2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரானது தோனியின் கடைசி சீசனாக இருக்கலாம் என பேட்டிங்கை பார்பதற்கக்காக சி.எஸ்.கே அணியின் மூத்த வீரர் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா விளையாடும் போது அவரின் விக்கெட்டை விட்டுக்கொடுக்கச் சொல்லி ரசிகர்கள் மைதானத்தில் சத்தமிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டிருந்தனர். இதனைச் சுட்டிக் காட்டி ஜடேஜா கேள்வி எழுப்பியதற்கு சி.எஸ்.கே ரசிகர்கள் #weloveJadeja எனும் ஹேஷ்டேக்கை ட்விட்டரில் டிரெண்ட் செய்து அன்பை வெளிப்படுத்தினர்.
நேற்று நடந்த குவாலிஃபயர் 1-ல் குஜராத் அணியை எதிர்த்து களம் இறங்கிய சென்னை அணி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்கள் போனாலும் ஜடேஜா பேட்டிங்கில் 16 பந்தில் 22 ரன்களை எடுத்திருந்தார். நேற்றைய ஆட்டத்தில் சி.எஸ்.கே.வின் சுழற்பந்து வீச்சாளர்கள் தங்கள் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், ஜடேஜா 4 ஓவர்களில் 18 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இந்தப் போட்டியில், 15 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சி.எஸ்.கே அணி 10வது முறையாக பைனலுக்கு செல்ல ஜடேஜாவின் பங்கு முக்கிய காரணமாக இருந்தது.
இப்போட்டி முடிந்ததும் பரிசளிப்பு நிகழ்வில் ஐ.பி.எல்க்கு ஸ்பான்ஸர் செய்யும் தனியார் வர்த்தக நிறுவனம் மிகவும் மதிப்புமிக்க வீரர் என்ற விருதை ஜடேஜாவுக்கு வழங்கியது. இவ்விருதினை சோசியல் மீடியாவில் பகிர்ந்து மிகவும் மதிப்புமிக்க வீரர் என நிறுவனத்திற்கு தெரிகிறது சில ரசிகர்களுக்குத் தெரியவில்லை என கிண்டலாக பதிவிட்டிருந்தார் ஜடேஜா.
இதனைத் தொடர்ந்து குவாலிஃபயர் 1-ன் வெற்றிக்குப் பிறகு சி.எஸ்.கே அணியின் முன்னாள் வீரரும் பந்துவீச்சு பயிற்சியாளருமான டுவைன் பிராவோ, சி.எஸ்.கே அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர்களுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவிற்கு ‘வேகப்பந்து வீச்சாளர்களை மட்டும் லிஸ்டில் சேர்த்து சுழற்பந்து வீச்சாளர்களை விட்டுவிட்டீர்கள்’ என ஜடேஜா மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார். ஜடேஜா முன்னதாக பதிவிட்டிருந்த ‘சில ரசிகர்களுக்குத் தெரியவில்லை’ எனும் பதிவுடன் தற்போது டுவைன் பிராவோவுக்கு எழுப்பிய கேள்வியும் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது. அதனைத் தொடர்ந்து ஜட்டுவின் ரசிகர்கள், ‘ஜடேஜாவும் சி.எஸ்.கே அணியின் தூண்’ எனப் பதிவிட்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
- கீர்த்தி