் ரசிகர்கள், முன்னாள் மற்றும் இன்னாள் கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் ஷமிக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினர்.
அதேசமயம் இந்திய அணியின் கேப்டனான விராட் கோலியும் ஷமி மீதான சமூகவலைதள தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என இணையவாசிகள் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் முகமது ஷமி மீதான சமூகவலைதள தாக்குதல் குறித்து விராட் கோலி, ஷமியை வசைபாடியவர்களைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
இந்தியா-நியூசிலாந்துக்கு அணிகள் நாளை மோதும் நிலையில், போட்டிக்கு முன்னதான செய்தியாளர் சந்திப்பில் விராட் கூறியுள்ளதாவது; நாங்கள் களத்தில் விளையாடுவதற்கு ஒரு நல்ல காரணம் இருக்கிறது. சமூக ஊடகங்களில் உள்ள சில முதுகெலும்பற்றவர்கள் அல்ல நாங்கள். அவர்களுக்கு நேரில் எந்தவொரு தனிநபருடனும் தைரியம் இல்லை. அதைச் செய்வதற்கு அவர்களுக்குத் தைரியமோ அல்லது முதுகுத் தண்டோ இல்லை.
மதத்தின் அடிப்படையில் ஒருவரைத் தாக்குவது ஒரு மனிதன் செய்யக்கூடிய மிகவும் பரிதாபகரமான விஷயம். தங்கள் கருத்தைக் கூற அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் தனிப்பட்ட முறையில், மதத்தின் அடிப்படையில் ஒருவர் மீது பாகுபாடு காட்ட நினைத்தது கூட இல்லை.
முகமது ஷமி பல போட்டிகளை இந்தியாவிற்கு வென்று கொடுத்துள்ளார் என்ற உண்மை பற்றிய புரிதல் இல்லாததால், தங்கள் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளனர். அந்த உண்மையையும், நாட்டிற்கான அவரது பற்றையும் கண்டுகொள்ளாமல் இருப்பார்களானால், அவர்கள் மீது எனது வாழ்க்கையின் ஒரு நிமிடத்தையும் வீணாக்க விரும்பவில்லை. நாங்கள் அவரை 200 சதவீதம் ஆதரிக்கிறோம். எங்கள் சகோதரத்துவத்தை அசைக்க முடியாது.